ஜனவரி 21

அர்ச். ஆக்னேஸம்மாள் - கன்னிகை, வேதசாட்சி (கி.பி. 304).

ஆக்னேஸம்மாள் உரோமையில் பிறந்து சிறுவயதிலேயே தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். 

இவளுடைய உயர்குலப் பிறப்பையும், அழகையும், மிகுந்த செல்வத்தையும் பார்த்து பிரபுக்களான அநேக வாலிபர் அவளை மணமுடித்துக்கொள்ள விரும்பியபோது “என் கன்னிமையை என் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்தேன்” என்று அப்பெண் கூறியதை அவர்கள் கேட்டு சினங்கொண்டு அவள் கிறீஸ்தவளென்று நியாயாதிபதிக்கு அறிவித்தார்கள். 

நியாயாதிபதி ஆக்னேஸிடம் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் கிறிஸ்தவ வேதத்தை அவள் மறுதலிக்கும்படி கட்டாயப்படுத்தினான். அந்தப் பெண்மணி அதற்கு சம்மதியாதிருப்பதை அவன் கண்டு, அவள் கண்ணுக்கு முன் நெருப்பை மூட்டி, ஆணி, குரடு முதலிய ஆயுதங்களைப் பழுக்கக் காய்ச்சும்படி கட்டளையிட்டான். 

வேதசாட்சியோ அவைகளைக் கண்டு சற்றும் கலங்காதிருப்பதை அவன் கண்டு அவளை அஞ்ஞான கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் பொய்த் தேவர்களுக்குச் சாம்பிராணி புகைக்கும்படி கட்டளையிட்டான். அவளோ தன்மேல் சிலுவை வரைந்துக் கொண்டாளேயன்றி, சாம்பிராணியை தொடவில்லை. 

இதனால் அதிகாரி கோபவெறி கொண்டு, அவளை ஒரு விலைமாதர் வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய் அங்கே அவள் கற்பையழிக்கும்படி உத்தரவிட்டான். அப்போது அநேக வாலிபர் அவளைப் பின்தொடர்ந்தும் ஒருவித பயத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள். 

ஆனால் ஒருவன் மாத்திரம் அவளை அணுகின மாத்திரத்தில் மின்னலைப் போன்ற ஒருவித பிரகாசமான சக்தியால் குருடனாகி, கீழே விழுந்தான். அவனுடைய தோழரின் மன்றாட்டின்பேரில் ஆக்னேஸ் அவனுக்குப் பார்வைத் தந்தாள். 

இதையெல்லாம் கண்ட அதிகாரி வெட்கமும் சினமுங் கொண்டு, அவளைச் சிரச்சேதம் பண்ணும்படி கட்டளையிட, ஆக்னேஸ் தலை வெட்டுண்டு, கன்னிமை முடியும் வேதசாட்சி முடியும் பெற்று தன் தேவ பத்தாவிடஞ் சென்றாள்.

யோசனை 

தங்கள் கன்னிமையைத் தங்கள் தேவ பத்தாவுக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் அதை சாகும் வரையில் பழுதின்றிக் காப்பாற்றுவார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். புறுத்துவோஸுஸ், மே. 
அர்ச். விவியான், மே. து.