ஜனவரி 18

உரோமையில் அர்ச். இராயப்பருடைய பத்திராசனத் திருநாள்.

நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச். இராயப்பரை திருச்சபைக்கு காணப்படும் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும் அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வந்தார்கள். 

இவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார். 

ஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததினாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தையும் ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதித நன்மையுண்டாகுமென்று அர்ச். இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார். 

இவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்புமாரும் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.

யோசனை 

திருச்சபைப் போதகர்களாகிய மேற்றிராணிமார், குருக்கள் இவர்களை நாம் சங்கித்து அவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சின்னப்பரும் 36 துணை., வே. 
அர்ச். பிரிஸ்கா , க.வே.
அர்ச். தேயிகோலுஸ், ம. 
அர்ச். உல்பிரித், மே.வே.