புனித காணிக்கை மாதா ஆலயம், திருக்காவலூர்
புனித காணிக்கை மாதா ஆலயம்
இடம்: திருக்காவலூர்
மாவட்டம்: திருச்சி
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: இலால்குடி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோணியார் ஆலயம், மழவனூர்
2. சிறுமருதூர்
குடும்பங்கள்: 219
அன்பியங்கள்: 5
1. புனித வேளாங்கண்ணி மாதா அன்பியம்
2. குழந்தை இயேசு அன்பியம்
3.புனித செபஸ்தியார் அன்பியம்
4. புனித காணிக்கை மாதா அன்பியம்
5. புனித அந்தோணியார் அன்பியம்
திருப்பலி நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி
திங்கள், புதன், வெள்ளி: காலை 05:15 மணிக்கு திருஇருதய பக்திமாலை, 05:30 மணிக்கு திருப்பலி.
செவ்வாய், வியாழன். சனி: மாலை 06:15 மணிக்கு செபமாலை, 06:30 மணிக்கு திருப்பலி
நவநாள் செபங்கள்:
செவ்வாய்: புனித அந்தோணியார் நவநாள்
வியாழன்: குழந்தை இயேசு நவநாள்
வெள்ளி: திருஇருதய ஆண்டவர் நவநாள்
சனி: பாதுகாவலி புனித காணிக்கை மாதா நவநாள்
பங்குத்திருவிழா:
ஆண்டவரின் உயிர்ப்பு (ஈஸ்டர்) பெருவிழா முடிந்த 5-ம் நாள் கொடியேற்றமும், 15-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6:30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீரும், கொடியிறக்கமும் நடைபெறும்.
Location map: Our Lady of Presentation Church, Thirukavaloor
https://maps.app.goo.gl/RW8q5PT3LxeAbe7X8
பங்கு வரலாறு:
அமைவிடம்:
திருச்சி மாவட்டம், இலால்குடி தாலுக்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருச்சி -சிதம்பரம் பைபாஸ் நான்கு வழிச்சாலையில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், இலால்குடியிலிந்து 9 கி.மீ தூரத்திலும், வாளாடி சிறுமருதூர் சர்வீஸ் சாலையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள திருக்காவலூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னாள் கண்ணாகுடி கிராமத்திலிருந்து இரண்டு குடும்பங்கள் நீர் நிலை தேடி இப்பகுதியில் வந்து குடியேறினார்கள். 1778-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் தாங்கள் தங்கியிருந்த பகுதி மூழ்கிய காரணத்தால், மலை மேடாகக் காணப்பட்ட இடமான தற்போதைய திருக்காவலூர் என்றழைக்கப்படும் இந்தப் பகுதியில் குடியேறினார்கள். இவர்களுடன் இனியாநல்லூர் கிராமத்தில் இருந்து ஒரு குடும்பம் 1808-ம் ஆண்டு சேர்ந்து வாழ்ந்த வந்த காலங்களில் இறைவனுக்கு சிறிய ஜெபக்கூடம் அமைத்து ஜெபித்து வந்தார்கள்.
பகலில் மாணவர்கள் பயிலும் பாடசாலையாக பயன்பட்டு வந்த இடத்தில், 1875-ம் ஆண்டு புதியதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு மக்களின் பொருளுதவி, மற்றும் நிதியுதவி கிடைக்கப்பட்டு ஊர் மணியக்காரர்கள் வழிகாட்டுதலின் பெயரில் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 1904-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் நாள் கும்பகோணம் மேதகு ஆயர் H. M. பாத்ரோ ஆண்டகை தலைமையில், சவரிநாதர்சாமி அவர்கள் முன்னிலையில் புனித காணிக்கை மாதா ஆலயம் மந்திரித்து அபிஷேகம் செய்யப்பட்டது.
மணியகாரர்கள் முயற்சியில் 1905-ம் ஆண்டு அர்ச். பிலோமினாள் ஆரம்பப்பள்ளி கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டு, 1912-ம் ஆண்டு மாணவர்கள் கல்வி கற்க திறந்து வைக்கப்பட்டது. முத்தபுடையான்பட்டி சின்னசாமி 1924-ம் ஆண்டு 940 பவுண்டு எடையுடைய வெங்கல மணி ஆலயத்திற்கு உபயமாக கொடுத்துள்ளார்.
கபிரியேல்புரம் பங்கிலிருந்து பிரித்து திருக்காவலூர் புனித காணிக்கை மாதா ஆலயத்தை, கும்பகோணம் மறைமாவட்ட மேதகு ஆயர் பீட்டர் பிரான்சிஸ் முன்னிலையில் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் நாள் தனிபங்காக அறிவித்து
முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. R. சவரிமுத்து அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவற்றை தொடர்ந்து பங்குத்தந்தை இல்லம் அமைக்க கிராம மக்கள் மூலம் மானியமாக 14 சென்ட் இடத்தை பெற்று பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டுள்ளது. முதல் பங்குதந்தையை தொடர்ந்து, பங்கையும், பங்கு மக்களையும் சிறப்பாக வழிநடத்திய பெருமை அருட்தந்தையர்களையும், ஊர் முக்கியஸ்தர்களையும் சேரும்.
2004-ம் ஆண்டு மே மாதம் 22-ம் நாள் பங்குத்தந்தை அருட்பணி. M. லாரன்ஸ் அவர்கள் முன்னிலையில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு. பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் தலைமையில் ஆலயத்தின் 100-ம் ஆண்டு விழாவும் (1904-2004), காணிக்கை மாதா திருக்காவலூர் பங்கின் பொன்விழாவும் (1954-2004) இணைத்து மிகச் சிறப்பாக பங்கு மக்களின் ஒத்துழைப்பால் கொண்டாடப்பட்டது.
புதிய ஆலயம் கட்டுவதற்காக இரண்டு ஏக்கர் நிலம் மக்களின் உதவியாலும், அருட்பணி. M. லாரன்ஸ் அவர்கள் முயற்சியாலும் வாங்கப்பட்டது.
ஆலயம் பழுதான காரணத்தால் புதிய ஆலயம் அமைக்க ஊர்மக்கள் ஒன்றுகூடி பங்குத்தந்தை அருட்பணி. D. தாமஸ் சகாயராஜ் அவர்கள் முன்னிலையில், பழைய ஆலயத்தை எடுத்துவிட்டு அதே இடத்தில் புதிய ஆலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஆயரின் அனுமதியுடன் 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை பங்குத்தந்தை தலைமையில் கிராம மக்கள் அனைவரின் ஒத்துழைப்பில், ரூ.10,000 வீதம் பங்குமக்கள் தலைகட்டு வரியாக வழங்கிய நிதி, மக்களிடம் பெற்ற நன்கொடை, புதிய கோவில் கட்ட வாங்கிய இடத்தை விற்றதன் மூலம் வந்த தொகையுடன், கும்பகோண மறைமாவட்ட ஆயரின் நிதியுதவியும் பெற்று மிகப்பிரம்மாண்டமாக ஆலயத்தை கட்டி முடித்து, ஆலயத்தின் பின்புறத்தில் பங்குத்தந்தை இல்லமும் கட்டி முடிக்கப்பட்டு 29-12-2011-ம் நாள் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா, பங்குத்தந்தை இல்லம் திறப்பு விழா ஆகியன குடந்தை ஆயர் மேதகு F. அந்தோனிசாமி அவர்களால் நிறைவேற்றப்பட்டது.
மாதத்தின் முதல் சனிக்கிழமை புனித காணிக்கை மாதாவிற்கு நவநாளாக கொண்டாடப்பட்டு சிறிய தேர்பவனியும், தொடர்ந்து நோயாளிகளுக்கு சிறப்பு திருப்பலியும் மாலை 6.00 மணிக்கு நிறைவேற்றப்படுகிறது. ஊர் கிராம காரியஸ்தர்கள் முயற்சியால் 2022ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு மீண்டும் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. மை. ஆல்பர்ட் புஷ்பராஜ் அவர்கள் முயற்சியால் 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த அன்பியங்களை செயல்பட வைத்து ஞாயிறு மறைக்கல்வி தொடங்கப்பட்டது. ஞாயிறுதோறும் சமயபுரம் பிரான்சிஸ்கோ கப்புசின் சகோதர் பிரிஸ் ஆரோக்கியராஜ் ஆங்கில இலக்கண வகுப்புகள் (ஸ்போக்கன் இங்கிலிஷ்) எடுக்கிறார். அருட்தந்தையர் இல்லத்தில் குருவானவர் மேல் மாடியில் தங்குவது கடினமாக இருப்பதால் கீழே தங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பங்குத்தந்தை இல்லத்திலுள்ள டைல்ஸ் மற்றும் ஆலயத்தின் டைல்ஸ் பெயர்ந்தும் காணப்பட்டதால் மக்களின் முயற்சியாலும், மறைமாவட்ட உதவியாலும் புதிய டைல்ஸ் பதிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
கல்வி நிறுவனம்:
ஆர்.சி. நடுநிலைப்பள்ளி
பக்த சபைகள்:
1. மரியாயின் சேனை
2. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்
3. புனித காணிக்கை மாதா இளையோர் இயக்கம்
4. புனித பியோ செபக்குழு இயக்கம்
பாலன் இயேசுவை கடவுளுக்குக் காணிக்கையாகத் தந்த புனித காணிக்கை மாதாவின் அருளை நிரம்பப் பெற்ற இவ்வாலய திருவிழா நாட்களிலும், சிறப்பு நவநாள் திருப்பலியிலும் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.