புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பனையபுரம்
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
மறைமாவட்டம் : கும்பகோணம்
மறைவட்டம் : இலால்குடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்
பங்குத்தந்தை : அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை
இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. இ. டேனியல் தயாபரன், கப்புச்சின் சபை
குடும்பங்கள் : 36
அன்பியங்கள் : 2
(புனித ஆரோக்கிய அன்னை, புனித வனத்து சின்னப்பர்)
திருப்பலி : இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மாலை 07.30 மணிக்கு.
திருவிழாக்கள் :
ஆலயத் திருவிழா : மே நான்காம் வாரம்
இதர விழாக்கள் : புனித வனத்து சின்னப்பர் (ஆடி மாதம்)
வழித்தடம் : திருச்சி சத்திரம் -கல்லணை.
நிறுத்தம் : பனையபுரம்.
Location map : St. Arockia Annai Church Paneyapuram, Tamil Nadu 605603
https://maps.app.goo.gl/wZ6VS5c1ZysR92xTA
வரலாறு :
அமைவிடம் :
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தீவில், முற்கால சோழன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணைக்கு செல்லும் வழியில், திருவளர்ச்சோலையை அடுத்து அமைந்துள்ள பசுமைபுரம் தான் பனையபுரம். இவ்வூர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை நோக்கிய வழியில் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வடகரையில் கொள்ளிடமும், தென்கரையில் காவிரியும் பாய்ந்திட, பசுமை விரிந்திட்ட சோலையாகக் காட்சியளிக்கின்றது பனையபுரம். வாழை, நெல், தென்னை, மஞ்சள், கரும்பு போன்றவை இவ்வூரின் சிறந்த விளைச்சல்களாகும்.
பனையபுரத்தில் கிறிஸ்தவம்:
பல ஆண்டுகளாக இவ்வூரில் ஓலைக் குடிசையிலான ஒரு சிற்றாலயம் புனித ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. தேவையின் நிமித்தம் மட்டுமே இங்குள்ள மக்களுக்கு திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்கள் நிறைவேற்றப்பட்டன. அருள்பணி. வின்சென்ட் பெர்ரர் அவர்கள் பெரியவர்சீலி பங்குத்தந்தையாக இருந்த போது, அவரது முயற்சியால் தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு, அன்றைய குடந்தை ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 12.01.1995 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியவர்களாவர். நாள்தோறும் வயல்வெளிக்கு சென்று உழைக்கும் ஏழை கூலி விவசாயிகள். அன்று உழைத்தால் மட்டுமே அவர்களுக்கு உணவு என்பதும் எதார்த்தம். வெகுசிலர் நகர்ப்புற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் புனித வனத்து சின்னப்பருக்கு வேண்டுதல் திருப்பலியும், அன்னதானமும் நடைபெறுகிறது. அதுபோலவே ஆவணி மாதத்தில் வேளாங்கண்ணி க்கு திருப்பயணமாக செல்லும் திருப்பயணிகளின் முயற்சியில், புனித ஆரோக்கிய அன்னைக்கு சிறப்புத் திருப்பலியும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது.
கப்புச்சின் குருக்களின் கண்காணிப்பில் பனையபுரம்:
புதிய ஆலய அர்ச்சிப்பிற்குப் பிறகு பனையபுரம் பெரியவர்சீலி பங்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அமல ஆசிரமம் பங்கில் 1995 பிப்ரவரி 12 அன்று இணைந்தது. பனையபுரமானது அமல ஆசிரமம் பங்கில் இணைவதற்கு முன்பாகவே கப்புச்சின் குருக்கள் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக ஆன்மீகப் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அருள்பணி. பெல்லார்மின் அருள்தாஸ் பங்குத்தந்தையாக இருந்த போது, அவரது பெரும் முயற்சியால் 1998 ஆம் ஆண்டு சுவிஸ் உபகாரிகள் உதவியுடன் பனையபுரத்தில் 24 வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டன. மேலும் 200 ஆடுகளுக்கு மேல் வாங்கப்பட்டு அனைத்து கிளைக் கிராமங்களுக்கும் குடும்பத்திற்கு ஒன்று வீதம் வழங்கப் பட்டது. கப்புச்சின் இறையியல் சகோதரர்கள் வார இறுதி நாட்களில் இக்கிளை கிராமத்தில் தங்கி, மக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தி வருகின்றனர்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.