ஜனவரி 30

அர்ச். பத்தில்தேஸ் - இராணி (கி.பி. 680). 

இந்த இராணி இங்கிலாந்தில் பிறந்து, சிறு வயதில் பிரான்ஸ் தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டாள். இவளை விலைக்கு வாங்கின பிரபு இவளுடைய புண்ணிய ஒழுக்கத்தையறிந்து இவளைத் தன் அரண்மனைக்குத் தலைவியாக நியமித்தான். 

இவளுடைய கீர்த்தி அத்தேசமெங்கும் பரவியதினால், பிரான்சு தேசத்து அரசனான 2-ம் குளோவிஸ் என்பவர் தன் தேசம் முழுவதும் சந்தோஷித்து மகிழ அப்புண்ணிய மாதை மணமுடித்துக்கொண்டார். 

பத்தில்தேஸ் இராணி தனக்குண்டான உந்நத மகிமையால் பெருமை கொள்ளாமல், முன்னிலும் நற்குணசீவியமாய் நடந்து, அரசனுடைய அனுமதியுடன் அநேக கோவில்களையும் மடங்களையும் கட்டுவித்தாள். 

தன் புருஷன் இறந்தபின், பட்டத்து குமாரன் இளைஞனான படியால், இப்புண்ணியவதியே அரசு புரிந்து, தன்னால் கூடிய நன்மைகளையெல்லாம் அத்தேசத்துக்குச் செய்துவந்தாள். மேற்றிராணியார் வேத விஷயமாக செய்த திருத்தங்களை நிலைநிறுத்தும்படி தம்மால் இயன்றவரை பிரயாசைப்பட்டாள். 

தம் குமாரனுக்கு பட்டாபிஷேகம் செய்தபின் பத்தில்தேஸ் இராணி கன்னியர் மடத்தில் சேர்ந்து, அங்கே தாழ்ச்சிக்குரிய அலுவல்களையும் அரிதான புண்ணியங்களையும் செய்துவந்தாள். அவளுக்கு அடிக்கடி உண்டான கடின நோய் நொடிகளைப் பொறுமையுடன் சகித்துப் பெரிய புண்ணியவதியாய்க் காலஞ்சென்றாள்.

யோசனை 

சர்வேசுரன் நமக்கு அளிக்கும் புத்தி, திறமை. அழகு, படிப்பு, திரவியம் முதலியவைகளைப்பற்றி பெருமை கொள்ளாமல் தாழ்ச்சியாயிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். மார்தினா, க. வே. 
அர்ச். ஆல்தேகாண்டெஸ், க. ம. 
அர்ச். பார்ஸிமேயுஸ், மே. வே..