சேசுநாதருடைய திரு இருதயத்துக்குத் தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்
சேசுநாதருடைய திரு இருதயத்துக்குத் தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்
சேசுவின் திரு இருதயமே! கிறீஸ்தவக் குடும்பங்களுக்குத் தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம்.
நேசமுள்ள சேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவனாவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவன் குற்றத்துக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்குக் கிருபை செய்தருளும்.
இதுவுமன்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்குப் பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலை மாட்டில் தேவரீர்தாமே விழித்துக் காத்திருப்பீராக.
சேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே, சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வபயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.
திவ்விய சேசுவே! முறைமுறையாய் உமது திருச்சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும்.
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.