சிலுவையில் அறையுண்டிருக்கும் கர்த்தரை நோக்கி ஜெபம்

திவ்விய சேசுவே!  பூலோக இரட்சண்ணியத்தினிமித்தம் தேவரீர் மனிதாவதாரமெடுத்துப் பிறந்தீர்! விருத்தசேதனப்பட்டீர்; யூதர்களாலே புறக்கணிக்கப்பட்டீர்; துரோகியான யூதாசினால் முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்டீர்; சங்கிலியால் கட்டுண்டு, மாசற்ற செம்மறிப் புருவையைப் போல கொலைக்களத்துக்கு நடத் திக்கொண்டு போகப்பட்டீர். அன்னாஸ், கைபாஸ், பிலாத்து, ஏரோது இவர்கள் சமூகத்தில் அவமானமாய் நிறுத்தப்பட்டீர்.  பொய்ச்சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டீர்.  சாட்டை, கசை வார்களினால் அடிக்கப்பட்டீர். நிந்தை கோரணியாய்த் திருக்கண்கள் மூடிக் குட்டப்பட்டீர்; திருமுகத்தில் துப்பப்பட்டீர்; முள்முடி சூட்டப்பட்டு, மூங்கிற்றடியால் அடிக்கப்பட்டீர்; திருச் சட்டைகள் உரியப்பட்டீர்; ஆணிகளால் சிலுவையில் அறையுண்டு உயர்த்தப்பட்டீர்;  கள்ளர்களில் ஒருவனாய் எண்ணப்பட்டீர்; பிச்சுக் கலந்த புளித்த காடி குடிக்கக் கொடுக்கப்பட்டீர்; ஈட்டியால் குத்தப்பட்டீர்; என் ஆண்டவரே, சுவாமி! அடியேன் எவ்வளவு பாவியாயிருந்தாலும் நான் இப்போது தியானித்துப் பூசிக்கும் உமது திருப் பாடுகளைக் கொண்டும் உமது திருச்சிலுவை மரணத்தைக் கொண்டும் என்னை நரக ஆக்கினையினின்று மீட்டு இரட்சித்து உமது வலது பாரிசக் கள்ளனுக்கு கட்டளையிட்ட மோட்ச பாக்கியத்தில் அடியேனையும் சேர்க்க தயை புரியும்.  பிதாவோடேயும், இஸ்பிரீத்துசாந்துவோடேயும் சதாகாலம் சுயஞ்சீவியராய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே.  

ஆமென்.