விருத்தசேதனத் திருநாள்.

திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு நிறைவேற்றப்படுகிறது.

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோயீசன் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள்.

இச்சடங்கை நிறைவேற்றும்போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இந்தச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டு மென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.

நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளை யையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் எழும் ஆசாபாச முதலிய ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தஞ் சிந்தப் பழகவேண்டும். கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது ஜீவியத்தில் வாழ்வ தற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

யோசனை

நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்யத் தீர்மானித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.