11-ம் பத்திநாதர் பாப்பானவரால் அங்கீகரிக்கப்பட்ட சேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

(கிறீஸ்து ராஜாவின் திருநாளன்று, திவ்விய நற்கருணை ஸ்தாபிக்கப்பட்டிருக்க, இந்த ஜெபத்தையும் சேசுவின் திரு இருதயப் பிரார்த்தனையையும் ஜெபிக்க வேண்டும்.)

ஓ! மிகவும் மதுரம் நிறைந்த சேசுவே!  மனுக்குலத்தின் இரட்சகரே!  உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீருக்குச் சொந்தமானவர்கள். உமக்குச் சொந்தமாகவே நாங்களிருக்கும்படி ஆசையாயிருக்கிறோம்.  இன்னும் அதிக உண்மையாய்த் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக எங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

சுவாமி! மனிதர்களுக்குள்ளே அநேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை.  வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப் போட்டார்கள்.  ஓ! மகா தயாளம் நிறைந்த சேசுவே!  இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தண்டையில் இழுத்தருளும்.  ஆண்டவரே, உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறீஸ்தவர்களுக்கு மாத்திரமின்றி உம்மை விட்டு பிரிந்து போன ஊதாரிப் பிள்ளைகளுக்கும் தேவரீர் ராஜாவாயிருப்பீராக. இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி, தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்து போயிருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் இராஜாவாயிருப்பீராக!  எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையும் சத்தியத்தின் துறைமுகத்திற்கும் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். அஞ்ஞான அந்தகாரத்தில் இன்னும் அமிழ்ந்திருக்கும் ஜனங்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக.  இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், சர்வேசுரனின் இராச்சியத்திற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாயிருந்தவர்களின் மக்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்! தங்கள் பேரில் சாபமாக விழவேண்டுமென்று அவர்கள் கூவி அழைத்த திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.

ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்துத் திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல தேசத்து ஜனங்களுக்கும் ஒழுங்கு கிரமத்தையும் சமாதானத்தையும் தந்தருளும்.  இப்பூமியில் ஒரு கோடிமுனைமுதல் மறு கோடி முனை மட்டும் ஒரே குரல் சத்தமாய், “நமக்கு இரட்சணியம் கொண்டு வந்த திவ்விய இருதயத்திற்கு தோத்திரம் உண்டாவதாக.  மகிமையும் வணக்கமும் சதாகாலமும் உண்டாவதாக” என்ற புகழ், விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. 

ஆமென்.