1. விசுவாசப் பிரமாணத்தின் 9-ம் சத்தியத்தின் இரண்டாம் பாகத்தைச் சொல்லு.

“அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.” 


101. அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனம் என்பதற்கு அர்த்தமென்ன?

பரிசுத்தவான்கள் எல்லோரும் சேசுநாதரோடு ஒரே ஞான சபை அங்கத்தினராயிருக்கிறார்கள் என்றும், திருச்சபையிலுள்ள ஞான நன்மைகளுக்கெல்லாம் பங்காளிகளாயிருக்கிறார்கள் என்றும் அர்த்தமாம்.


102. மேற்சொல்லிய பரிசுத்தவான்கள் யார்?

மோட்சத்திலுள்ள அர்ச்சியசிஷ்டவர்களும், உத்தரிக்கிற ஆத்துமாக்களும், பூமியில் வாழும் சத்திய திருச்சபையாருமே அந்தப் பரிசுத்தவான்களாம்.


1. சமுதீதம் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?

பொதுவானது, எல்லோருக்கும் சொந்தமானது என்று அர்த்தமாம்.


2. பிரயோசனம் என்பதற்கு அர்த்தமென்ன?

இவ்விடத்தில் பிரயோசனம் என்பதற்கு ஞான நன்மையென்று அர்த்தமாகும்.


3. அங்கத்தினர் என்றால் என்ன?

உறுப்புகள், அவயவங்கள் என்று அர்த்தமாம்.


4. பூமியில் வாழும் விசுவாசிகளைப் பரிசுத்தவான்கள் அல்லது அர்ச்சியசிஷ்டவர்கள் என்று சொல்லுவானேன்?

(1) அர்ச். சின்னப்பர் தாம் எழுதிய நிருபங்களில் கிறீஸ்தவர்களை அர்ச்சியசிஷ்டவர்கள் என்று அழைக்கிறார் (உரோ. 1:7, 1 கொரி. 1:2, கொலோ. 1:2).

(2) அவர்கள் ஞானஸ்நானத்தால் அர்ச்சிக்கப்பட் டிருக்கிறபடியினாலும், பரிசுத்த சீவியம் சீவித்து அர்ச்சியசிஷ்டவர் களாகும்படி அழைக்கப்பட்டிருக்கிறபடியினாலும் அவர்களுக்கு அந்தப் பெயர் பொருந்தும்.


5. சேசுநாதரோடு என்று சொல்லுவது ஏன்?

திருச்சபைக்குத் தலைவராகிய சேசுநாதரோடு ஒன்றித் திருக்கிறவர்கள் மாத்திரம், அவருடைய ஞான சரீரமாகிய திருச் சபையின் அவயவங்களாயிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் மாத்திரம் ஞான சரீரத்தின் பலன்களையெல்லாம் பெறக் கூடியவர் களாயிருக்கிறார்கள்.


6. அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேனென்னும் வார்த்தைகளின் அர்த்த மென்ன? 

(1) அர்ச்சியசிஷ்டவர்களும், உத்தரிக்கிற ஆத்துமாக் களும், இவ்வுலகிலுள்ள விசுவாசிகளும் திருச்சபையாகிய ஒரே மிஸ்திக்கு சரீரத்தின் அவயவங்கள்.

(2) இந்த ஞான சரீரத்துக்குத் தலை போலிருப்பவர் சேசுகிறீஸ்துநாதர்.

(3) இவர்கள் எல்லோரும் திருச்சபைக்குத் தலைவ ராகிய சேசுநாதரோடு ஞான அவயவங்கள்போல் ஒன்றித்திருக்கிற படியால், இந்தச் சபையின் ஞானப் பொக்கிஷங்கள் இவர்கள் எல்லோருக்கும் பொதுவாயிருக்கின்றன.  ஆதலால் இந்த ஞானத் திரவியத்தில் எல்லோருக்கும் பங்குண்டு என்று விசுவசிக்கிறோம்.


7. இந்தப் பங்காளித்துவத்துக்கு ஆதாரமென்ன? 

திருச்சபை ஓர் பெரிய குடும்பம் போலிருக்கிறது. ஒரு குடும்பத்திலுள்ளவர்களுக்குள் சுபாவ சம்பந்தம் இருக்கிறதுபோல், திருச்சபை என்னும் குடும்பத்திலுள்ளவர்களுக்குள் ஒரு ஞான சம்பந்தமுண்டு.  மேலும் தகப்பன் சம்பாதித்த சொத்துக்களில் பிள்ளைகள் பங்கு பெற்றுக் கொள்வது எவ்விதமோ, அதே விதமே திருச்சபையின் அங்கத்தினர்கள் தங்கள் தலையாகிய சேசுநாதரும் இன்னும் மற்ற புண்ணியாத்துமாக்களும் சம்பாதித்த ஞானத் திரவியங்களுக்கெல்லாம் பங்காளிகளாக்குகின்றனர்.


8. திருச்சபையின் ஞானத் திரவியங்கள் எவை? 

அவைகளாவன:

(1) தேவத்திரவிய அநுமானங்களும், பூசைப்பலியும்,

(2) குருக்களும், சந்நியாசிகளும் தினந்தோறும் செபிக்கும் தேவ சங்கீதச் செபங்களும்,

(3) விசுவாசிகளுடைய செபங்களும், நற்கிரியை களும், 

(4) அர்ச்சியசிஷ்டவர்களுடையவும், தேவமாதாவுடையவும் பேறுபலன்களும்,

(5) முக்கியமாய் சேசுகிறீஸ்துநாதருடைய அளவில் லாத பேறுபலன்களுமாம்.


9. திருச்சபையின் அங்கத்தினர்கள் எல்லோரும் இந்தப் பொது ஞானத் திரவியத்தில் முழுப் பலனையும் அடைகிறார்களா? 

எல்லோரும் முழுப்பலன் அடைகிறதில்லை.  தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருக்கிறவர்கள் மாத்திரம் முழுப்பலனை  அடைவார்கள்.  இதினிமித்தமே அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனம் என்கிறோம்.


10. திருச்சபையின் அங்கத்தினர் என்பதினால் சாதாரணமாய் இவ்வுலக கிறீஸ்தவர்கள் மாத்திரம் என்று கண்டுபிடிக்க வேண்டுமா? 

சேசுநாதருடைய திருச்சபையில் உலகத்திலுள்ள விசுவாசிகள் மாத்திரம் அடங்கியிருக்கவில்லை.  ஏனென்றால், சர்வேசுரனுடைய இராச்சியமாகிய திருச்சபை மகா விஸ்தாரமானது. அது பூமியில் உற்பத்தியாகி, பரலோகமட்டும் வியாபித்திருக்கிறது.  ஆகையால் இந்தத் திருச்சபையில் பலவிதமான வகுப்புகள் உண்டு.


11. எத்தனை வகுப்புகள் உண்டு? 

மூன்றுண்டு.  அதாவது: வெற்றி பெற்ற மோட்ச சபை, உத்தரிக்கிற சபை, யுத்த சபையாம்.


12.யுத்த சபையில் உள்ளவர்கள் யார்? 

திருச்சபையில் சேர்ந்து, உலகத்தில் இன்னும் உயிரோ டிருந்து, தங்கள் இரட்சணியத்தை அடையும்படி தங்கள் விரோதிக ளாகிய உலகம், பசாசு, சரீரத்தோடு போராடும் கிறீஸ்துவர்கள்தான்.


13. உத்தரிக்கிற சபை என்பது யாது? 

உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்பட்டுப் பொறுக்கப் பட்ட தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணும் ஆத்துமாக்களின் கூட்டமாம்.  அவர்கள் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருப்பதால், அவர்களைப் பரிசுத்தவான்கள் என்று அழைக்கிறது நியாயமே.


14. வெற்றி பெற்ற மோட்ச சபையில் இருப்பவர்கள் யார்? 

இவ்வுலகத்தில் சர்வேசுரனுடைய கட்டளைப்படி நடந்து, தங்கள் பாவங்களுக்கு முழுதும் உத்தரித்து, இப்போது சேசுநாதரோடு மோட்ச பாக்கியத்தை அநுபவிக்கும் அர்ச்சியசிஷ்டவர்கள்தான்.


15. இம்மூன்று வகுப்புகளும் மூன்று சபையோ, ஒரே சபையோ? 

திருச்சபைக்குத் தலைவராகிய சேசுகிறீஸ்துநாதரோடு ஞான அவயவங்கள் போல் ஒன்றித்திருக்கிறபடியால் இம்மூன்று வகுப்புகளும் ஒரே திருச்சபையாகின்றன. 


16. யுத்த சபையிலுள்ள கிறீஸ்துவர்களுக்குள் சமுதீதப் பிரயோசனமிருக்கிறதெப்படி? 

விசுவாசிகள் ஓர் பெரிய குடும்பம்போல் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறபடியால், திருச்சபையில் செய்யப்படுகிற சகல நற்கிரியைகளுககும் செபங்களுக்கும், பலன்களுக்கும் நாம் ஒவ்வொருவரும் பங்காளிகளாகிறோம்.


17. விசுவாசிகளெல்லோரும் அந்த ஞான நன்மைகளில் சரிசம மான பங்கு அடைகிறார்களா?

அடைவதில்லை.  ஒவ்வொருவருடைய பேறுபலன் களுக்கு ஒத்தவண்ணம், அவர்களுடைய பங்கு கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.


18. சாவான பாவத்தோடிருக்கிறவர்களுக்கு இதில் பங்கு உண்டா? 

சாவான பாவத்தோடிருக்கும் கிறீஸ்தவர்கள் தங்களுக்காவது, இவ்வுலகிலிருக்கும் மற்றவர்களுக்கென்கிலும், மெய்யான பேறுபலன் அடையக்கூடாதவர்களாயிருக்கிற போதிலும், இந்த ஞானத் திரவியத்திலிருந்து முற்றிலும் நீக்கப்படுவதில்லை. இவர்கள் திருச்சபையாகிய சரீரத்தோடு இன்னும் ஒன்றித்திருந்து மறுபடி சீவியமும், பலமும் அடையக் கூடிய திமிர்வாதம் பிடித்த பலமற்ற அவயவங்களைப் போலிருக்கிறார்கள்.  ஆகையால் பாவிகள் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருக்கும் தங்கள் சகோ தரர் செய்யும் செப தபப் புண்ணியங்களில் கொஞ்சம் பங்கடைந்து, இதனால் தாங்கள் மனந்திரும்புவதற்கு ஏதுவான வரப்பிரசாதங் களைப் பெற்றுக் கொள்ள உதவி பெறுவார்கள்.


19. நமக்கும் மோட்சவாசிகளுக்கும் சமுதீதப் பிரயோசனம் இருக்கிறதெப்படி? 

நாம் மோட்சவாசிகளை வணங்கி, அவர்கள் பேரால் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்த நற்செயல்களைக் கொண்டு அவர் களுடைய உபகுணமான பாக்கியத்தை அதிகரிக்கச் செய்து, அவர்கள் நமக்கு உதவி செய்யும்படி அவர்களை நோக்கி வேண்டிக் கொள்ளுகிறோம்.

மோட்சவாசிகளோ, சர்வேசுரனிடத்தில் நமக்காகப் பரிந்து பேசி, ஏராளமான உபகார சகாயத்தையும், வரப்பிரசாதங் களையும் நமக்கு அடைந்தருளுகிறார்கள்.


20. நமக்கும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் சமுதீதப் பிரயோசனம் இருக்கிறதெப்படி? 

நாம் நம்முடைய செபத்தினாலும், நற்கிரியைகளி னாலும், பேறுபலன்களினாலும், விசேஷமாய்த் திவ்விய பூசைப்பலி யினாலும் அவர்களுக்கு ஆறுதல் வருவித்து, அவர்களை வேதனை யினின்று மீட்கிறோம்.

அவர்களும் தங்கள் மன்றாட்டுக்களினால் நமக்கு உதவி செய்கிறார்கள்.


சரித்திரம்

சில வருஷங்களுக்கு முன் திருச்சிராப்பள்ளி மேற்றிராசனத்தைச் சேர்ந்த ஒரு பங்கு சுவாமியார் ஒருநாள் இராவேளையில் நித்திரை செய்யும்போது தான் படுத்திருந்த அறையின் கதவு பலமாய்த் தட்டுவதைக் கேட்டு விழித்துக் கொண்டார்.  அப்போது அவர் “யார் அது?” என, “சுவாமி, இன்ன ஊருக்குப் போய் அவஸ்தை கொடுக்க வேண்டும்” என்னும் மறுமொழியைக் கேட்டார்.  சுவாமியார் தன் படுக்கையிலிருந்து எழுந்து உடனே அந்த ஊருக்குப் புறப்பட்டுப் போனார். குறிக்கப்பட்ட ஊரைச் சேர்ந்து, அதன் வீதிகளில் ஒருத்தரும் காணாததினால் மிகவும் ஆச்சரியப் பட்டார். அவஸ்தையாயிருக்கிறவன் யார் என்று விசாரிக்கிறதற்குக் கோவில்பிள்ளை வீட்டில் போய்க் கேட்க, அவன் தெரியாதென்றும், ஆனால் ஊர் கடைசி வீட்டில் ஒரு தள்ளாத கிழவி தனியாய்ச் சீவிக்கிறாளென்றும் சொன்னாள். சுவாமியார் அவ்வீட்டுக்குப் போய், உள் பிரவேசித்து அக்கிழவி சாகும் ஆபத்திலிருப்பதைக் கண்டு, அவளுக்கு அவஸ்தை கொடுத்தார்.  பிறகு அவளை நோக்கி, “என்னை வரவழைக்க நீ யாரை அனுப்பினாய்?” என்று கேட்க கிழவி “நான் ஒருவரையும் அனுப்பவேயில்லை.  ஆனால் அவஸ்தை பெறாமல் சாகாதபடி உத்தரிக்கிற ஆத்துமாக்களை நம்பிக்கையோடும், பக்தியோடும் வேண்டிக் கொண்டேன்” என்று சொன்னாள்.


21. சாவான பாவத்தோடிருக்கும் கிறீஸ்துவர்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒத்தாசை செய்ய  முடியுமா? 

இவர்கள் திருச்சபைப் பலன்களைக் கொண்டு அந்த ஆத்துமாக்களுக்கு ஒத்தாசை செய்ய முடியுமென்பது, சில சிறந்த வேதசாஸ்திரிகளின் அபிப்பிராயம்.


22. மோட்சவாசிகளுக்கும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் சமுதீதப் பிரயோசனம் இருக்கிறதெப்படி? 

மோட்சவாசிகள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக மன்றாடி, அவர்களுக்கு வெகு உதவி செய்கிறார்கள். விசேஷமாய்த் தேவமாதா ஏராளமான ஆத்துமாக்களைத் தமது வேண்டுதலால் மீட்டு வருகிறார்களென்பது கிறீஸ்துவர்களின் விசுவாசம்.


23. அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தில் பங்கு பெறாதோர் யார்?

பதிதர், பிரிவினைக்காரர், திருச்சபையினின்று தள்ளப் பட்டவர்கள் முதலானோர்.  ஏனென்றால், இவர்கள் திருச்சபையின் அவயவங்களல்ல.