தூய லூர்து அன்னை ஆலயம், அரியலூர்
இடம் : அரியலூர், 621704
மாவட்டம்: அரியலூர்
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: ஜெயங்கொண்டம்
பங்குத்தந்தை: அருட்பணி. M. தோமினிக் சாவியோ
தொடர்பு எண்: +91 6374 665 809
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோணியார் ஆலயம், அண்ணாநகர்
2. தூய சந்தனமாதா ஆலயம், சந்தனமாதா கோயில் தெரு
3. உலக இரட்சகர் ஆலயம், பர்மா காலனி
குடும்பங்கள்: 364
அன்பியங்கள் : 11
ஞாயிறு திருப்பலி காலை 08.00 மணிக்கு
திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஆராதனை, திருப்பலி.
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபக்கொண்டாட்டம் தொடர்ந்து திருப்பலி
திருவிழா: பெப்ரவரி மாதம் 02 -ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
Map location: https://goo.gl/maps/KkrmCY97pRZo2NWB7
மண்ணின் இறையழைத்தல்கள் :
அருட்தந்தை. K. இராபர்ட், கும்பகோணம் மறைமாவட்டம்
அருட்தந்தை. A. அமல் மகிமை ராஜ், சேலம் மறைமாவட்டம்
மற்றும் பல அருட்சகோதரிகளையும் மறைப்பணிக்கு தந்துள்ளது அரியலூர் தலத்திருச்சபை.
வரலாறு:
92 ஆண்டுகளைக் கடந்து அருள் பாலிக்கும் அரியலூர் அற்புத புனித லூர்து மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்...
திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் மேற்கில், வெள்ளாாற்றுக்கு தெற்கே, கொள்ளிடகரைக்கு வடக்கில், அடர்த்தியான மக்கள் தொகையுடன் 40 சதுர கிலோ மீட்டர் அளவில் சிதறி கிடக்கும் கிராமங்களும், பட்டி தொட்டிகளும் உள்ளடக்கிய பங்கு தான் அரியலூர் அற்புத லூர்து அன்னை ஆலய பங்கு.
ஓரியூரில் தலை வெட்டுண்டு வேத சாட்சியாக மரித்த, இயேசு சபை குருவும் புனிதருமான ஜான் தி பிரிட்டோ (புனித அருளானந்தர்) அவர்களுடைய மறைபரப்பு பணியினால், இப்பகுதி மக்கள் இயேசுவை அறிய வந்தனர்.
அதன்பிறகு திருக்காவலூர் கலம்பகம், தேம்பாவணி போன்ற காப்பியங்களை இயற்றிய ஜோசப் பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவரினுடைய நற்செய்தியால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்துவை தொடர்ந்து பற்றி கொண்டு வாழ ஆரம்பித்தனர்.
1930 ஆம் ஆண்டு வரை அரியலூர், கோக்குடி பங்கின் கண்காணிப்பில் இருந்தது. அதன் பின்னர் 1930 இல் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி. ரார்த்தினே அடிகளார் அவர்களால் நாட்டு ஓடுகள் வேயப்பட்ட ஒரு சிறுவீடும், அதோடு இணைந்த சில நிலப்பகுதியும் வாங்கப்பட்டது.
1930 முதல் 1933 ஆம் ஆண்டு வரை முதல் பங்கு தந்தையாக பணியாற்றியவர் அருட்பணி. ஏ. தாவீது அடிகளார்.
அருட்பணி. ஜே. எஸ். லூர்துசாமி அடிகளார் 1933 முதல் 1935 வரை பங்கு தந்தையாக பணியாற்றினார். இவருக்கு உதவியாக பாளையங்கோட்டை இயேசுவின் திரு இருதய சபையை சேர்ந்த சகோதரர் தேவநேசனும் இணைந்து பணிபுரிந்தார்.
அந்நாட்களில் அரியலூர் வீதிகளில் மக்களுக்கு மருத்துவம் செய்து, பேருதவி புரிந்து வந்தார். மேலும் இப்பகுதி வாழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய, 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15 ஆம் நாள் ஒரு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அதுதான் அரியலூரில் இன்று மிளிர்ந்து கொண்டிருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் முன்னோடி.
அன்னைக்கு ஒரு தேர்:
1934 ஆம் ஆண்டு மே திங்கள் 24ஆம் புனித லூர்து அன்னைக்கு என்று அழகிய தேர் நிறுவப்பட்டது. அன்னையின் இந்த அழகிய தேர் அரியலூர் வீதிகளில் எல்லா மதங்களை சார்ந்தவர்களுக்கும் இறை ஆசீர் அளிக்கும் வண்ணம் வீதி உலா வந்தது. இந்த அழகிய தேர் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்கள் பொன்மலை இறைமக்கள்.
அருள்தந்தை. இக்னேசியஸ் அடிகளார் 1936 முதல் 1943 மற்றும் 1963 முதல் 1965 வரை பணியாற்றினார் . இவர்கள் காலத்தில் பல கிராமங்களுக்கு நடைப்பயணமாகவே பல கிலோமீட்டர் தூரம் பயணம் சென்று, நல்வாழ்வு வாழ தேவையான கல்வி, மருத்துவ அறிவு அனைத்தையும் பரப்பினார்.
புனித லூர்து அன்னை ஆலயம் உருவான வரலாறு:
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறு கிராமம் வல்லம். இக்கிராமத்தில் பிறந்தவர் தான் இறைவன் மீது மிகுந்த விசுவாசம் கொண்ட திரு. பி.கே. ஆரோக்கிய சாமி அவர்கள். கடலை அரைக்கும் சிறு தொழிற்சாலையை இன்றைய அரியலூர் புகைவண்டி நிலையத்தின் அருகில் அமைத்து நடத்தி வந்தார். ஈட்டிய பொருளை இல்லாதோர்க்கு கொடுக்கக்கூடிய தாராளமான மனம் படைத்தவராக விளங்கினார். எனவே தனது ஆலையில் எப்போதும் நிரந்தரமாக உண்டியல் ஒன்று வைத்திருப்பார். அந்த உண்டியலின் பெயர் மாதா உண்டியல். அரவைக்கு வரும் அனைவரும் இந்த உண்டியலில் மாதாவுக்கு என்று தானம் செய்ய ஆரம்பித்தார்கள்.
அப்போது பங்கு தந்தையாக அருள்திரு. ஏ. விக்னேஷ் அடிகளார் பணியாற்றி வந்தார். இவருக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்கிற தீராத தாகம் இருந்தது. எனவே திரு. பி.கே ஆரோக்கிய சாமி அவர்கள் தனது உண்டியல் சேமிப்பை, ஆலய கட்டுமான பணிக்கு என்று கொடுப்பதகாக அருள் தந்தையிடம் வாக்குறுதி அளித்தார். அதன்படி 11.02.1936 இல் குடந்தை மறைமாவட்டத்தின் முதல் இந்திய ஆயர் மேதகு பீட்டர் பிரான்சிஸ் ஆண்டகை அவர்களால், அரியலூர் தூய லூர்தன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பெருவிழாவிற்கு அரியலூர் பகுதியையும், தான் அதிகம் பெற்றிருந்த உடையார்பாளையம் ஜமீன்தார் தனது பரிவாரம் சூழ செயலரை அனுப்பி வைத்து மரியாதை செய்தார். அரியலூர் பகுதி சைவர்களும், வைணவர்களும், இஸ்லாமிய சமய ஆன்றோர்கள், சான்றோர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை புரிந்து விழாவினை சிறப்பித்து பெருமைப்படுத்தினார்கள்.
இனம், மொழி, சமயம் அனைத்தும் கடந்த அன்னையின் அற்புத ஆலயம் உருவாக திருவிழா கண்டது அரியலூர்.
புனித லூர்து அன்னை மகிமை பெற்ற சுரூபம்:
பிரான்ஸ் நாட்டிலிருந்து அயல்நாட்டு வேத போதகர் சபையினரால் தமிழகத்திற்கு மூன்று சுரூபங்கள் கொண்டுவரப்பட, ஒன்று திருக்காட்டுப்பள்ளி பூண்டி புதுமை மாதாவாக, இரண்டு சேத்துப்பட்டு திருத்தல மாதாவாக, மூன்றாவது அரியலூரில் புனித லூர்து அன்னையாக அச்சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் வந்திறங்கிய லூர்து அன்னையின் சுரூபம் நகரின் அனைத்து தெருக்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. சமய, இன பாகுபாடின்றி அனைவரும் அன்னையின் சுரூபத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
இன்று பீடத்தில் வீற்றிருக்கும் அன்னையின் சுரூபம் 1870 ஆம் ஆண்டு முதல் 26.04.1944 வரையிலும் பங்கு மன்றத்தின் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட இன்றைய ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது. கோயிலின் மேடையில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு செய்தி இதை விளக்குகிறது.
அருட்தந்தை. ராயப்பர் அடிகளார் 1943 முதல் 59 வரை பணி செய்தார்கள். இவர்கள் காலத்தில் தான் திவ்ய நற்கருணை பழைய ஆலயத்தில் வைக்கப்பட்டது. திருப்பலி பீடம் அமைக்கப்பட்டது. மேலும் தூய மேரி நடுநிலைப்பள்ளி, தூய தெரசாள் துவக்கப்பள்ளி, தூய நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி மற்றும் கல்லறை தோட்டம் அனைத்தும் நிறுவப்பட்டன.
அருள்தந்தை. ஞாநிநாதர் அவர்கள் மற்றும் அருள்தந்தை அற்புத சாமி அடிகளார் காலத்தில், திருச்சி புனித அன்னாள் சபை சகோதரிகள் மறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள அரியலூர் பங்கு பள்ளிகளில் பணி செய்ய வரவழைக்கப்பட்டனர்.
நிர்மலா பெண்கள் உயர்நிலைப்பள்ளி 22.06.1962 முதல் துவங்கி 1978 -79 ஆம் கல்வி ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.
அருள்தந்தை. ஐ. அந்தோணி ஜோசப் அடிகளார் 1969 -73 வரை பணி செய்தார். இவர்கள் காலத்தில் அன்னையின் திருவிழா சிறப்பாக நடைபெற பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அரசு கலைக் கல்லூரிக்கு பின்பகுதியில் நிலங்கள், செந்துறை சாலையில் நிலங்கள் அன்னையின் ஆலயத்திற்கு என்று வாங்கப்பட்டன.
அருள்திரு. எம்.ஏ. செபஸ்டியான் அடிகளார் 1973 முதல் 82 வரை பணி செய்தார்கள் பங்கின் இன்றைய வளர்ச்சிக்கு அடிகோலிட்டவர்கள் அருள்தந்தை ஆவார். இவர்கள் காலத்தில் தான் பங்கு தந்தை இல்லம் புதிதாக உருவானது. மேலும் வாடகை வீடுகள் மற்றும் வாடகை கடைகள் உருவாயின. பல்வேறு இடங்களில் ஆலயத்திற்கு நிலங்களும் வாங்கப்பட்டன. பள்ளிகள் எல்லாம் சீரமைக்கப்பட்டன.
அருள்திரு. ஆர். அந்தோணிசாமி அடிகளார் 1982 முதல் 86 வரை பணி செய்தார்கள். இறை மக்களை ஆன்மீகப் பாதையில் கொண்டு செல்ல பெரும் பங்காற்றினார். வாடகை கடைகளும் கட்டப்பட்டன.
அருள்தந்தை. சி. பீட்டர் பிரான்சிஸ் அடிகளார் அவர்கள் 1986 முதல் 88 வரை பணி செய்தார்கள். பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி அன்னையின் பழைய ஆலயத்தின் பின்புறம் உள்ள லூர்து நகரை போன்ற மலை சிகர அமைப்பை திரு. ஆரோக்கிய சாமி அவர்களுடைய உதவியோடு, திருச்சி அரியலூர் முக்கியசாலையில் அற்புதமாக உருவாக்கினார்கள்.
அருள்திரு. சந்தியாகு அடிகளார் 1988 முதல் 1993 வரை பணியாற்றினார். இவரது காலத்தில்தான் அன்னையின் திருவுருவக்கோடி பட்டொளி வீசி பறக்க ஒரு கொடிமரம் உருவாக்கப்பட்டது. மேலும் அண்ணா நகர் புனித அந்தோனியார் ஆலயமும் நிறுவப்பட்டது.
அருள்திரு. எஸ்.ஏ. சின்னப்பன் அடிகளார் 1993 முதல் 1994 வரை பணி செய்தார்கள். பழைய ஆலயத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடி, அதன் நினைவாக தூய மேரி நடுநிலை பள்ளிக்கு புதிய கட்டிடமும் கட்டி திறந்தார்கள்.
அருள்திரு. அந்துவான் அடிகளார் 1994 முதல் 1996 வரை பணியாற்றினார்கள். அவரது வெண்கல குரலால் ஆலய வழிபாட்டுக்கு வரும் இறை மக்களை ஈர்த்து, அனைத்து தரப்பு மக்களிடமும் பாசமுடன் பழகி பங்கை கட்டி எழுப்பினார்கள்.
அருள்தந்தை. ஏ. மாரிதாஸ் அடிகளார் 1996 முதல் 2002 வரை பங்கு தந்தையாக பணியாற்றினார்கள். இவர்கள் காலத்தில் தான் நடுநிலைப் பள்ளியாக இருந்த புனித மரியன்னை பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. மேலும் பங்கு மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.
அருள்தந்தை A. வின்சென்ட் அடிகளார் 2002 முதல் 2007 வரை பங்கு தந்தையாக பணியாற்றினார் . இவர்கள் காலத்தில் தரம் உயர்த்தப்பட்ட தூய மேரி உயர்நிலைப் பள்ளிக்கு மிக பெரிய மூன்று மாடி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. புதிய ஆலயம் கட்டுவதற்கான முன் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அருள்தந்தை. ஆர். எஸ் அந்தோணி சாமி அடிகளார் 2007 முதல் 2013 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்கள். புதிய ஆலயம் கட்டுவதற்காக முழு முயற்சி எடுத்து, அயராது உழைத்ததோடல்லாமல், அதை கட்டி முடிக்கும் வரை அரும்பாடு பட்டார். பள்ளிகளின் தரத்தை உயர்த்தினார்.
அருள்தந்தை. D. அந்தோணி சாலமோன் அடிகளார் அவர்கள் 2013 முதல் 2019 வரை பங்கு தந்தையாக பணியாற்றினார்கள் இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் அழகிய முகப்போடும் எழில் மிகுந்த பீட அலங்காரத்தோடும் சீரும் சிறப்புமாக முடிக்கப்பட்டது. 27.09.2015 அன்று குடந்தை ஆயர் மேதகு அந்தோணி சாமி அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. எழில் மிகுந்த கொடி மரமும் நிறுவப்பட்டது. கிளைப்பங்குகளான புனித அந்தோனியார் ஆலயம், உலக ரட்சகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டன.
அருள்தந்தை. எம். தோமினிக் சாவியோ அவர்கள் 2019 ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். பணியேற்ற மூன்று மாத காலத்தில் புனித அன்னாள் ஆலயத்தை புதுப்பித்தார். தூய மேரி உயர்நிலைப்பள்ளி முகப்பை அழகுபடுத்தி பாதசாரிகள் நடக்க நடைமேடை அமைத்தும்; பங்குத்தந்தை
இல்லத்துக்கருகில் தாபோர் மலை, தாபோர் கோபுரம், இயேசுவின் திரு இருதய தூண், தமிழ் தூண், புது பிறப்பின் தூண், மற்றும் மைக்கேல் அதிதூதர் எழில் தூண் ஆகியவற்றை அமைத்து, பள்ளியின் சூழலையும் வளாகத்தின் சூழலையும் படிப்பதற்கும் பயணிப்பதற்கும் செபிப்பதற்கும் ஏற்றதாக மாற்றினார்.
சிறந்த பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பதனால் ஒவ்வொரு திருவிழாவின் பொழுதும் அன்னைக்கு திருப்பலி பாடல்கள் அவராகவே இசையமைத்து, மக்கள் ஏராளமாக திருப்பலியில் ஒன்றிக்க அரும்பாடுபட்டு வருகிறார். பங்கில் உள்ள மறை மாவட்ட நிலங்களை எல்லாம் சீர்படுத்தி, ஆவணப்படுத்தி மறை மாவட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு நல்கி அனைத்து மக்களையும் மதம், இனம் கடந்து ஒருங்கிணைத்து நடத்திச் செல்வதிலும் முனைப்பு காட்டி வருகிறார். பங்கு மன்றத்தை புதுப்பித்து, பள்ளி மாணவர்கள் அதை பயன்படுத்தும் வண்ணமும் பொது நிகழ்வுகள் உதாரணமாக விழிப்புணர்வு முகாம்கள் நகராட்சி நடத்தும் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் நடத்தும் விதத்தில் அமைத்திருக்கிறார்.
அரியலூர் புனித லூர்து அன்னை கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சொந்தமானவரல்ல...
இஸ்லாமிய, சைவ, வைணவ சமயம் சார்ந்த மக்களின் அன்னையின் மீதான ஈடுபாடு எழுத்துக்களால் எழுத முடியாதது. அவர்கள் அன்னை மீது காட்டும் பக்தியும் அதற்காக அவர்கள் செய்யும் பொருளாதார உதவிகளும் எண்ணிலடங்காதவை போற்றுதலுக்குரியவை.
வாழ்க அரியலூர் மக்கள் !
வளர்க மனித நேயம் !!
ஓங்குக சமய நல்லிணக்கம்!!!
பங்கில் உள்ள சபைகள், இயக்கங்கள்:
1. புனித லூர்து அன்னை இளைஞர் இயக்கம்
2. புனித தோமினிக் சாவியோ பீட சிறுவர் சிறுமியர் இயக்கம்
3. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்
4. மாத சபை
5. மரியாயின் சேனை
6. இயேசுவின் திரு இருதய சபை.
பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:
1. புனித மரியன்னை துவக்கப்பள்ளி
2. புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி
3. ஆர்.சி புனித தெரசாள் துவக்கப்பள்ளி
4. ஆர்.சி நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி
வழித்தடம்:
இரயில்: சென்னை -திருச்சி - அரியலூர்
திருச்சி -பெரம்பலூர் -அரியலூர்
திருச்சி -கீழப்பழுவூர் -அரியலூர்
வேளாங்கண்ணி -தஞ்சாவூர் -அரியலூர்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.