ஜனவரி 16

அர்ச். பெரிய மக்காரியார் - வனவாசி (கி.பி. 390). 

மக்காரியார் சிறு வயதில் ஆடு மாடுகளை மேய்க்கும்போது சிறுவருடன் சேர்ந்து சில அத்திக் கனிகளைத் திருடினதற்காகச் சாகும் வரையில் தபஞ் செய்து கண்ணீர் சொரிந்துவந்தார். 

இவர் இளம் பிராயத்தில் உலகத்தைத் துறந்து, சிறு குடிசையில் தனித்திருந்து ஜெபஞ் செய்வதிலும், பாய் முடைவதிலும் அலுவலாயிருந்தார். 

ஒரு துஷ்ட ஸ்திரீ, மக்காரியார் தன்னைக் கெடுத்துப்போட்டதாக ஊராருக்குச் சொன்னபோது, அவர்கள் அதை நம்பி, அவரை அவமானமாய் வீதி வீதியாய் இழுத்தடித்து, குரூரமாய் வதைத்தார்கள். மக்காரியார் இவைகளைப் பொறுமையுடன் சகித்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார். 

அந்த கெட்ட ஸ்திரீ பிரசவ வேதனையால் வேதனைப்படும்போது தேவ பயத்தால் தூண்டப்பட்டு, மக்காரியார் மாசற்றவரென்றும், தன்னைக் கெடுத்தவன் இன்னானென்றும் அறிவித்ததைக் கேட்ட ஊரார் அவரைப் பெரும் புண்ணியவானென்று கொண்டாடினார்கள். 

இந்த வீண் புகழ்ச்சிக்குத் தப்பித்துக கொள்ளும்படி மக்காரியார் வனத்துக்குச் சென்று ஜெபதபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்துவந்தார். அந்த வனாந்தரத்தில் இவர் அநேக கோவில்களைக் கட்டி வைத்ததினால் ஏராளமான துறவிகள் அங்கு வந்து கூடினார்கள். 

மக்காரியார் குருப்பட்டம் பெற்று சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். வாரத்தில் ஒரு தடவை மாத்திரம் புசிப்பார். கடினமான கோடைக் காலத்திலும் ஜலம் குடிக்கமாட்டார். சற்று நேரம் தலை சாய்த்து இளைப் பாறுவார். 

மரித்தவர்கள் உயிர்க்க மாட்டார்களென்று பிதற்றிய பதிதருக்கு வெட்கமுண்டாகும் பொருட்டு மரித்த ஒருவனை உயிர்ப்பித்தார். ஆரிய பதிதர் எஜிப்திலுள்ள வனவாசிகளை சிதறடிக்கும்படி ஒரு பட்டாளத்தை அனுப்பினார்கள். 

அநேக வனவாசிகள் அவர்கள் கையால் வேதசாட்சிகளானார்கள். பிறகு மக்காரியார், இசிதோர், பாம்போ முதலிய முனிவர்கள் நாடுகடத்தப் பட்டார்கள். அர்ச். மக்காரியார் அரிய பல புண்ணியங்களைப் புரிந்து 390-ம் ஆண்டில் மோட்ச சம்பாவனையை அடைந்தார்.

யோசனை 

நமக்கு உண்டாகும் துன்பங்கள் எவ்வளவு பெரிதாயினும் சர்வேசுரனை நம்பி பொறுமையைக் கைவிடாதிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஹோனோராத்துஸ், ம.மே.
அர்ச். மார்ஸெல்லஸ், பா.வே.