மரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?
மரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?
'விடியற்காலத்தின் நட்சத்திரம்' அல்லது 'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக்கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர்கள் விடிவெள்ளியைக் கொண்டே திசையை அறிந்ததால், இது 'கடலின் விண்மீன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே, மரியாள் என்றப் பெயரின் பொருளாகும். எனவே இயேசுவின் தாய் மரியாளை 'விடிவெள்ளி' என்று அழைப்பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. அதேநேரத்தில், இது கடவுளால் வழங்கப்பட்ட காரணப் பெயராகவும் விளங்குகிறது. ஏனெனில் இயேசு என்ற ஆதவனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியாகவே உலக வரலாற்றில் மரியாள் தோன்றினார்.
சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாள்வும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கிறார். கதிரவனின் பண்பு நலன்களை விடிவெள்ளி பிரதிபலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியாள் திகழ்கிறார். "இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாகவும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியாள் போற்றப்பெறுகின்றார். கத்தோலிக்கத் திருச்சபையும் பரிசுத்த ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது." (திருச்சபை எண். 53) "இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்." (திருச்சபை எண். 54) எனவே, நமக்கு இறையாட்சியின் விடியலைக் காட்டும் விடிவெள்ளியாக மரியாள் விளங்குகிறார் என்பதில் சந்தேகமில்லை.
கீழ்த்திசை அடிவானத்தில் தோன்றும் விடிவெள்ளி, கடல் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர வழி செய்கிறது. நீண்ட நெடிய கடல் பயணத்தில் நம்பிக்கைச் சுடராக விடிவெள்ளி திகழ்கிறது. அவ்வாறே, மரியாளும் மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். முதிர்ந்த வயதில் கருவுற்ற எலிசபெத்துக்கும், கானா ஊர் திருமண வீட்டினருக்கும் தேவையறிந்து உதவி செய்ததன் மூலம் மரியாள் நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியாள் தயாராக இருக்கிறார். "இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கயின் அடையாளமாக மரியாள் ஒளிர்கின்றார்." (திருச்சபை எண். 68)
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.