அர்ச். பொலிக்கார்ப்பியார் - மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி. 166).
ஜனவரி 26
அர்ச். பொலிக்கார்ப்பியார் - மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி. 166).
இவர் அப்போஸ்தலர் காலத்தில் ஜீவித்து, அவர்களுடன் பேசிப்பழகி, அர்ச். அருளப்பருக்கு சீஷராகி, அவரால் ஸ்மெர்னா நகருக்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டவர்.
இவர் பதிதரையாவது சத்திய வேதத்தை மறுதலித்தவர்களையாவது பார்க்க சகிக்கமாட்டார். ஒரு நாள் மார்ஸியோன் என்னும் ஓர் பதிதன் பொலிக்காப்பியாரைப் பார்த்து “நீர் என்னை அறிவீரோ” என்றதற்கு, “ஆம், நீ பசாசின் தலைச்சன் பிள்ளையென்று அறிவேன்” என்றார்.
இவர் வேதத்துக்காக வெகு ஊக்கத்துடன் உழைத்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்தார். வேத கலாபனையில் பொலிக்கார்ப்பியார் வேதத்துக்காக பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
அதிபதி பொலிக்காப்பியாரைப் பார்த்து “விருத்தாப்பியனே! கிறீஸ்துவை மறுதலித்து, நாட்டுத் தேவர்களை ஆராதிப்பாயாக” என்றதற்கு, வேதசாட்சி “கடந்த 86 வருஷகாலமாய் என் இரட்சகருக்கு ஊழியம் புரிந்தேன். மேலும் எனக்கு அவர் ஒரு தீங்கும் செய்தவரல்ல. இப்பேர்ப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்" என்றார்.
அப்படியானால் நீ நெருப்பில் சுட்டெரிக்கப்படுவாயென்று கதறிக் கூறினான் அதிபதி. “என் இரட்சகரை மறுதலித்து நித்தியமாய் நெருப்பில் வேகிறதைக்காட்டிலும் இப்போது அதில் சற்று நேரம் வேதனைப்பட்டு நித்திய சம்பாவனையைப் பெறுவது உத்தமமல்லோ ” என்று கூறியதைக் கேட்ட அதிபதி மிகவும் சினங்கொண்டு அவரைச் சுற்றிலும் கட்டைகளைப் பரப்பித் தீயில் சுட்டெரிக்க கட்டளையிட்டான்.
அவ்வாறே மூட்டப்பட்ட அக்கினிச் சுவாலை அவரைத் தொடாததைக் கண்ட அதிபதி கோபாவேசங் கொண்டு அவரை ஈட்டியால் குத்திச் சாகடிக்க கட்டளையிட்டான். அப்படியே அவர் குத்திக் கொல்லப்பட்டு, நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டார். அங்கு கிடந்த அவருடைய எலும்புகளை விசுவாசிகள் வெகு பக்தியாய் எடுத்துக்கொண்டு போனார்கள்.
யோசனை
வேத விரோதிகளுடன் தர்க்கிப்பதைவிட, அவர்கள் கூட்டத்தைவிட்டு விலகுவது நலமாகும்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பவுலா, வி.
அர்ச். கோனன், மே.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.