சேசுவின் திரு இருதயத்துக்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
சேசுவின் திரு இருதயத்துக்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
கிறீஸ்தவக் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்க உமக்குள்ள ஆவலை அர்ச்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாள் வழியாய் தெரிவித்த சேசுவின் திரு இருதயமே! எங்கள் குடும்பத்தின் மட்டில் உமக்குள்ள சர்வ அதிகாரத்தை பிரத்தியட்சமாய் அங்கீகரிக்கும்படி இதோ இன்று இங்கே கூடியிருக்கிறோம்.
இன்று முதல் உமது ஜீவியத்தைப் பின்பற்றி நடக்க ஆசிக்கிறோம். நாங்கள் யாவரும் சமாதானமாய் ஒத்து வாழ்வதற்கு அவசரமான புண்ணியங்கள் இந்தக் குடும்பத்தில் நாளுக்கு நாள் விர்த்தியடைய வேணுமென்று விரும்புகிறோம். நீர்தாமே ஜெயித்து விலக்கியிருக்கும் உலக பற்றுதல்களையெல்லாம் எங்களைவிட்டு அகற்றிப்போட ஆசிக்கிறோம். கபடற்ற எங்கள் விசுவாசத்தின் காரணத்தால் எங்கள் புத்தியில் அரசாள்வீராக! முழு இருதயத்தோடு உம்மை நேசிப்பதால், எங்கள் இருதயங்களில் அரசராக வீற்றிருப்பீராக! திவ்விய நற்கருணையில் உம்மை அடிக்கடி உட்கொள்ளுவதினால் எங்கள் சிநேகத்தை அதிகரித்தருளும்.
ஓ சேசுவின் திரு இருதயமே! எங்கள் மத்தியில் உமது சிம்மாசனத்தை ஸ்தாபித்து, ஆத்தும சரீர விஷயமாய் நாங்கள் செய்யும் முயற்சிகளை ஆசீர்வதித்தருளும். சகல கவலை விசாரங்களையும் எங்களிடத்திலிருந்து நீக்கியருளும். எங்கள் இன்பங்களை அர்ச்சித்துத் துன்பங்களினின்று எங்களை இரட்சித்தருளும்.
எங்களில் யாராகிலும் உம்மை எப்போதாவது மனநோகப் பண்ணுவோமானால் ஓ! பரிசுத்த திரு இருதயமே! மனஸ்தாபப்படும் பாவியின் மட்டில் நீர் இரக்கமும் தயையுமுள்ளவரென்பதை நினைவு கூர்ந்தருளும். நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியும்படி எங்களுக்குள் மரணம் நேரிடும்போது, மரிக்கிறவர்களும் உயிரோடிருப்பவர்களும் எல்லோரும் உமது திருச்சித்தத்துக்கு அமைந்தவர்களாய் நடப்போம். கடைசியாய் ஒருநாள் நாங்களெல்லாரும் மோட்ச இராச்சியத்தில் ஒன்று கூடி உமது மகிமை வரப்பிரசாதங்களை சதாகாலமும் துதித்துத் தோத்தரிக்கும் பாக்கியம் கிடைக்குமென்ற நம்பிக்கையால் ஆறுதலடைவோம். இந்த எங்கள் காணிக்கையை அர்ச்சியசிஷ்ட மரியாயின் மாசற்ற இருதயமும் மகிமை நிறைந்த பிதாப் பிதாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் உம்மிடம் செலுத்தி, எங்கள் ஜீவிய காலத்தில் ஒவ்வொரு நாளும் நாங்கள் அதை மறவாதிருக்கும் படி எங்களுக்கு உதவி செய்வார்களாக.
எங்கள் அரசரும் தந்தையுமாகிய சேசுவின் திரு இருதயம் துதிக்கப்படுவதாக.
(குறிப்பு: மிகவும் விசேஷமான இவ்வேளையில் நமது குடும்பத்தில் இருந்த சகலரையும் நினைவுகூர்ந்து கொள்ளுவது நல்லது. ஆகையால் மரித்துப் போன உறவினர்க்காகவும், வேறு இடங்களுக்குப் போயிருக்கும் உறவினர்களுக்காகவும், ஒரு பர. அருள். திரி. வேண்டிக்கொள்ளவும்.
இவை யாவும் முடிந்தபின், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட இடத்தில் திரு இருதயப் படத்தை ஸ்தாபித்துச் சகலரும் பின்வரும் செபத்தைச் சொல்லக் கடவார்கள்.)
ஜெபம்
ஆயிரக்கணக்கான மற்ற அநேக குடும்பங்களுக்குள் இக்குடும்பத்தைத் தமது சிநேகத்துக்கு உரிமையாகவும் மனுமக்களால் தமக்கு நேரிடும் நன்றிகெட்டதனத்துக்குப் பரிகாரமான வாசஸ்தலமாகவும் தெரிந்தெடுத்துக் கொள்ளச் சித்தமான சேசுவின் திரு இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக!
ஓ ஆண்டவரே! எங்கள் குடும்பத்துக்குத் தலைமையாக உம்மை ஏற்றுக் கொள்ளும்படி எங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தைப்பற்றி ஏழைகளாகிய நாங்கள் என்ன சொல்லக் கூடும்? எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்து நமஸ்கரிக்கிறோம். எங்களுக்கு நேரிடும் துன்பதுரிதங்கள், இன்ப சந்தோஷங்கள் மனக்கவலையாகிய சகலத்திலும் நீர் எங்களோடிருப்பதைப்பற்றி மனமகிழ்கிறோம். நீசராகிய எங்கள் குடிசைக்குள் தேவரீர் எழுந்தருளி வர நாங்கள் பாத்திரவான்களல்ல. ஆனால், உமது திரு இருதய சோபனத்தை எங்களுக்கு விளக்கிக் காட்டும் உன்னத மொழிகளை திருவாய் மலர்ந்திருக்கிறீராகையால், எங்களாத்துமம் உம்மையே நாடித் தேடுகிறது. ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட உமது விலாவினின்று ஓடிவரும் ஜீவிய ஊற்றில் எங்கள் ஆவலைத் தீர்ப்போம்.
முடிவில்லாத ஜீவியத்துக்கு ஊற்றும் மூலமுமாயிருக்கும் உமக்கே எங்களை முழுவதும் கையளிக்கிறோம். ஓ சேசுவின் திரு இருதயமே! எங்களை விட்டு ஒருபோதும் பிரியாதேயும். உம்மையே நேசிக்கவும் மற்றவர்களும் உம்மை நேசிக்கும்படி செய்யவும் இதுமுதற்கொண்டு உழைத்து வருவோம். உலகத்தை பரிசுத்தமாக்கும்படி, அதை சுட்டெரிக்கும் தேவ அக்கினி நீரே. பெத்தானியாவில் உமக்கு இல்லிடம் கொடுத்த வீடு போல இந்த வீடும் உமக்குப் பிரியமுள்ளதாயிருப்பதாக! உமது திரு இருதயத்தோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தெரிந்து கொள்ளும் பரிசுத்த ஆத்துமாக்கள் இந்த வீட்டிலும் காணக் கிடைப்பார்களாக! அத்தியந்த நேசமுள்ள இரட்சகரே, எகிப்து தேசத்துக்கு நீர் சிறு குழந்தையாய் போனபொழுது, உமக்குக் கிடைத்த தாழ்மையான இல்லிடம் போலவென்கிலும் இவ்வீடு இருக்கும்படி செய்தருளும்.
சேசுநாதரே சுவாமி! எழுந்தருளிவாரும். நாசரேத்தூரில் உமது திருத்தாயார் எவ்விதமாய் நேசிக்கப்பட்டார்களோ, அவ்விதமே இங்கேயும் அவர்களை உருக்கமாய் சிநேகித்து வருவோம். ஓ! மிகவும் பிரமாணிக்கமுள்ள உத்தம சிநேகிதரே! எங்கள் கஸ்தி, துன்ப வேளையில் நீர் இருந்திருப்பீரானால், எங்களுக்கு ஆறுதலாயிருந்திருக்கும். ஆகிலும் எங்கள் இக்கட்டுக்காலம் இன்னும் முடியவில்லையாதலால், இப்போதே எழுந்தருளி வாரும். எங்களோடே வாசம்செய்யக் கிருபை கூர்ந்தருளும். ஏனெனில், மாய உலகம் எங்களை மயக்கி உம்மை மறந்து போகும்படி ஏவித் தூண்டுகிறது. நாங்களோவெனில் உம்மோடு என்றென்றைக்கும் ஐக்கியமாயிருக்க ஆசையாயிருக்கிறோம். நீரே எங்களுக்கு வழியும் உண்மையும் ஜீவியமுமாயிருக்கிறீர். பூவுலகில் நீர் மனுமகனாய் சஞ்சரித்த காலத்தில் உரைத்தது போல், “இன்று இந்த வீட்டில் நான் தங்கி வசிப்பேன்” என்று உமது திருவாய் மலர்ந்து எங்களுக்கும் சொல்வீராக. ஆண்டவரே, இதை உமது வாசஸ்தலமாக்கியருளும். நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தித் துதித்து, எப்போதைக்கும் உம்மோடு, உமக்குப் பிரியமுள்ளவர்களாக ஜீவிக்கும்படி உதவி செய்தருளும்.
ஓ, சேசுவே! ஜெயசீலரான ஆண்டவரே, உமது இருதயம் என்றென்றைக்கும் இவ்வீட்டில் சங்கித்து துதிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக! ஆமென்.
(இதன்பின் தேவமாதாவுக்குத் தோத்திரமாக “கிருபை தயாபத்து மந்திரம்” சொல்லவும்.)
சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும். (மும்முறை)
அர்ச்சியசிஷ்ட மரியாயின் மாசற்ற இருதயமே, எங்கள் இரட்சண்யமாயிரும்.
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்சியசிஷ்ட மார்கரீத் மரியம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
(இந்த செபங்களெல்லாம் முடிந்த பிறகு குருவானவர் அங்கு கூடியிருக்கும் சகலரையும் ஆசீர்வதிப்பார். அந்த ஆசீர்வாதத்தோடு சடங்கு முடிவு பெறும்.)
பலன்கள்
1. தங்கள் குடும்பத்தில் திரு இருதய அரசாட்சியை நிறுவும் சமயத்தில் அங்கு வந்திருக்கும் அக்குடும்பத்திலுள்ள அனைவரும், ஏழு வருடம் ஏழு மண்டலப் பலன் அடையலாம்.
2. பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்கி, அதே நாளில் ஒரு கோவிலை சந்தித்து அர்ச்சியசிஷ்ட பாப்பானவருடைய கருத்துக்காக வேண்டிக் கொள்பவர்கள் ஒரு பரிபூரண பலன் அடைவார்கள்.
3. ஸ்தாபகச் சடங்கு செய்த வருடாந்திர நாளில், திரு இருதயப் படத்திற்கு முன்பாகத் தங்களைத் தானே திரும்பவும் ஒப்புக் கொடுத்து தங்கள் காணிக்கையைப் புதுப்பிப்பார்களானால் 300 நாட் பலன் உண்டு.
அநுதினம் சொல்லத் தக்க ஜெபம்
ஓ சேசுவின் திரு இருதயமே! உம்முடைய இராச்சியம் வருக! சகல ஜாதி ஜனங்களுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக! உமக்குப் பிரமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திரமல்ல, ஊதாரியைப் போல் உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கும் தேவரீர் உத்தம அரசராயிருப்பீராக.
சமாதானத்தின் இராக்கினியான அர்ச்சியசிஷ்ட மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக, இந்த தேசத்தில் உமது இராச்சியபாரத்தை ஸ்தாபிப்பீராக! எங்கும் குடும்பங்களில் பிரவேசித்து அவைகளை உமக்கே சொந்தமாக்கியருளும். இவ்விதமாக உலகத்தின் ஒரு கோடி முனை துவக்கி மறுகோடி முனை மட்டும் “நமது இராஜாவாகிய சேசுநாதரின் திருஇருதயம் வாழ்த்தப்படுவதாக! என்றென்றைக்கும் அத்திரு இருதயம் புகழப்படுவதாக” என்று ஒரே குரலொலியாயிருப்பதாக! ஆமென்.
(இச்செபத்தை, இரவில் குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றுகூடி பொது செபநேரத்தில் சொல்லவும்.)
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.