ஜனவரி 12

அர்ச். அர்க்காதியுஸ் - வேதசாட்சி (கி.பி. 301). 

இவர் தியோக்கிளிஸியன் காலத்தில் வேதசாட்சியானாரென்று தெரிய வருகிறது. அக்காலத்தில் வேத கலாபனை வெகு குரூரமாய் நடந்தபடியால் அரசாங்க அதிகாரிகளும் ஊர் ஜனங்களும் தங்களிஷ்டப்படி கிறீஸ்தவர்களை வீடு வீடாய் நுழைந்து பிடித்து தங்களுடன் கொண்டு வந்திருக்கும் சிலைகளுக்குப் படைக்கும்படி கற்பிப்பார்கள். 

அப்படிச் செய்யாதவர்களை அங்கேயே வதைப்பார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட அர்க்காதியுஸ் நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று ஜெபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். 

ஒரு நாள் அரசாங்க அதிகாரிகள் இவருடைய வீட்டில் நுழைந்த போது, அவரை அங்குக் காணாதபடியால், அவர் பிடிபடும் வரையில் அவருடைய உறவினனான ஒருவனை சிறையிலடைத்தார்கள். 

இதைப்பற்றி அர்க்காதியுஸ் கேள்விப்படவே, நாட்டு அதிகாரியிடம் சென்று "நான்தான் அர்க்காதியுஸ். சிறையிலடைக்கப்பட்ட இந்த மனிதனை விட்டுவிடும்” என்றார். “நல்லது, தேவர்களுக்கு பலியிட்டால், உன்னையும் விடுதலை செய்வேன்” என்றதற்கு, "சிரஞ்சீவியரான கடவுளைத் தவிர, உங்கள் பொய்த் தேவர்களைக் கும்பிட மாட்டேன்” என்றார் அர்க்காதியுஸ். 

“அப்படியானால் நீ சாகவே சாவாய்” என்றான் அதிகாரி. அதற்கு அவர் “சேசு கிறிஸ்துநாதரே என் உயிரும், மரணமும், நித்திய சம்பாவனையுமாய் இருக்கிறார்” என்றார். 

அதைக் கேட்ட நடுவன் சினம் கொண்டு, அவருடைய அவயவங்களைத் துண்டு துண்டாய் நறுக்கி சித்திரவதைப்படுத்தக் கட்டளையிட்டான். கொலைஞரும் அவ்வாறே செய்தார்கள். 

அர்க்காதியுஸ் தமக்குமுன் குவிக்கப்பட்டிருக்கும் அவயவங்களின் குவியலை கண்ணோக்கி, "என் அவயவங்களே நீங்கள் ஒருநாள் நித்திய சம்பாவணையைப் பெறப்போவதால், நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள்” என்று கூறி உயிர் விட்டார்.

யோசனை

நம்மால் யாதொருவருக்குத் தீமை உண்டாகும்போது அதைத் தடுப்பது நமது கடமை.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பிஸ்கோப், ம. 
அர்ச். திகிரியஸ், கு. 
அர்ச். எல்ரெத், ம.