புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம்

இடம்: ஆண்டிமடம்

மாவட்டம்: அரியலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: ஜெயங்கொண்டம்

நிலை: பங்குத்தளம் (திருத்தலம்)

கிளைப்பங்குகள்:

1. புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம்

2. அற்புத குழந்தை இயேசு ஆலயம், தஞ்சாவூரான் சாவடி

3. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், புனித சவேரியார் ஆலயம், மேல நெடுவாய் 

குடும்பங்கள்: 120 (கிளைப்பங்குகள் சேர்த்து 400+)

அன்பியங்கள்: 7

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 06:00 மணி

செவ்வாய் மாலை 06:00 மணி புனித மார்ட்டின் தே போரஸ் நவநாள் திருப்பலி

திருவிழா: மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை

வழித்தடம்: ஜெயங்கொண்டம் -விருத்தாசலம் வழித்தடத்தில், ஆண்டிமடம் அமைந்துள்ளது.

Location map: St.Martin De Pores Church

https://maps.app.goo.gl/AwnepNXeNbBecGQg8

திருத்தல வரலாறு:

புனித மார்டினார் திருத்தலமானது, கூவத்தூர் புனித அந்தோனியார் ஆலயத்துடன் இணைந்து இருந்தது.

அப்போது கூவத்தூர் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. S.I. அருள்சாமி அடிகளார், ஆண்டிமடத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் திருப்பலி நிறைவேற்றி, மக்களை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் சென்றார். அப்போது ஆண்டிமடத்தில் 30-கிறிஸ்துவ குடும்பங்கள் மட்டுமே இருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் அருகாமையில் உள்ள பங்குகளிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள். ஆனால், பள்ளியில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு எதிராக எதிர்ப்பு வலுக்கவே, திருப்பலி நிறுத்தப்பட்டது. 

அப்போது ஆயராக இருந்த மேதகு பால் அருள்சாமி அவர்களின் அனுமதியோடும், உதவியோடும் ஆண்டிமடத்திலிருந்த மறைமாவட்டத்திற்கு சொந்தமான ஒரு இடத்தில், குடிசை கட்டி திருப்பலி நிகழ்த்தப்பட்டது. அந்த இடம் ஆயர் பால் அருள்சாமி அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே மறை மாவட்டத்திற்காக வாங்கப்பட்ட இடம் ஆகும்.

அருட்தந்தை. S.I. அருள்சாமி அங்கு ஒரு ஓலைக் குடிசை ஆலயம் அமைப்பதற்கு திட்டமிட்டார். அப்போது ஜெயங்கொண்டம் பங்குத்தந்தையாக இருந்த அருள்தந்தை லூயிஸ் நாதர் அடிகளிடம் இதை தெரிவித்தார். அருள்தந்தை லூயிஸ்நாதர் அடிகள், ஓட்டு கட்டிடம் கட்டுமாறும், அந்த கோவிலை மார்ட்டின் தே போரஸ் புனிதருக்கு அர்ப்பணிக்க கேட்டுக் கொண்டார். அப்படி செய்யும் பட்சத்தில் தான் நிதியுதவி கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார். அருட்பணி. S.I. அருள்சாமி அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார். பிறகு அருட்பணி. லூயிஸ் நாதர் கும்பகோணம் திருஇருதய ஆண்டவர் தொழுநோயாளர் மருத்துவமனையிலிருந்த, அருட்தந்தை B.M. ராயலு அவர்களைத் தொடர்பு கொண்டார்.

1962 -ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை 23ஆம் அருளப்பரால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டு இருந்த புனித மார்ட்டின் தே போரஸ் மீது, அருட்பணி. ராயிலு அடிகள் தனிப்பட்ட விதத்தில் பக்தி கொண்டிருந்தார். அந்த பக்தியை அவர் மற்வர்களுக்கும் பரப்புவதற்கு முயற்சி செய்தார்.

ஆண்டிமடத்தில் புனித மார்ட்டின் தே போரஸ்-க்கு ஒரு புதிய ஆலயம் கட்டப்பட உள்ளது என்று கேட்டவுடன், அருட்பணி. ராயலு அடிகள் மகிழ்ச்சியோடு அதற்கு உதவி செய்வதற்கு சம்மதித்தார். அதன்பிறகு அருட்தந்தை லூயிஸ் நாதர் கும்பகோணம் மறை மாவட்ட ஆயரை தொடர்பு கொண்டு, மூன்று பரிந்துரைகளுக்கு உட்பட்டு ஆலயம் கட்ட சம்மதம் கேட்டார்.

1. ஆலயம் புனித மார்ட்டின் தே போரஸ்க்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

2. ஆயரிடமிருந்து எந்த பண உதவியும் கேட்கப்படாது.

3. ஆலயம் கட்டும் பணி கூவத்தூர் பங்குத்தந்தையின் மேற்பார்வையில் நடைபெறும்.

14.05.1983 அன்று அப்போதைய முதன்மை குரு பேரருட்தந்தை M. அந்தோணி டேவிட் அவர்கள், அருட்பணி. லூயிஸ் நாதரை சந்தித்து ஆயரின் 12.05.1983 உத்தரவு கடிதத்தை கொடுத்தார். அதில் "கூவத்தூர் பங்குத்தந்தை அருட்பணி. S.I . அருள்சாமி அவர்களும் நீங்களும் (லூயிஸ்நாதர்), அருட்தந்தை ராயலு அவர்களின் உதவியுடன் ஆண்டிமடத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி கேட்டிருந்தீர்கள். அதன்படி ஆண்டிமடத்தில் இருக்கின்ற மறைமாவட்டத்திற்கு சொந்தமான இடத்தில் ஆலயத்தை கட்டிக்கொள்ள நான் அனுமதி தருகிறேன்" என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

29.06.1983 அன்று அருட்தந்தை B.M. ராயலு மற்றும் கூவத்தூர் பங்குத்தந்தை அருட்தந்தை S.I. அருள்சாமி, அருட்தந்தை லூயிஸ் நாதர் ஆகிய மூவரும் இணைந்து ஆண்டிமடத்தில் புனித மார்ட்டின் தே போரஸ்க்கு ஆலயம் கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார்கள்.

ஆண்டிமடத்திலிருக்கும் 30 குடும்பங்களுக்கு, 15 அடி அகலம் 30 அடி நீளம் கொண்ட சிறிய ஆலயத்தை கட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். அதே சமயத்தில் கூவத்தூர் பங்குத்தந்தை, கூவத்தூரில் பெரிய பங்கு கோயில் ஒன்றையும் கட்டிக் கொண்டிருந்தார்.

27.06.1984 கூவத்தூர் பங்குக்கோவில் திறக்கப்பட்ட பிறகு அருட்தந்தை S.I. அருள்சாமி அவர்கள், கூவத்தூரிலிருந்து மாற்றப்பட்டு கோயம்புத்தூர் நல்லாயன் குருமடத்திற்கு சென்றார். அவரைத் தொடர்ந்து அருட்தந்தை G. மைக்கேல் அவர்கள் 11.07.1984 அன்று கூவத்தூரின் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற பிறகு ஆண்டிமடத்து புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம் கட்டும் பணியை மீண்டும் துவங்கினார். இதற்கிடையில் அருட்தந்தை B. M. ராயலு அடிகளார் ஆலயம் கட்டுவதற்கு கூடுதல் நிதி உதவி கிடைத்து இருக்கிறது என்றும், ஆலயத்தை பெரிதாக கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன்படி நுழைவு வாயில் 15× 10 அடி மற்றும் பீடம் 15×10 மாற்றி அமைக்கப்பட்டது. 10 × 10 இரண்டு அறைகள் ஆலயத்தின் இரு பக்கமும் சேர்க்கப்பட்டது. 

அருட்தந்தை லூயிஸ் நாதர் அடிகள் ஜெயங்கொண்டத்திலிருந்து வந்து, ஆலயக் கட்டுமானப் பணியை ஒவ்வொரு நாளும் பார்வையிடுவார். 24.11.1984 ல் அருட்தந்தை லூயிஸ் நாதர் ஜெயங்கொண்டத்திலிருந்து, கபிரியேல்புரத்திற்கு மாற்றப்பட்ட போதிலும் அடிக்கடி ஆண்டிமடத்திற்கு வந்து, ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிடுவார்.

13.12.1984 அன்று கூரை கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. 

ஆலயத்திற்கு மேல் இருந்த புனித மார்ட்டின் தே போரஸ் பெரிய சொரூபம், ஆலயத்திற்குள் இருந்த இரண்டு சிறிய சொரூபங்கள் என மொத்தம் மூன்று சொரூபமும் அருட்தந்தை B.M. ராயலு அடிகளே தந்தார். ஆலயத்தினுடைய திருச்சிலுவை வேளாங்கண்ணியிலிருந்து வாங்கப்பட்டது. 

1985 ஆம் ஆண்டின் இறுதியில் ஆலயக் கட்டுமான பணி ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், இதுவரை ஆலயத்திற்கு உதவி செய்து கொண்டிருந்த அருட்தந்தை ராயிலு அவர்கள், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 21.1.1986 அன்று அருட்தந்தை B.M. ராயிலு அவர்கள் மரணமடைந்தார். அதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலயம் கட்டும் பணி சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. ஆலயக் கட்டுமான பணிக்கான பெருந்தொகையை அமெரிக்காவில் வசிக்கும் போலந்து நாட்டை சார்ந்த, மிக்கிகன் ராட்லஸ்கி குடும்பத்தினர் கொடுத்திருந்தார்கள்.

கூவத்தூர் பங்குத்தந்தை அருட்பணி. G. மைக்கேல் அவர்களின் வழிகாட்டலில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பால் அருள்சாமி அவர்களால், 09.06.1986 அன்று ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

ஆண்டிமடம் புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயமானது, அருட்தந்தை B.M ராயிலு அடிகளார் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் முடிக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அவரோடு இணைந்து அருட்தந்தை லூயிஸ் நாதர், அருட்தந்தை S.I அருள்சாமி, அருட்தந்தை G. மைக்கேல் இவர்களின் பெருமுயற்சியால் இந்த ஆலயம் கட்டப்பட்டது.

புனித மார்ட்டின் தே போரஸ் திருவிழா நவம்பர் மாதம் 3ஆம் தேதி திருச்சபையில் கொண்டாடப் படுகிறது. 1986ஆம் ஆண்டு ஆண்டிமடத்தில் புனித மார்ட்டின் தே போரஸ்க்கு முதன் முறை திருவிழா கொண்டாடப்பட்டது. 

மக்கள் தந்த நன்கொடையின் உதவியோடு கொடிமரம் அமைக்கப்பட்டு அக்டோபர் 28, 1986 அன்று திருவிழா கொண்டாடுவதற்காக கொடி ஏற்றப்பட்டது. புதிதாக இரண்டு சப்பரங்கள் செய்யப்பட்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி இரவு சப்பர சுற்று பிரகாரம் நடைபெற்றது.

புனித மார்ட்டினாரின் பக்தி ஆண்டிமடம் சுற்றுப் புறங்களில் வேகமாக பரவியது.

ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை ஒவ்வொரு வாரமும், கூவத்தூர் பங்குத்தந்தை இங்கு திருப்பலி நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு பெருத்த மழையின் காரணமாக திருவிழா கொண்டாட முடியவில்லை. நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் திருவிழா மே மாதத்திற்கு மாற்றப்பட்டு, புனித மார்ட்டின் தே போரஸ் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட மே மாதம் 6-ஆம் தேதி, திருவிழா கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டு திருவிழா நடத்தப்பட்டது. 1988-ஆம் ஆண்டு திருவிழாவின் போது மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம் என்று திட்டமிடப்பட்டு அதற்கு தேவையான பொருட்களை மக்களே கொடுக்க, அந்த ஆண்டு முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1995 ஆம் ஆண்டு கூவத்தூர் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டிமடத்தை தனிப் பங்காக உருவாக்க ஆயரிடம் பரிந்துரை செய்தார். அப்போது ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்து, 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதியன்று ஆண்டிமடத்தை தனிப் பங்காக அறிவித்தார். அப்போது அருட்தந்தை சகாயராஜ் கூவத்தூர் பங்குத்தந்தையாக இருந்தார். ஆண்டிடமடம் தனிப் பங்காக உருவாக தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்தது இவரே.

கூவத்தூரிலிருந்து வில்லாநத்தம், பட்டிணம்குறிச்சி, மேலநடுவாய், அருளானந்தபுரம் ஆகிய கிராமங்களும், வரதராஜன்பேட்டையிலிருந்து தஞ்சாவூரான்சாவடி-யையும் பிரித்து ஆண்டிமடத்தோடு சேர்த்து ஒரு பங்கு உருவானது. அப்போது வரதராஜன்பேட்டையின் உதவிப் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை A. சிரில் இராபர்ட், ஆண்டிமடத்தின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பங்குத்தந்தை இல்லம் இல்லாததால், அருட்தந்தை சிரில் இராபர்ட் துவக்கத்தில் வரதராஜன்பேட்டையில் தங்கியிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு ஆண்டிமடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, பங்குப்பணியை மேற்கொண்டார். 

1986-ல் ஆலயம் கட்டப்பட்டதிலிருந்து, புனித மார்த்தினார் என்று மக்கள் அன்போடு அழைத்த புனித மார்ட்டின் தே போரஸின் பக்தி, ஆண்டிமடம் சுற்றுப்புறங்களில் வேகமாக பரவியது. நிறைய புதுமைகள் நடந்தன. உடல்நலம் இல்லாதவர்கள் நலம் பெற்றனர். குழந்தைவரம் கேட்டவர்களுக்கு குழந்தை பிறந்தது. மதங்களை கடந்து எல்லா மக்களும் மார்ட்டினார் மீது பக்தி கொண்டார்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து மெழுகுத்திரி ஏற்றி வேண்டிக் கொண்டார்கள்.

அருட்தந்தை. சிரில் இராபர்ட் அவர்களுடைய காலத்தில் ஏராளமான இளையோரும், சிறார்களும் கோயில் பணிகளிலும், ஆன்மீக காரியங்களிலும் ஈடுபட்டார்கள். விடியல் பெண்கள் சுய உதவிக் குழு, நண்பர்கள் இளையோர் இயக்கம், மாதா சபை, பீடச்சிறுவர்கள் என பல்வேறு பக்த சபைகளும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

ஜெயங்கொண்டத்திலிருந்து SMMI சபை அருட்சகோதரிகள் திருவழிப்பாட்டுக்கு உதவவ பங்குத்தந்தைக்கு உதவியாக இருந்தனர். 1998 ஜனவரி மாதத்தில் SMMI அருட்சகோதரிகள் பட்டணங்குறிச்சியிலே தங்கி இறைப்பணியாற்றினார்கள். 1998- மார்ச் மாதத்தில் புனித மார்ட்டினார் பள்ளியின் பழைய கட்டிடத்தில் பங்குத்தந்தை தங்கினார்.

1998 ஏப்ரல் மாதம்28ஆம் தேதி ஆண்டிமடம் பங்கின் முதல் ஆண்டு பெருவிழா நடைபெற்றது. 1998 ஜுன் மாதம் ஆலய வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய குருக்கள் இல்லம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 1999 மார்ச் மாதம் புதிய பங்குத்தந்தை இல்லம் மந்திரிக்கப்பட்டது.

27.05. 2003 அன்று பட்டணம்குறிச்சி புதிய பங்காக அறிவிக்கப்பட்டது.  

அருட்பணி. அருள்சாமி 

பணிக்காலத்தில் கூவத்தூரிலிருந்து அருட்சகோதரிகள் வந்து திருப்பலி, மறைக்கல்வி, நற்கருணை வழங்குதல் போன்ற ஆன்மீகக் காரியங்களில் சிறந்த முறையில் உதவி செய்தனர். ஆலயம் பழுதடைந்து விட்டதால் ஓர் புதிய ஆலயம் கட்டுவதற்கான அவசியத்தை உணர்ந்த பங்குத்தந்தை, ஆயரிடம் இதுகுறித்து மனு அளித்தார். 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 3, மற்றும் 4-ம் தேதிகளில் ஆண்டிமட பங்கின் பங்கு விசாரணை நடைபெற்றது. இந்த பங்கு விசாரணையின்போது புதிய ஆலயம் கட்டுவதற்கான கோரிக்கை மக்களிடம் இருந்து வலுவாக எழுந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று ஆயர், புதிய கோயில் கட்டித்தர சம்மதித்தார்.

2007-ஆம் ஆண்டு மே மாதம் திருவிழாவிற்கு ஆயர் வருகை தந்து புதிய கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். புதிய ஆலயம் 23.06.2008 அன்று புனிதப் படுத்தப்பட்டது. 

அருட் தந்தை A. சூசைமாணிக்கம் பணிக்காலத்தில் பங்குப்பேரவை துவக்கப்பட்டு, பங்கின் நிர்வாகத்தில் பொதுநிலையினரை ஆர்வமாக ஈடுபடச் செய்தார்.

2010-ம் ஆண்டு முதல் ஆண்டிமடத்தை மையமாகக் கொண்டு, மாபெரும் நற்செய்தி பெருவிழா நடத்தத் திட்டமிட்டு அதை துவக்கினார். கடந்த 13 ஆண்டுகளாக இந்த நற்செய்திப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாக்காலங்களில் கிளை கிராம மக்களுக்கு பங்களிப்பு கொடுத்து, ஆண்டிமடம் பங்கின் விழாவில் அனைத்து கிளை கிராமங்களும் பங்கேற்கச் செய்தார்.

ஆண்டிமடத்திலிருக்கும் கல்லறைத் தோட்ட நிலம் பல ஆண்டுகளாக பிரச்சனைக்குரியதாக இருந்தது. அருட்தந்தை சூசைமாணிக்கம் அவர்கள் பலமுறை வட்டாட்சியரையும், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து அந்த நிலத்திற்கான பட்டாவை பெறுவதற்கு தீவிர முயற்சி செய்தார். இவருடைய காலத்தில்தான் 2011 செப்டம்பர் மாதம் அன்பியங்கள் உருவாக்கப்பட்டு, அன்பியக் கூட்டங்கள் நடைபெற்றது.

2012 மே மாதம் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் பங்கின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக ஆண்டிமடம் பங்கின் மூன்றாவது பங்கு விசாரணை நடைபெற்றது. ஆண்டிமடம் பங்கில் குறைவான கிறிஸ்தவ குடும்பங்களே இருந்தன. ஆண்டிமடபங்கை பொருளாதார நிலையில் நிலைநிறுத்த நிதியுதவி தேவைப்பட்டது. ஆயரினுடைய ஆலோசனையின் பெயரிலும் மறை மாவட்டத்தின் உதவியாலும் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் ஒரு வணிக வளாகம் கட்டப்பட்டது.

2015 ஜுன் மாதம் 7-ஆம் தேதி அருட்தந்தை ஜான் பிரிட்டோ அவர்கள் பங்கின் புதிய பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரோடு இணைந்து அருட்தந்தை S. சின்னப்பன் பங்கில் பல்வேறு பணிகளை சிறப்புடன் செய்தார்கள். இவர்களுடைய காலத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆலயத்தின் புதிய மணிக்கூண்டு கட்டப்பட்டது. 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழைய ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

2018 ஆகஸ்ட் மாதம் குருக்கள் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றிலும் பாதை அமைக்கப்பட்டு ஒரு பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்கப்பட்டன. தஞ்சாவூரான் சாவடி அற்புத குழந்தை இயேசு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, ஆலயம் கட்டி 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

2020 ஆம் ஆண்டு ஆண்டிமடம் பங்கு புதிய ஆலயம் புதுப்பிக்கப் பட்டது. பங்கு ஆலய வளாகம் புதுப்பொலிவு பெற்றது இவர்களுடைய காலத்தில் என்றால் அது மிகையாகாது.

18.07.2021 அன்று அருட்தந்தை J. மரிய ஜோமிக்ஸ் சாவியோ புதிய பங்குத் தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார். பங்குத்தந்தை யின் வழிகாட்டலில் 26.08.2022 அன்று பங்கின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெத்தலமைட் சபை அருட்சகோதரிகள் ஆண்டிமட பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து கல்விப் பணியாற்றி வருகின்றனர்.

பங்கின் பள்ளிக்கூடம்:

புனித மார்ட்டின் தே போரஸ் உயர் நிலைப் பள்ளி 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மறைக்கல்வி

2. பங்கு அருட்பணிப் பேரவை

3. இளையோர் இயக்கம்

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. மரியாயின் சேனை

6. பாடகற்குழு