தூய அலங்கார அன்னை பேராலயம்

இடம் : வரதராசன்பேட்டை

மாவட்டம் : அரியலூர்
மறை மாவட்டம் : கும்பகோணம்
மறை வட்டம் : ஜெயங்கொண்டம்

பங்குத்தந்தை & அதிபர் : அருட்பணி. L. வின்சென்ட் ரோச் மாணிக்கம்

உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி. அருள் பிலவேந்திரன்

சலேத் மாதா திருத்தல துணை அதிபர் : அருட்பணி. J. M. ஜோமிக்ஸ் சாவியோ

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித சலேத் மாதா திருத்தலம், கண்டியங்குப்பம்
2. புனித வனத்து அந்தோணியார் ஆலயம், மணக்கொல்லை
3. புனித அந்தோணியார், வேதண்டாங்குளம்
4. புனித அருளானந்தர் ஆலயம், அந்தோணியார்புரம்.

குடும்பங்கள் : 2350 +
அன்பியங்கள் : 67

ஞாயிற்றுக்கிழமை
காலை 06.00 மணி : திவ்ய நற்கருணை ஆசீர், 06.30 மணிக்கு திருப்பலி
காலை 09.00 மணிக்கு : திருப்பலி
மாலை 05.30 மணிக்கு : திருப்பலி.

வார நாட்கள்
காலை 05.30 மணி : திவ்ய நற்கருணை ஆசீர்
காலை 06.00 மணி : திருப்பலி

2 வது செவ்வாய்க்கிழமை :
மாலை 06.30 மணி : பழைய ஆலயத்தில் அருங்கொடை செப திருப்பலி.

2 வது சனிக்கிழமை :
மாலை 06.30 மணி : ஆரோக்கியம்மாள் கல்லறையில் திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் 29 -ஆம் தேதி கொடியேற்றம்.
செப்டம்பர் 07 -ஆம் தேதி தேர்பவனி.
செப்டம்பர் 08 -ஆம் தேதி பெருவிழா.

Location map : Alangara Annai church Varadarajanpettai, Tamil Nadu 621805
https://maps.app.goo.gl/sbxuNBwmPtHZApZGA

வரலாறு :

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் என்னும் மூன்று மாவட்டங்களின் சந்திப்பிலும், தற்போது அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள அழகான ஊர் தான் வரதராசன்பேட்டை. இவ்வூரின் பழைய பெயர் அய்யம்பேட்டை ஆகும்.

வரதராசன்பேட்டை :
சோழர்களின் ஆட்சி காலத்தில் பிராமணர்களுக்கு ஏராளமான நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அவைகள் பிரம்ம தேயங்கள் எனப்படும்.
அவ்வாறு பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டவை இன்றைய வரதராசன்பேட்டை, தென்னூர் பகுதிகள் ஆகும். இவை அக்காலத்தில் அய்யங்காணி என அழைக்கப்பட்டன. எவரும் இப்பகுதியில் குடியிருக்கவோ, வேளாண்மைத் தொழில் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. மேலும் இவை மேட்டு நிலங்களாக இருந்ததால் பிராமணர் களும் இந்த நிலங்களைக் குறித்து கவனம் கொள்ளவில்லை.

சோழர்கள் ஆட்சிக்குப் பின்னர் 1450 ஆம் ஆண்டில் நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் உடையார்பாளையம் அரசு தோற்றுவிக்கப் பட்டு, அய்யங்காணிகள் எல்லாம் இந்த அரசின் கீழ் வந்தன.

உடையார்பாளையம் அரசின் கிழக்கு எல்லையாக இன்றைய அந்தோணியார் புரம் பகுதியின் தென்வடல் தெரு அமைந்தது. அதற்கு கிழக்கே காடாக இருந்த பகுதிகள் ஆற்காடு நவாப் ன் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்தோனியார்புரம் பகுதிக்கு கிழக்கே குடியிருப்புகளற்ற 'கொழை' என்ற பகுதியில் இரண்டு அரசுகளும் சுங்கச்சாவடிகள் அமைத்துக் கொண்டன.

உடையார்பாளையம் அரசு காஞ்சியிலிருந்து நெசவாளர்களை அழைத்து வந்து குடியமர்த்தினார்கள். அவர்கள் கைக்கோள ர்கள் எனப்பட்டனர். இவர்கள் நெய்து கொடுத்த துணிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் துணிகளை விற்பனை செய்ய சந்தை (பேட்டை) ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறாக அய்யங்காணி சந்தை அய்யம்பேட்டையானது.

துணிச்சந்தை கைக்கோளர்களுடன், போர்த்துக்கீசியர்கள் வாணிப உறவை ஏற்படுத்தி, பறங்கிப்பேட்டையில் பண்டகசாலை அமைத்துக் கொண்டு, துணிகளை வாங்கி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து பெரும் பொருளீட்டினர்.

கிறிஸ்தவம் துளிர் விடல் :

கி.பி 1585 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பறங்கிப்பேட்டை துறைமுகம் புகழ் பெற்று விளங்கியது. ஒவ்வொரு போர்த்துகீசிய வணிகக் குழுவிலும் 50 முதல் 100 நபர்கள் வரை இருந்ததால், இவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு, ஒவ்வொரு குழுவிலும் ஒரு பிரான்சிஸ்கன் துறவி இருந்தார். போர்த்துகீசிய வணிகர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்ற துறவிகள், பலரை கிறிஸ்தவ சமயம் தழுவச் செய்தனர். இவ்வாறாக அய்யம்பேட்டைக்கு வந்த பிரான்சிஸ்கன் துறவி (அருட்தந்தை. நிக்கோலஸ் பெமந்தா என கருதப் படுகிறது) ஒருவரால் இப்பகுதியில் கிறிஸ்துவத்தின் வித்து ஊன்றப் பட்டது.

1585 -1600 காலகட்டத்தில் அருட்தந்தை பிரான்சிஸ்கோ ஓரியந்தோ அவர்கள் அய்யம்பேட்டையில் பலரை கிறிஸ்தவராக்கினார்.

1607 ஆம் ஆண்டில் இயேசு சபை குருக்கள், பிரான்சிஸ்கன் துறவிகளை பறங்கிப்பேட்டையிலிருந்து வெளியேற்றினர். பிரான்சிஸ்கன் துறவிகள் நாகப்பட்டினம் சென்றனர். இதனால், அய்யம்பேட்டை கிறிஸ்துவர்களுக்கு சரியான மேய்ப்பர்கள் இல்லாது போயினர். பிரான்சிஸ்கன் துறவிகளை வெளியேற்றிய இயேசு சபை துறவிகளோடு அய்யம்பேட்டை மக்கள் இணைந்து போக மறுத்தனர்.

கி.பி 1672 ஆம் ஆண்டில் ஜான் டி பிரிட்டோ (புனித அருளானந்தர்) மற்றும் ஆந்திரே பிரேயர் ஆகியோரின் முயற்சியால் நிலையான கிறிஸ்தவ குடியிருப்பு ஒன்று கொழை -யில் நிறுவப்பட்டது. கொழைக்கு மேற்கேயுள்ள பகுதிகளில் பழைய கிறிஸ்தவர்கள் (பிரான்சிஸ்கன் சபை குருக்களால் கிறிஸ்தவம் தழுவியவர்கள்) வாழ்ந்து வந்தனர். இவர்களை ஒருங்கிணைக்க இயேசு சபை குருவான ஜான் டி பிரிட்டோ முயன்றும், ஒத்துழைப்பு கிடைக்காமல் போகவே அடுத்த சில ஆண்டுகளில் கும்பகோணம் பகுதிகளுக்கு சென்றார்.

இவ்வாறு 1600 முதல் 1700 வரையிலான காலகட்டத்தில் இவ்விரு பிரிவு கிறிஸ்தவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படவில்லை. கொழையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அய்யம்பேட்டையை விட பெருகியிருந்தது.

இதனிடையே மதுரை பிரிவை இயேசு சபையினர் உருவாக்கி, 1710 ஆம் ஆண்டு இந்தியா வந்த வீரமாமுனிவர் (ஜோசப் கான்ஸ்டான்டின் பெஸ்கி) அவர்களை அய்யம்பேட்டை க்கு அனுப்பி வைக்க, இரு பிரிவு கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைத்தார். அய்யம்பேட்டையை பங்குத்தளமாக அறிவித்து, ஆலய மற்றும் சமய சடங்குகளை ஆற்றவும் ஊர் நடைமுறைகளை ஒழுங்கு படுத்தவும் கூடுதலான பொறுப்புகளை (நாட்டார்) கொழை மக்களுக்கு அளித்தார்.

இவ்வாறு அய்யம்பேட்டையின் (வரதராசன்பேட்டை) முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. வீரமாமுனிவர் பொறுப்பேற்று ஆற்காடு நவாப் ன் உதவியுடன் காரை, கடுக்காய், சுண்ணாம்பு கலவையில் கி.பி 1711 ஆம் ஆண்டில் ஆலயம் ஒன்றைக் கட்டினார் . அருகே உள்ள ஊர்களில் பணிபுரிந்து வந்த போதும் அய்யம்பேட்டை வீரமாமுனிவரின் கண்காணிப்பில் கி.பி 1717 முதல் கி.பி 1742 வரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கி.பி 1774 ல் திருத்தந்தை இயேசு சபையை தடை செய்யவே, தமிழக இயேசு சபையினர் பணியாற்றிய இடங்கள் அனைத்தும் பிரான்சிலிருந்து வந்து பாரீஸ் சமய குருக்களிடம் ஒப்படைக்க ஆணையிட்டார். இந்த ஆணையால் அதிர்ந்து போன அய்யம்பேட்டை மக்கள், தங்களது வழிகாட்டிகளான இயேசு சபை குருக்களை இழக்க மனமின்றி, இயேசு சபை குருக்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். பலமுறை முயன்றும் அய்யம்பேட்டை மக்கள், பிரான்சின் பாரீஸ் சமய குருக்களை ஏற்க மறுத்தனர்.

இதன்பின் இறுதியாக அய்யம்பேட்டை -க்கு மாற்றாக தென்னூர் என்ற புதிய பணித்தளத்தை உருவாக்கி, திருச்சபையின் அனைத்து உதவிகளும் தென்னூருக்கே வழங்கப் பட்டன.

இறுதியாக திருத்தந்தை, போர்த்துக்கீசிய மன்னரின் ஒப்பந்தப்படி 1884 ஆம் ஆண்டில் இயேசு சபை குருவான ஜோசப் வோ என்பவர் திரும்பப் பெறப்பட்டு, புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்ட பேராலயத்துடன் அய்யம்பேட்டை (வரதராசன்பேட்டை) இணைக்கப் பட்டது. இதன் பின்னர் கி.பி 1909 ஆம் ஆண்டு புதிய பேராலயம் அய்யம்பேட்டையில் கட்டப்பட்டு, 2010 ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். மத்தேயு 28:19

மண்ணின் இறையழைத்தல்களாக 87 அருட்பணியாளர்களையும், 400 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும் கொண்டு கும்பகோணம் மறை மாவட்டத்தின் தலைசிறந்த பங்காக அய்யம்பேட்டை (வரதராசன்பேட்டை) திகழ்கின்றது.
புதுமைகள் நிறைந்த அற்புத ஆரோக்கிய அம்மாள் கல்லறை ஆலயம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

வாசகப்பா என்னும் கிறிஸ்தவ நாடகக் காவியம் சிறப்பாக நடை பெறுகிறது.

வரதராசன்பேட்டையின் கல்விக் கூடங்கள், நிறுவனங்கள் :

மாதா இருதய மடம் : 15.08.1905 அன்று மாசற்ற திருஇருதய அருட்சகோதரிகள் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.

புனித இராபாயேல் மருத்துவமனை :

புனித இராபாயேல் தொடக்கப்பள்ளி :

புனித மரியாள் தொடக்கப்பள்ளி :

தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி :

அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி :

ஞானம்மாள் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி : மாதவரம் அன்னாள் சபை அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

தூய அலங்கார அன்னையின் வழியாக எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வருவதால் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து ஜெபித்து அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.