சுவாமி பிறந்த திருநாளுக்கு முந்தி நவநாள் ஜெபம்
சுவாமி பிறந்த திருநாளுக்கு முந்தி நவநாள் ஜெபம்
1-வது. சகல பிரமாணமற்ற அப்பிரமாணமான ஞானமே, தேவரீர் நித்திய பிதாவின் புத்தியினால் நிட்களமாகி ஓர் எல்லையில் நின்று மறு எல்லைக்கான சகலத்தையும் வல்லபமாகவும் மதுரமாகவும் நடப்பிக்கிறீரே. ஈடேற்றத்தினும் விமரிசையினும் வழியை எங்களுக்குப் படிப்பிக்க வந்தருளும் சுவாமி, வந்தருளும். அருள்...
2-வது. சகல பரியந்தமற்ற அபரிமித வல்லமையே, தேவரீர் உமது திருவாக்கினால் மாத்திரம் சகலத்தையும் உண்டாக்கி அதெல்லாவற்றையும் உமது திருச்சித்தத்தினால் மாத்திரம் நடப்பிக்கிறீரே. உமது திருக்கர வல்லமையோடு பசாசின் தந்திரங்களினின்று எங்களை இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
3-வது. சகல அளவற்ற அப்பரியந்த நேசமே, தேவரீர் மண்ணால் உண்டாக்கின மனுஷன் பேரில் அதிக தயவைக் காட்டத் திருச்சித்தமானீரே. இப்போது எங்கள் ஆத்துமாக்களோடு ஞானவிவாகம் பண்ணி உமது பத்தினிகளாகக் கைக்கொள்ள வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
4-வது. சகலாதிகர்த்தனே, இஸ்ராயேல் குடும்பத்தின் திவ்ய பரிபாலனே, தேவரீர் மோயீசனுக்கு முள்ளுமரத்தின் அக்கினிச் சுடரோடு காணப்பட்டுச் சீனாய் மலையில் அவருக்கு உமது வேதத்தைக் கொடுத்தருளினீரே. உமது திருக்கர வல்லமையோடு எங்களை இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
5-வது. சகல பிரஜைகளுக்கும் அடையாளமான ஏசேயின் மூலிகையே, உமது திவ்விய சந்நிதானத்தில் ஆசாரநிமித்தமாய் ஜனங்கள் மெளனமாக உம்மைப் பிரார்த்திப்பார்களென்று சொல்லப்பட்டதே. தாமதப்படாமல் எங்களை இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
6-வது. தாவீது இராயனுடைய திறவுகோலே, இஸ்ராயேல் வீட்டின் செங்கோலே, தேவரீர் திறக்கவும் ஒருவனும் பூட்டவும், தேவரீர் பூட்டவும், ஒருவனும் திறக்கவும் மாட்டானல்லோ. சிறைச்சாலையிலும் அந்தகாரங்களிலும் மரண நிழலிலும் கட்டப்பட்டவர்களை அவிழ்க்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
7-வது. கிழக்கில் உதித்த ஆதித்தனே, நித்திய பிரகாசத்தின் சுடரே, நீதியின் சூரியனே! அந்தகாரங்களிலும், மரண நிழலிலும் வசிக்கிற வர்களைப் பிரகாசிப்பிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
8-வது. ஜனங்களின் இராயனே, அவர்களால் ஆசிக்கப்படுகிறவரே, தேவரீர் மூலைக்கல்லாகி இரு சுவர்களையும் ஒன்றாக்கினீரே. மண்ணினால் தேவரீர் உண்டாக்கின மனிதரை இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
9-வது. எங்கள் கர்த்தாவான தேவனாகிய எம்மானுவேலே, எங்கள் இராயனே, எங்கள் வேதாந்தியே, ஜனங்களின் நம்பிக்கையே, அவர் களுடைய இரட்சாதிகாரனே, எங்களை இரட் சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...
நாங்கள் சேசுக்கிறீஸ்துவின் வாக்குத் தத்தங்களுக்குப் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். தேவ மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்.
அநந்த தயையுள்ள சர்வேசுரா! தேவரீர் மனிதருடைய மீட்புக்காக உமது திருச்சுதனை இவ்வுலகில் அனுப்பி அவர் ஒன்பது மாதம் அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயின் உதரத்தில் வசிக்கத் திருச்சித்தமானீரே. அவருடைய கர்ப்ப வாசத்திற்குத் தோத்திரமாக நாங்கள் பண்ணுகிற இந்த ஆராதனையைக் கருணாகடாட்சமாய்க் கைக்கொண்டு அவருடைய பேறுபலன்களால் எங்கள் மீட்பின் பலனை நாங்கள் அடைந்து சதாகாலம் அனுபவிக்கக் கிருபை பண்ணியருள வேணுமென்று உம்மையே மன்றாடுகிறோம்.
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.