அர்ச். தீத்துஸ். மேற்றிராணியார்.
ஜனவரி 04
அர்ச். தீத்துஸ். மேற்றிராணியார்.
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச். சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச். சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார்.
வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ் அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு எவ்வளவு சிறப்போடும், அன்போடும் புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு திருப்பினாரெனில், இந்த நல்ல செய்தியைப்பற்றி கேள்விப்பட்ட அப்போஸ்தலர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் கொண்டார்.
தீத்துஸ் அர்ச். சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப் பின் அர்ச். சின்னப்பர் தீத்துஸுக்கு மேற்றிராணியார் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். மேற்றிராணிமாரின் மேலான கடமைகளைப்பற்றியும், விசுவாசிகளை நடப்பிக்கத் தக்க ஒழுங்கு திட்டங்களைப்பற்றியும் ஒரு நிருபத்தை அர்ச்.சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார்.
தம் குருவும் ஆசிரியருமான அப்போஸ்தலருடைய போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத் துடன் வேதம் போதித்து மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாம் யாதொரு காரியத்தில் தவறியிருப்பதை அறிந்த நமது ஞானப் போதகர்கள் நமக்கு புத்தி சொல்லும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.