உலக வரலாற்றில் பிறந்த மரியாளை 'வானதூதர்களின் அரசி' என்று எப்படி அழைக்க முடியும்?
உலக வரலாற்றில் பிறந்த மரியாளை 'வானதூதர்களின் அரசி' என்று எப்படி அழைக்க முடியும்?
மரியாள் உலக வரலாற்றில் பிறந்தவர் தான் என்றாலும், அவரது பிறப்பு கடவுளின் மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது. வரலாற்றுக்கு முன்பே, இறைமகனின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் அன்னை மரியாள். இறைவனின் மீட்புத் திட்டத்தை எதிர்த்த வானதூதர்களே அலகைகள் என்று பெயர் பெற்றதாக திருச்சபை கற்பிக்கிறது. மனித வரலாற்றில் தம்மை வெளிப்படுத்த விரும்பிய இறைவன், கன்னி மரியாளின் மகனாக இவ்வுலகில் தோன்ற விரும்பினார். இந்த திட்டத்தை வானதூதர்களுக்கு வெளிப்படுத்திய கடவுள், இறைமகனையும் இறை அன்னையையும் வணங்குமாறு கட்டளையிட்டார். இதை ஏற்று அதிதூதர் மிக்கேலின் தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு வானதூதர்கள், கன்னி மரியாளையும் குழந்தை இயேசுவையும் வணங்கியதாக கிறிஸ்தவ மரபு கூறுகிறது. இதிலிருந்தே, மரியாள் வானதூதர்களின் அரசி என்பதை உணர முடிகிறது.
"வானதூதர்களைவிடத் தாழ்ந்த இனத்தில் பிறக்கும் இறைமகனையும், அவரது தாயையும் வணங்க முடியாது" என்று கூறி, லூசிபர் தலைமையில் மூன்றாவது பங்கு வானதூதர்கள் கிளர்ந்தெழுந்தனர். மிக்கேலும் அவரோடு சேர்ந்த தூதர்களும் லூசிபரின் கூட்டத்துக்கு எதிராக போரிட்டு, அவர்களை விண்ணகத்தில் இருந்து வெளியேற்றியதாக திருச்சபைத் தந்தையர் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே, மனித குலத்தை பாவத்தில் வீழ்த்த தொடக்கம் முதலே அலகை சூழ்ச்சி செய்து வருகிறது. கடவுளின் திட்டத்துக்கு எதிராக மனிதரை செயல்படத் தூண்டும் வகையிலே அலகை எப்போதும் விழிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தனது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த வானதூதர்களின் அரசியான கன்னி மரியாளை, மனிதர்களும் வணங்கவிடாமல் தடுப்பது அலகையின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, இறைமகனின் தாய் என்ற உன்னத நிலையே கன்னி மரியாளுக்கு வானதூதர்களின் அரசியாகத் திகழும் மாண்பை அளித்துள்ளது. இவ்வுலக ஆட்சியாளர்களின் செயல்பாட்டில், அவர்களது குடும்பத்தினருக்கு உள்ள செல்வாக்கை காண்கிறோம். அவ்வாறே, அனைத்துலக அரசர் இயேசுவின் தாயான மரியாள் அனைத்துக்கும் அரசியாகத் திகழ்கிறார். "தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாக கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய மரியாள் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார்." (திருச்சபை எண். 66) மேலும், "அருள்நிறைந்த மரியே வாழ்க! கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1:28,30) என்று கபிரியேல் தூதரால் வாழ்த்தப் பெற்ற கன்னி மரியாளை, வானதூதர்களின் அரசி என்று அழைப்பதில் தவறொன்றும் இல்லை.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.