மரியாள் முக்கியமானவர் என்றால் நற்செய்தி
மரியாள் முக்கியமானவர் என்றால் நற்செய்தி நூல்களில் அவரைப் பற்றி சிறிதளவு மட்டுமே எழுதப்பட்டிருப்பது ஏன்?
இறைமகன் இயேசுவின் வாழ்வையும், வழிகாட்டுதலையும் நமக்கு வழங்கவே நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. "மனிதராய் பிறந்தவர்களுள் பெரியவர்" (மத்தேயு 11: 11) என்று இயேசுவால் போற்றப்பட்ட திருமுழுக்கு யோவானைப் பற்றியும், "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தப்பட்ட கன்னி மரியாளைப் பற்றியும் நற்செய்திகள் அதிகமாக பேசவில்லை என்றாலும், மீட்புத் திட்டத்தில் அவர்களின் பங்கைத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றன. "தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் தோன்ற" (லூக்கா 1:70) முழு மனதோடு ஒத்துழைத்தவர் என்பதால், இறைவனின் திட்டத்தில் மரியாள் முக்கியமானவர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இயேசு வைக் கருத்தாங்கியது முதல் கல்லறையில் வைத்தது வரையிலான மரியாளின் பங்கேற்பை நற்செய்தி நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
உன்னதரான இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்குமாறு, "கடவுளின் அருளை மரியாள் கண்டடைந்தார்." (லூக்கா 1:30) கணவரை அறியாத கன்னியாக இருந்தும், "ஆண்டவர் தமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பியதால் மரியாள் பேறுபெற்றவரானார்." (லூக்கா 1:45) இவ்வாறு கடவுளின் திட்டத்துக்கு தம்மையே அடிமையாக கையளித்த மரியாளை "எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்பர்." (லூக்கா 1:48) இறைவார்த்தையான இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்த மரியாள், 'இறைத் திட்டத்தின்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தபோது, "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:35) என்ற இறைவாக்கு மரியாளுக்கு அருளப்பட்டது.
குழந்தை இயேசுவைக் காண வந்த கீழ்த்திசை ஞானிகள், "குழந்தையை அதன் தாய் மரியாள் வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள்." (மத்தேயு 2:11) இயேசு எப்போதும் தம் தாய் மரியாளுக்குப் பணிந்து நடந்தார். (லூக்கா 2:51) அன்னை மரியாளின் நம்பிக்கையால், கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீர திராட்சை இரசமாக மாற்றினார். (யோவான் 2:1-11) 'மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாய் மரியாள் அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்.' (மத்தேயு 12:46) இவ்வாறு இயேசுவின் விருப்பத்தை அறிந்து நடக்க, மரியாள் எப்போதும் ஆவலாய் காத்திருந்தார். இறுதியாக சிலுவை அருகில் நின்ற மரியாளை, இயேசு தம் சீடருக்கு தாயாக அளித்தார். (யோவான் 19:25-27) அந்த தாயை மதித்து போற்றுவது நம் கடமையாகும்
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.