ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் பூசையில்லாத இடங்களில் சொல்லுகிற பூசை மந்திரம்



பூசையிலே சேசுநாதர் சுவாமி எழுந்தருளுகிறாரே.  அவருடைய சந்நிதியிலே நானிருந்து பூசைத் தியானம் பண்ணப் பாத்திரமாகாதவனாயிருந்தாலும், அவருடைய அளவில்லாத தயவை நம்பிக் கொண்டு பக்தியோடு செபம் செய்யப் போகிறேன்.

பூசையிலே அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவத்திற்குத் தோத்திரம். சம்மனசுகளுக்கு ஆனந்த சந்தோஷம், பாவிகளுக்குப் பாவப் பொறுத்தல், புண்ணியவான்களுக்கு இஷ்டப்பிரசாதம், உத்தரிப்பு ஸ்தலத்திலே வேதனைப் படுகிறவர்களுக்கு ஆறுதல், திருச்சபைக்கு சேசுகிறீஸ்துவினால் விசேஷ உதவி, பூசை செய்கிற குருவானவருக்கு ஞான அமுதமும் பரம சஞ்சீவியுமாயிருக்கிறதும் அல்லாமல் தேவ நற்கருணையை உட்கொள்ளுகிறதினால் பாவப் பொறுத்தலும், ஆசாபாசக் கட்டுப்பாடும், ஞானத் தெளிவும், ஆத்தும சம்பூரணமும் புண்ணியத்தைச் செய்யத் திடமும், பசாசின் சோதனையை ஜெயிக்க உதவியும், விசுவாசத்தில் உறுதியும், நம்பிக்கையில் நாட்டமும், சிநேகத்தில் ஆர்வமும், பக்தியில் அபிவிருத்தியும் அடைந்து, சேசுகிறீஸ்துவோடும் திருச்சபையோடும் ஒன்றுபட்டிருக்கலாம்.

முதன் முதலில் பூசையிலே சேசுநாதர் சுவாமி தம்மைத் தாமே நம்முடைய பாவங்களுக்காக அநாதி பிதாவுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தாரென்று அறிந்து பூசை செய்கிற குருவிடத்தில் அவர் இருக்கிறதாகச் சிந்தித்து மகா பக்தி நம்பிக்கையோடு பூசை காண்போம்.

அதிகமான பலனோடு பூசை காணத்தக்கதாக பூசைக் கிருத்தியங்களும் பரம அர்த்தங்களும் அவைகளுக்குரிய அர்த்தங்களும் வேண்டுதல்களும் வருமாறு:

குரு ஒரு சிறிய வஸ்திரத்தைத் தமது சிரசின் மீது போடும்போது (அமீஸ்)

சுவாமியுடைய திருமுகத்திலே யூதர்கள் வஸ்திரத்தைக் கட்டி அடித்து, உன்னை அடித்தவன் யாரென்று கேட்டார்களென்று சிந்தித்துக்கொள். 

சுவாமி! நாங்கள் இந்த உலகத்தின் வெகுமானத்தைப் பாராமல், பரலோகத்திலே தேவரீர் உம்முடையவர்களுக்குத் தருகிற வெகுமானத்தைப் பாராட்ட எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேணுமென்று அநாதி பிதாவை வேண்டிக் கொள்கிறோம்.

குரு வெள்ளை அங்கியைத் தரித்துக் கொள்ளுகிற போது (ஆல்ப்)

ஏரோதென்கிற இராஜா சுவாமியைப் பைத்தியக்காரனைப் போல பாவித்து பைத்தியக்காரனுக்கு அடையாளமாக வெள்ளை உடையை உடுப்பித்து, மீளவும் போஞ்சு பிலாத்துவிடம் அனுப்பினானென்று சிந்தித்துக் கொள்.  

சுவாமி! நாங்கள் நற்கிரிகை செய்கிறதிலே உலகத்தார் எங்களைப் பைத்தியம் கொண்டவர்களென்று நினைத்து நிந்தித்தால், அவைகளை நாங்கள் பொறுமையோடு சகிக்க எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

குரு அரைக்கச்சை இடையிலே கட்டிக் கொண்டு, இடது கையிலும் கழுத்திலும் நீண்ட பட்டுகளை அணிந்து கொள்ளுகிற போது (சிங்ச்சர், மேனிபுல், ஸ்தோல்)

யூதர்கள் சுவாமியை இடையிலேயும் கைகளிலேயும் கழுத்திலேயும் கயிறுகளால் கட்டி தோட்டத்தினின்று இழுத்துக் கொண்டு போனார்களென்று நினைத்துக் கொள்.  

சுவாமி!  ஆசாபாசமென்கிற கட்டுகளினாலே பசாசு எங்களைக் கட்டி நரகத்திற்கு இழுத்துக் கொண்டு போகாதபடி தேவரீர் கட்டுண்டு மீட்டு இரட்சித்தீரென்கிறதினால் உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவதென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம்.

குரு ஆயத்தத்தை அணிந்து கொள்ளுகிற போது (பூசை  உடுப்பு)

யூதர்கள் சுவாமியைப் பரிகாச இராஜாவாக ஸ்தாபித்து அவர் மேலே சிவப்புப் பட்டைத் தரித்தார்களென்று எண்ணிக் கொள்.  

சுவாமி!  உலகத்தாராலே வருகிற வெகுமானம் வீண் வெகுமானமென்று அதற்கு நாங்கள் ஆசைப்படாதபடி எங்களுக்கு நல்ல புத்தி தந்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

குரு பீடத்தின் முன்பாக நிற்கிற போதும், பீடத்தின் இடது பக்கத்தில் ஒரு சின்ன ஜெபம் ஜெபிக்கிற போதும் பீடத்தின் நடுவிலே நின்று சுவாமி கிருபையாயிரும் என்கிற மந்திரத்தைச் சொல்லும்போதும்

ஆதித்தகப்பன் பாவம் கட்டிக் கொண்ட பிறகு, சர்வேசுரனை அறிந்த புண்ணியாத்துமாக்கள் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபமாயிருந்து சர்வேசுரன் தங்கள் பாவங்களைப் பொறுக்க உலக இரட்சகரை அனுப்ப வேணுமென்று வேண்டிக்கொண்டார்களென்று சிந்தித்து நாமும் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபமாயிருந்து பாவசங்கீர்த்தன மந்திரத்தைச் சொல்லுவோம். 

பாவசங்கீர்த்தன மந்திரம்

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடனேயும், எப்போதும் கன்னியாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயுடனேயும், பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மிக்கேலுடனேயும், ஸ்நாபகராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட அருளப்பருடனேயும் அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பருடனேயும், சின்னப்பருடனேயும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடனேயும், (எனக்குக் குருவாயிருக்கிற உம்முடனேயும்) பாவசங்கீர்த்தனம் பண்ணிக் கொள்கிறேன். அதேதென்றால், என் சிந்தனையினாலேயும், வாக்கினாலேயும், கிரிகையினாலேயும், மகா பாவங்களைச் செய்தேனே.  என் பாவமே!  என் பாவமே!  என் பெரும் பாவமே!  ஆகையால் எப்போதும் கன்னிகையாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயையும் பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மிக்கேலையும் ஸ்நாபகராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட அருளப்பரையும் அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பரையும் சின்னப்பரையும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும், (எனக்குக் குருவாயிருக்கிற உம்மையும்) நம்முடைய கர்த்தராகிய சர்வேசுரனிடத்திலே, எனக்காக வேண்டிக்கொள்ள வேணுமென்று மன்றாடுகிறேன்.  ஆமென்.

சுவாமி கிருபையாயிரும் (3 விசை)
கிறீஸ்துவே கிருபையாயிரும் (3 விசை)
சுவாமி கிருபையாயிரும் (3 விசை)

குரு பீடத்தின் நடுவில் நின்று சம்மனசுக்கள் பாடின தேவ ஸ்துதி சொல்லுகிறபோது

சுவாமி பிறந்தாரென்றும் சம்மனசுக்கள் வந்து பாடினார்களென்றும் சிந்தித்துக் கொள்.  

சுவாமி!  உமது மட்டற்ற கிருபையால் எங்களை மீட்டு இரட்சிக்க வேணுமென்று மனிதாவதாரமெடுத்து இவ்வுலகில் எழுந்தருளி வரத் திருவுளமானீரே.  உமக்கே தோத்திரமுண்டாவதாகக் கடவதென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம்.  அருள்.

குரு பீடத்தின் வலது பக்கத்திலே பூசை புத்தகத்தை வாசிக்கிறபோது

தீர்க்க தரிசிகளைக் கொண்டும், விசேஷமாய் ஸ்நாபக அருளப்பரைக் கொண்டும் சர்வேசுரன் உலகத்துக்குச் சத்திய வேதத்தை அறிவித்தாரென்று நினைத்துக்கொள்.  

சுவாமி! தேவரீர் அறிவித்த சத்தியங்களை நாங்கள் உறுதியாக விசுவசிக்கவும், தேவரீர் கற்பித்த நெறிவழியில் சுமுத்திரையாக நடக்கவும் அநுக்கிரகம் பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். (பத்துக் கற்பனைகளைச் சொல்லவும்)

பத்துக் கற்பனைகள்

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து:
1 வது. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.
2 வது.  சர்வேசுரனுடைய திருநாமத்தை  வீணாகச் சொல்லாதிருப்பாயாக.
3 வது. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
4 வது.  பிதாவையும் மாதாவையும் சங்கித் திருப்பாயாக.
5 வது.  கொலை செய்யாதிருப்பாயாக.
6 வது. மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
7 வது.  களவு செய்யாதிருப்பாயாக.
8 வது.  பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9 வது.  பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
10 வது.  பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்:
1 வது.  எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.
2 வது.  தன்னைத்தான் நேசிப்பதுபோல் பிறரையும் நேசிப்பது.

குரு பீடத்தின் இடது பக்கத்திலே சுவிசேஷம் வாசிக்கிறபோது

சுவிசேஷப் போதனையைச் சேசுநாதர் உலகத்துக்கு அறிவிக்கத் திருவுளமானாரென்று சிந்தித்துக்கொள்.  

சுவாமி!  உமக்குகந்த குமாரனாகிய சேசுகிறீஸ்துவின் திருவசனங்களைக் கேட்கச் சொல்லி தாபோரென்கிற மலையில் மூன்று சீஷர்களுக்கு அற்புதமாக உமது திவ்விய சித்தத்தால் அறிவிக்கத் திருவுளமானீரே!  அப்படிப்பட்ட உம்முடைய ஏக சுதனின் போதனையை நாங்கள் கவனத்தோடு கேட்கும்படி எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.

குரு பீடத்தின் நடுவிலே நின்று விசுவாச மந்திரம் சொல்லுகிறபோது

சேசுநாதருடைய சீஷர்கள் உலகமெங்கும் சுற்றித் திரிந்து சுவிசேஷத்தை போதிக்க, அதைக் கேட்ட அநேகமாயிரம் பிரஜைகள் பசாசின் ஆராதனையை விட்டுச் சத்திய வேதத்தை விசுவசித்தார்கள்.  நாமும் பக்தியோடு நம் விசுவாச மந்திரத்தைச் சொல்லுவோம்.

விசுவாச மந்திரம்

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுகிறீஸ்துவை விசுவசிக்கிறேன். இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளங்களில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். இஸ்பிரீத்துசாந்துவை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென்.

சுவாமி! பாவிகளாயிருக்கிற அடியோர்கள் பேரில் உமது கிருபையைத் தானே பாராட்டி அடியோர்களுக்கு உமது சத்திய வேதத்தை அறிவிக்க திருவுளமானீரே!  நாங்கள் அப்படிப் பட்ட சத்திய வேதத்தை விசுவாசம் நம்பிக்கை தேவசிநேகத்தோடே கைக்கொண்டு அதன்படியே சுமுத்திரையாக நடந்து மோட்சத்தை அடையக் கிருபை செய்தருள வேணுமென்று அநாதி பிதாவை வேண்டிக் கொள்ளுகிறோம்.

குரு கோதுமை அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் ஒப்புக் கொடுக்கிற போது

யூதர்கள் சுவாமியை பிடிக்க கருத்தாயிருந்த சமயத்திலே, அவர் ஜெருசலேமென்கிற பட்டணத்தை விட்டு மறைந்து வேறு ஊர்களில் சஞ்சரித்தாரென்பதை நினைத்துக் கொள்.  

சுவாமி! எங்களாலே தேவரீருக்குப் பூசையும் தோத்திரமும் உண்டாகிற நாளளவும் பொல்லாதவர்கள் எங்களை உபாதித்து உம்முடைய பூசைக்கும் தோத்திரத்துக்கும் விக்கினம் பண்ணாதபடி காத்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

குரு “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்கிற மந்திரம் சொல்லும் போது

சேசுநாதர் சுவாமி நமக்காகப் பாடுபட வேணுமென்று மிகுந்த தாழ்ச்சி பொறுமையுள்ள இராஜாவாக நீச வாகனத்தின் மீதுயெழுந்தருளி ஜெருசலேமென்கிற பட்டணத்தில் பிரவேசிக்கிற பொழுது, அந்தப் பட்டணத்து ஜனங்கள் மரத்தின் கொப்புகளை ஒடித்துப் போட்டும், குருத்துக்களைக் கையிலேந்தியும், தங்கள் வஸ்திரங்களை வழியில் விரித்தும் வழியை அலங்கரித்து சுவாமிக்கு முன்னும் பின்னுமாகப் புகழ் கூறிக் கொண்டு போகும் பொழுது அந்தப் பட்டணத்து ஜனங்கள் செய்யும் கொடிய பாவத்தால் அவர்கள் இனி அனுபவிக்கும் கடினமான நிர்ப்பந்தங்களை நினைத்து, அவர் மனமிரங்கி அழுது கொண்டு போனாரென்று சிந்தித்துக் கொள். 

சுவாமி! எங்களுக்கு சந்தோஷம் வந்தால் அதனாலே நாங்கள் ஆங்காரிகளாகாமல் எங்கள் சந்தோஷத்தில் தேவரீரைத் தோத்திரம் பண்ணும்படி எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

குரு அமைதியிலே சற்று நேரம் ஒரு சின்ன ஜெபம் ஜெபிக்கிற போது

சேசுநாதர் தம்முடைய சீஷர்களோடுகூடப் பூங்காவனத்தில் பிரவேசித்து, நம் நிமித்தமாகக் கடினமான துக்கங்களை அனுபவித்தாரென்றும், நாம் அனுபவிக்கிற மனோவியாகுல முதலான துக்க துயரங்களை மனிதர் பாவங்களுக்குரிய கொடிதான ஆக்கினைக்கு உத்தரிப்பாக ஒப்புக் கொடுத்தாரென்றும், தாம் அனுபவிக்கப் போகிற மகா கொடிதான வேதனைகளை மாற்ற வேணுமானாலும், மாற்றாமலிருக்க வேணுமானாலும், பிதாவே உம்முடைய சித்தம், என் மனதின்படி வேண்டாமென்று வேண்டிக் கொண்டாரென்று நினைத்துக் கொள். 

சுவாமி, எங்களுக்குக் கஸ்தி துக்கம் வரும்போது நாங்கள் அதிகமதிகமாய்ச் செபம் பண்ணவும், எங்கள் சத்துருக்கள் கையில் அகப்பட்டு, நாங்கள் மோசம் போகாமலிருக்கவும் கிருபை பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.

குரு நற்கருணையை உயர எழுந்தருளப் பண்ணுகிற போது

சிலுவையில் அறையுண்ட சேசுநாதர் நமது பாவங்களுக்காகத் தம்மைத்தாமே அநாதி பிதாவுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தாரென்று நினைத்துக்கொள். 

சுவாமி!  அளவில்லாத விலையேறப்பெற்ற இந்தப் பலியைப் பார்த்து பாவிகளாகிய எங்களுக்குத் தயை செய்ய வேணு மென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.

சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய திருச்சிலுவையினால் உலகத்தை மீட்டிரட்சித் தீரென்கிறதினாலே தேவரீரை வணங்கித் தோத்திரம் பண்ணுகிறோம்.

எங்களுக்காகக் கொடுக்கப்பட்ட சேசுநாதருடைய திருச்சரீரமே! உமக்கே நமஸ்காரம்.  சேசு நாதருடைய திருப்பாடுகளே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.

குரு பாத்திரத்தை உயர எழுந்தருளப் பண்ணுகிற போது

மிகவும் மிகுந்த மதுரமான சேசு கிறீஸ்துவின் விலைமதியாத திரு இரத்தமே! மனிதர் செய்த பாவங்களுக்காகச் சிலுவை மரத்திலே நின்று சிந்தப்பட்ட உமக்கே நமஸ்காரம். பாவ விமோசனத்துக்காக சிந்தப்பட்ட திரு இரத்தமே! எங்கள் பாவங்களைப் போக்கியருளும்.  சேசுநாதருடைய திருக்காயங்களிலே நின்று ஓடி விழுந்த திரு இரத்தமே! உமக்கே நமஸ்காரமும் தோத்திரமும் உண்டாகக் கடவது. அப்ப ரசத்தின் வர்ணம், வாசனை, ருசி, பிரமாணம் முதலான குணங்களில் மெய்யாகவே மறைந்திருக்கும் தேவத்துவமே! உம்மை வணங்கி நமஸ்கரிக்கிறேன். உம்மை யோசிக்கிறதில் என் இருதயம் முழுதும் அயர்ந்து போகிறதினால் என் சித்தம் முழுதும் உமக்கே கீழ்ப்படிந்திருக்கிறது.  கண், ஸ்பரிசம், ருசி எதற்கும் காணப்படாமல் கேள்வியினால் மாத்திரமே விசுவசிக்க வேண்டியிருக்கிறது.  சத்திய வார்த்தையான தேவசுதனின் வார்த்தையை விடச் சத்தியமானது ஒன்று மில்லையயன்கிறதினாலே அவர் திருவுளம் பற்றின எல்லாவற்றையும் உறுதியாக விசுவசிக்கிறேன்.  தேவத்துவம் மாத்திரமே சிலுவையில் மறைந்திருந்தது. இதிலோவென்றால் தேவத் துவத்துடன் மனுஷத்துவமும் மறைந்திருக்கிறது.

தேவநற்கருணையிலே தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் கூடியிருக்கிறதென்று விசுவசித்துச் சங்கீர்த்தனம் பண்ணி பச்சாத்தாபக் கள்ளன் கேட்ட வரத்தை நானும் கேட்கிறேன்.  அர்ச்சியசிஷ்ட தோமையாரைப் போலே தேவரீருடைய காயங்களின் துவாரங்களைக் காணேனென்றாலும் உம்மை என் தேவனென்று பிரசித்தமாய்ச் சொல்லுகிறேன்.  நான் உம்மிலே எப்போதும் அதிகமதிகமாய் விசுவாசம் நம்பிக்கை சிநேகமா யிருக்கக் கிருபை செய்தருளும்.

சேசுநாதரின் மரணத்தை ஞாபகப்படுத்தி மனிதருக்கு உயிரளிக்கும் சீவனுள்ள அப்பமே! என் ஆத்துமம் உம்மிலே சீவிக்கவும், எக்காலமும் நீர் அதற்கு மதுரமாயிருக்கவும் கிருபை செய்யும். குறையற்ற கருணையுள்ள பெலிக்கானான சேசுவே!  பாவத்தினால் அசுத்தனாயிருக்கிற அடியேனை உம்முடைய திரு இரத்தத்தால் சுத்தனாகச் செய்தருளும்.  உமது திரு இரத்தத்தின் ஒரு துளி சகல உலக பாவங்களையும் கழுவித்துடைக்க வல்லதாகையால், மிகுந்த அசுத்தனாயிருக்கிற என்னை உமது திரு இரத்தத்தினால் சுத்திகரித்தருளும்.  சேசுவே!  இப்போது மறைவில் உம்மைத் தரிசிக்கிற நான் இனி மறைவின்றித் தரிசிக்க மிகவும் ஆசிக்கிற உமதானந்த தரிசனையால் பாக்கியவானாகும்படி கிருபை செய்ய வேணுமென்று மன்றாடுகிறேன். ஆமென்.

மிகுந்த வியாகுல காரணத்தினால் சுவாமியின் சரீரத்தினின்று வியர்வையாகப் புறப்பட்டு நிலத்தில் சிந்தப்பட்ட சேசுவின் விலைமதியாத திரு இரத்தமே! இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து என் பாவத்தால் எனக்கு வந்த ஒழியாத துக்கத்தை நீக்குவீராக.

கற்றூணோடே கட்டப்பட்டு, ஆண்டவர் வெகுவாய் அடிபட்ட அடியின் வழியாகப் புறப்பட்டு, அவருடைய திவ்விய அங்க நிறத்தைக் கறைப்படுத்தி திருமேனியில் நின்று விழுந்து பூமியைப் பூச்சியமாகச்செய்த சேசுவின் விலை மதியாத திரு இரத்தமே!  இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப்பார்த்து, என் பாவத்தின் கட்டறுபட பாவரூபத்தைத் தள்ளி இஷ்டப்பிரசாதத்தால் என்னை அழகுள்ளவனாகப் பண்ணியருளும்.

முள்ளாலே முடிசெய்து, சேசுநாதருடைய திருச்சிரசிலே வைத்தடித்ததினாலே முள்ளுகள் தைத்த காயங்கள் வழியாய் வடிந்து விழுந்து சேசுவின் திருமுகத்தழகை நீக்கின என் சேசுவின் விலைமதியாத திரு இரத்தமே, இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன். கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, பாவ கர்வத்தால் எனக்கு வந்த அஞ்ஞான இருளை நீக்குவீராக.

பாவத்தினின்று என்னை மீட்டிரட்சிக்கப் பார ஆணிகளால் சிலுவையில் அறையுண்டு பலியான கை கால்களின் துவாரத்திலே நின்று புறப்பட்டுப் பேய்க்கு அடிமையாயிருந்த என்னை மீட்கக் கிரயமான என் சேசுவின் விலைமதியாத திரு இரத்தமே!  இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன்.  உம்மோடு கூட நான் மோட்ச இராச்சியத்திற்கு எழுந்தருளும்படி கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, என்னை அவர் திருப்பாதத்தில் சேர்த்தருளுவீராக.

சேசுநாதரின் திருவிலாவை நிஷ்டூரனொருவன் ஈட்டியினால் குத்தித் திறக்க அதிலே நின்று அற்புதமாகத் தண்ணீரோடு கூட புறப்பட்டு ஞான அபிஷேகத்தினாலே பாவிகளை ஞான முறைமையின் நற்பிறப்பை அடையச் செய்து ஆண்டவருடைய காயத்தால் ஞானத்திலே வளருகிறோம் என்கிறதற்குச் சந்தேகமற்ற இலட்சணமாயிருக்கிற என் சேசுவின் விலைமதியாத திரு இரத்தமே!  இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, உம்மால் மீட்டு இரட்சிக்கப்பட்ட என்னை முழுதும் உமது கைவசப்படுத்தினால், உம்மையல்லாமல் மற்றப் பொருளெனப்பட்ட யாவையும் மறப்பேன் சுவாமி.

குரு பரலோக ஜெபம் சொல்லுகிறபோது

(பரலோக மந்திரம் சொல்லவும்.) மிகவும் மிகுந்த மதுரமான அர்ச்சிக்கப்பட்ட தேவ நற்கருணையே! எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. (இப்படி மூன்று தடவை சொல்லவும்.)

குரு நற்கருணையைப் பிட்கிற போது

சுவாமியுடைய திரு ஆத்துமம் திருச்சரீரத்தை விட்டுப் பிரிந்ததென்று சிந்தித்து, 

பிதாவாகிய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரியமுள்ள திருக்குமாரன் மகா நிர்ப்பந்தத்தோடு கற்றூணில் கட்டுண்டு வெகுவாய் அடிபட்டதையும், கூர்மையுள்ள முண்முடியைத் திருத்தலையில் அழுத்தி முட்கள் உருவின காயங்களால் திருமுகம் வீங்கியிருந்ததையும், அந்தக் காயங்களின் வழியாகப் புறப்பட்ட இரத்தத்தால் திருமுகத்தழகு மங்கியிருந்ததையும், திருக்கன்னத்தில் அநேக முறை பட்ட அடியால் திருக்கன்னம் வீங்கிக் கன்றிக் கருத்திருந்ததையும், கொலைஞருடைய அசுத்த உமிழ்நீர்களினால் அவர் திருமுகம் அழுக்கடைந்திருந்ததையும், திருச்சரீரத்தில் பட்ட அடிகளால் அவர் திருச்சதைகள் கிழிந்து துண்டு துண்டாய் விழுந்ததையும் திருப்பாதம் துவக்கி திருச்சிரசு வரைக்கும் பட்ட காயங்களால் சர்வாங்கமும் நொந்திருக்கிறவர் பாரமான சிலுவையைத் திருத்தோளில் சுமந்ததையும் இரண்டு கள்ளருக்கு நடுவில் நிஷ்டூரமாய் அறையப்பட்டுச் சிலுவையில் தொங்கியிருந்ததையும், பலபல தூஷணமான அவமான நிந்தைகளைக் கேட்டதையும், பேரொலியாகக் கூப்பிட்டு திருத்தலை குனிந்து திருக்கண் பஞ்சடைந்து திருவாய் திறந்து மரித்ததையும் குறித்து இப்படியே தயை வருத்துவிக்கிற உமது திருக்குமாரனுடைய திருமுகத்தைப் பார்த்துத் தயையுள்ள பிதாவே! எங்களுக்குத் தயை பண்ணியருளும்.

ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறீஸ்துவே! உலகத்தினுடைய பாவங்களை போக்குகிறவரே!  எங்கள் பேரில் இரக்கமாயிரும். (மூன்று விசை.)

எங்களுக்குப் பொல்லாப்புச் செய்கிறவர்களுக்கு நன்மை செய்து இரட்சியும்.  உம்முடைய சத்திய வேதத்தை பரவச் செய்யும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

குரு நற்கருணையைக் கையில் எடுத்து   மூன்று முறை மார்பில் பிழை தட்டிக் கொள்ளுகிற போது

சேசுநாதர் மூன்று மணி நேரம் சிலுவையிலே உயிரோடிருந்து மனிதர் மோட்சகரை சேரவேண்டிய ஞான உபதேசத்தைப் போதித்து மனிதர் இரட்சணியத்துக்காகத் தலைகுனிந்து மரணம் அடைந்தாரென்று சிந்தனை செய்.  

சுவாமி! நாங்கள் மரணமடையுமுன் செய்யத்தக்க தருமங்களையயல்லாம் குறையறச் செய்து முடித்து மரணமடையச் செய்யுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம்.

குரு நற்கருணையை உட்கொள்ளுகிறபோது

பரம பிதாவுக்கு ஏக சுதனுமாய் நமது ஆண்டவருமாயிருக்கிற சேசுநாதர் மனிதாவதார மெடுத்து மனிதரை இரட்சிக்கும் பொருட்டாய்ச் சிலுவையில் அறையப்பட்டுக் கடின மரணத்தை யடைந்து கல்லறையில் அடக்கப்பட்டாரென்று சிந்தித்துக்கொள்.  

சுவாமி! இவ்வுலகத்துக்குச் செத்தவர்களாய் உமக்கு மாத்திரமே ஜீவித்திருக்கக் கிருபை செய்ய வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம்.

திருச்சபை மந்திரம்

கிறீஸ்துவின் மரணத்தின் நினைப்பூட்டுதலுமாய், கிறீஸ்துவைத்தானே போசனமாய்க் கொள்ளுதலுமாய், இஷ்டப்பிரசாதத்தை ஆத்துமத்துக்குத் தந்தருளும் சம்பூரணமாய், இனி அடையப்படும் மோட்ச சம்பாவனையின் அச்சாரமுமாயிருக்கிற அர்ச்சிக்கப்பட்ட விருந்தே! உமக்கே நமஸ்காரம். உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய ஆண்டவரே!  அடியேன் உள்ளத்தில் தேவரீர் எழுந்தருள நான் பேறுபெற்றவனல்ல.  தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம்பற்ற, என் ஆத்துமம் வியாதியினின்று விடுபட்டு ஆரோக்கியமடையும்.

கிறீஸ்துவினுடைய ஆத்துமமானதே செபம். 

கிறீஸ்துவினுடைய ஆத்துமமானதே, என்னை அர்ச்சியசிஷ்டவனாகச் செய்தருளும்.  கிறீஸ்துவினுடைய திருச்சரீரமே, என்னை இரட்சித்துக் கொள்ளும். கிறீஸ்துவினுடைய திரு இரத்தமே, எனக்கு திருப்தியுண்டாகப் பண்ணியருளும். கிறீஸ்துவினுடைய விலாவினின்று ஓடி விழுந்த திருத்தண்ணீரே, என்னைக் கழுவியருளும். கிறீஸ்து வினுடைய திருப்பாடுகளே, எனக்குத் தேற்றரவுண்டாகப் பண்ணியருளுங்கள். ஓ என் நல்ல சேசுவே, நான் கேட்கிறதைத் தந்தருளும். உம்முடைய திருக்காயங்களுக்குள்ளே என்னை வைத்து மறைத்துக் கொள்ளும்.  என்னை உம்மை விட்டுப் பிரிய விடாதேயும்.  துஷ்ட சத்துருக்களிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளும். என் மரணத் தறுவாயில் நீர் என்னை அழைத்து உம்முடைய சந்நிதியில் உட்பட்ட சகல அர்ச்சியசிஷ்டவர்களோடு கூட நான் உம்மை ஊழியுள்ள காலம் தோத்திரம் பண்ணும்படி அடியேன் உம்முடைய சந்நிதியில் வரக் கற்பித்தருளும்.  ஆமென்.

குரு நற்கருணையை உட்கொண்டபின் ஆசீர்வாதம் கொடுக்கிற மட்டும்

சேசுநாதர் பிறந்த காலந்துவக்கி நடுத்தீர்வை காலமட்டும் கிறீஸ்தவர்கள் சர்வேசுரனைத் தோத்திரஞ் செய்கிறதை எண்ணிக்கொள்.  

சுவாமி!  தேவரீர்பேரில் பக்தியாயிருக்கிற இத்தனையாயிரம் பேர்களைக் கண்டு நாங்களும் உமது பேரில் பக்தியாயிருந்து உம்மைத் தோத்திரம் பண்ணக் கிருபை பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம்.

பூசை முடிந்து குரு ஆசீர்வாதம் கொடுக்கிறபோது

உலகம் முடிந்தபின் மரித்தவர்களெல்லாரையும் அவரவர் ஆத்தும சரீரத்தோடே எழுப்பி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் சுதனாகிய சர்வேசுரன் மகா மகிமைப் பிரதாபத்தோடு எழுந்தருளி வந்து அவரவர் செய்த பாவ புண்ணியங்களை அனைவருக்கும் அறியப்பண்ணி அளவற்ற நீதியால் தமது இடது பாரிசத்திலிருக்கிற பொல்லாதவர்களைச் சபித்து ஆத்தும சரீரத்தோடே நரகத்திலே தள்ளி, மட்டற்ற தயவால் தமது வலது பாரிசத்திலிருக்கிற நல்லவர்களுக்கு ஆசீர்வாதங் கொடுத்து, ஆத்தும சரீரத்தோடு அவர்களை மோட்ச இராச்சியத்துக்குக் கூட்டிக்கொண்டு போவாரென்று நினைத்துக்கொள். 

சுவாமி!  தேவரீராலே தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்குள்ளே நாங்களும் ஒருவராயிருந்து தேவரீருடைய பரிபூரண ஆசீர்வாதமடைந்து நித்திய காலமும் உம்மைப் போற்றிப் புகழ்ந்து இறைஞ்சித் தொழுது தோத்திரம் பண்ண எங்களுக்கு அநுக்கிரகம் தந்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

ஆசை நன்மை உட்கொள்ளுதல்

ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்த உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லவும். 

உத்தம மனஸ்தாப மந்திரம்

சர்வேசுரா சுவாமி!  தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன்.  இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப் படுகிறேன். எனக்கு இதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை.  எனக்கு இதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை.  இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலம் போதாததால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்களைப் பார்த்து, என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களையயல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.  ஆமென்.

ஆசை நன்மைக்கு ஆயத்த ஜெபம்

என் திவ்விய அன்பனுமாய் நாதனுமாயிருக்கிற பரம கர்த்தாவே! எனக்கு மிகவும் பிரிய சேசுவே! என் பாக்கியமே, என் சந்தோஷமே, என் இருதயமே, என் கண்மணியே, ஆ! என் அன்பே, என்னிடத்தில் எழுந்தருளி வாரும்.  பசி தாகத்தை அனுபவிக்கிறவர்கள் எவ்வளவு ஆவலுடன் போஜனமும் தண்ணீரும் தேடுகிறார்களோ, அப்படியே என் ஆத்துமம் தேவரீரை மிகுந்த ஆவலுடன் தேடுகிறது சுவாமி!  சீக்கிரமாக வாரும்.  தாமதம் செய்யாதேயும்.  நீர் ஒரு நாழிகை தாமதம்செய்கிறது எனக்கு ஒரு வருஷம் போலிருக்கிறது. உம்முடனே ஒன்றிக்க வேண்டுமென்கிற ஆசையின் மிகுதியினால் என் ஆத்துமம் மயங்கிக் களைத்துப்போகிறது சுவாமி.

ஆண்டவரே தேவரீர் என் உள்ளத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்.  தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லியருளும்.  என் ஆன்மா குணமடையும். (மூன்று தடவை).

ஆசை நன்மை ஜெபம்

என் சேசுவே!  தேவரீர் மெய்யாகவே நற்கருணையில் இருக்கிறீரென்று நான் விசுவசிக்கிறேன்.  எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன். என் ஆத்துமத்திலே உம்மைக் கொண்டிருக்க நான் மிகவும் ஆசிக்கிறேன்.  இப்பொழுது நான் தேவதிரவிய அனுமானத்தின் வழியாக உம்மை உட்கொள்ள முடியாமலிருப்பதால், என் ஆண்டவரே! ஞான விதமாய் என் இருதயத்தில் எழுந்தருளி வாரும்... ஆண்டவரே! நீர் என்னுள்ளத்தில் வந்திருக்கிறீர் என்று நான் நம்புகிறேன்.  என்னை முழுவதும் உம்முடன் ஒன்றிக்கிறேன்.  என்னை உம்மை விட்டு ஒருபோதும் பிரிய விடாதேயும் சேசுவே!  ஆமென்.

நமதாண்டவராகிய சேசுவின் சரீரமும் இரத்தமும் என் ஆத்துமத்தை நித்திய சீவியத்துக்குக் காப்பாற்றுவதாக. ஆமென். (மூன்று தடவை).

நன்றியறிதல் ஜெபம்

அர்ச். கன்னிமரியாயே!  சகல சம்மனசுக்களே, அர்ச்சியசிஷ்டவர்களே!  சுவாமி எனக்குச் செய்த உபகாரத்தின் பெருமை எத்தனை என்று உங்களுக்கு நன்றாய்த் தெரியும் என்கிறதினாலே அவருக்குத் தோத்திரம் செய்ய உங்களை மன்றாடுகிறேன்.  மட்டில்லாத சிநேகத்திற்கும் அளவில்லாத தோத்திரத்திற்கும் பாத்திரமாயிருக்கிற சர்வேசுரா! உமக்கே சதாகாலத்திற்கும் புகழ்ச்சியும் வாழ்த்துதலும் உண்டாகக் கடவது.

ஆமென்.