
அதிகாலைச் செபம்
அதிகாலைச் செபம்
(கிறீஸ்தவன் அதிகாலமே எழுந்தவுடனே மிகுந்த பக்தியோடேயும் வணக்கத்தோடேயும் கைகுவித்து முழங்காலிலிருந்து ஏக சர்வேசுரனை தியானித்துச் சொல்லத் தக்கதாவது:)
தானாய் அநாதியுமாய் சரீரமில்லாதவருமாய், அளவில்லாத சகல நன்மைச் சுரூபியுமாய், ஞானத்தினாலேயும், பலத்தினாலேயும், காரணத்தினாலேயும் எங்கும் வியாபித்திருக்கிறவருமாய், எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமுமாய் யாவருக்குங் கதியுமாய், பொல்லாதவர்களை நரகத்திலே தள்ளி நல்லவர்களுக்கு மோட்சங் கொடுக்கிறவருமாயிருக்கிற பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்து என்னும் மூன்றாட்களாயிருந்தாலும், ஒரே சர்வேசுரனாயிருக்கிற என் ஆண்டவரே! தேவரீர் மாத்திரம் மெய்யான தேவனாயிருக்கிறபடியினாலே உமக்கு மாத்திரம் செய்யத்தக்க தேவாராதனை உமக்கே பண்ணுகிறேன்.
(இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது மிகுந்த தாழ்ச்சியோடே சாஷ்டாங்கமாக விழுந்து முழு மனதோடே சர்வேசுரனை ஆராதிக்கிறது. அதன்பின்பு எழுந்திருந்து பரிசுத்த தேவ மாதாவைப் பார்த்து சொல்லத் தக்கதாவது:)
சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்ட புத்தியுடைத்தான வஸ்துகளுக்குள்ளே மேலானவர்களாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயே, நீர் மோட்சவாசிகள் யாவரையும் பார்க்க எண்ணப்படாத நன்மைகளினாலே அதிசயித்து சர்வலோகத்துக்கும் இராக்கினியாயிருக்கிறதினாலேயும், எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையாயிருந்து, மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றான சேசுநாதருக்கு திவ்விய மாதாவாயிருக்கிறதினாலேயும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் செய்யத்தக்க சாதாரண வணக்கத்தைப் பார்க்க உமக்கு மாத்திரமே விசேஷ வணக்கம் செலுத்துகிறேன்.
(இந்த வார்த்தைகளைச் சொல்லும் பொழுது மிகுந்த தாழ்ச்சியோடே முழந்தாளிட்டு நெற்றி தரையிலேபட நமஸ்காரம் பண்ணுகிறது. அதன்பிறகு எழுந்திருந்து காவலாயிருக்கிற சம்மனசானவரையும் பரமதூதர்களையும் சகலமான அர்ச்சியசிஷ்டவர்களையும் குறித்துச் சொல்லத்தக்கதாவது.)
சகல மோட்சவாசிகளே, சர்வேசுரனை முகமுக தரிசனமாய் தரிசித்துக் கொண்டு, ஆண்டவருக்கு உகந்தவர்களா யிருக்கிறபடியினாலேயும், நன்மையிலே நிலை கொண்டவர்களாய் இருக்கிறபடியினாலேயும், உங்களுடைய வேண்டுதல் மன்றாட்டுகளினாலே சர்வேசுரன் உங்களைக் கொண்டு எங்களுக்கு அநேக சகாய உபகாரங்களைப் பண்ணிக்கொண்டு வருகிறதினாலேயும், திருச்சபை கட்டளையிட்ட பிரகாரம் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
(இந்த வார்த்தைகளைச் சொல்லும் பொழுது மிகுந்த தாழ்ச்சியோடே தலைகுனிந்து வணக்கம் செலுத்துகிறது.)
(இப்படிப்பட்ட ஆராதனை வணக்கமெல்லாம் முடிந்த பிற்பாடு சுவாமியைப் பார்த்து சொல்லத்தக்கதாவது.)
சர்வேசுரா சுவாமி, தேவரீர் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் ஒன்றுமில்லாதிருக்கையிலே உண்டாக்கி இந்த ஆத்துமமும் சரீரமும் பிழைக்கிறதற்கு எண்ணப்படாத நன்மைகளைத் தந்தருளினதினாலே, சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.
மேலும் தேவரீர் இந்த பூலோகத்திலே எனக்காக வந்து மனிதாவதாரம் பண்ணிப் பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்ததினாலே, சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது.
மேலும் உம்முடைய திருமரணத்தினாலே வந்த அளவில்லாத பலனை எனக்கு ஞானஸ்நானத்தின் வழியாகக் கொடுத் தருளினீரே, சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.
ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு நான் அநேகமுறை பாவங்களைச் செய்திருக்க, அந்தப் பாவங்களையெல்லாம் பாவசங்கீர்த்தன மூலமாகப் பொறுத்து, தெய்வீக போசனமாகிய நற்கருணையும் கொடுத்து, காவலராயிருக்கிற சம்மனசானவரையும் கட்டளையிட்டு, இவை முதலான எண்ணிக்கைக்குள் அடங்காத அநேக சகாய உபகாரங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறதினாலேயும், விசேஷமாய் இந்த இராத்திரி காலத்திலே என் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் யாதொரு பொல்லாப்பில்லாமல் காத்து இரட்சித்ததினாலேயும், என்னால் கூடிய மாத்திரம் நன்றியறிந்த மனதோடே தேவரீரை வணங்கித் தோத்திரம் பண்ணுகிறேன், சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.
(அதற்குப்பின் தன்னை முழுதும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற வகையாவது:)
சர்வலோகத்துக்கும் ஆண்டவரே! தேவரீர் என் சரீரத்தையும் ஐம்புலன்களையும், அவைகளிலே உண்டான வல்லமைகளையும், என் ஆத்துமத்தையும், அதிலேயுள்ள புத்தி, நினைவு, மனதென்கிற மூன்று புலன்களாகிய ஆன்ம சத்துவங்களையும் எனக்குக் கொடுத்தருளினீரே. இதையெல்லாம் தேவரீருக்குப் பிரியமாயிருப்பதற்குச் சேசுநாதர் பண்ணின புண்ணியங்களோடேயும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். ஆகையால் இப்பொழுது துவக்கி மரணம் வரைக்கும் நான் செய்யும் தர்ம காரியங்களெல்லாவற்றையும் தேவரீருக்குத் தோத்திரமாக ஒப்புக்கொடுக் கிறேன்.
(அதற்கு மேல் சர்வேசுரனுடைய உதவி வரப்பிரசாதத்தைக் கேட்கிற வகையாவது:)
சர்வேசுரா சுவாமி! தேவரீருக்கு அளவில்லாத பலமும், மட்டில்லாத ஞானமும், அளவறுக்கப்படாத கிருபாகடாட்சமும் உண்டாயிருக்கிறபடியினாலே, சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து, அடியேனுக்கும் திருச்சபைக்கும் சகலமான மக்களுக்கும் வேண்டிய சகாயங்களைப் பண்ணுகிறதல்லாமல், விசேமாய் நான் இன்று பாவங்களைச் செய்யாமல் புண்ணிய வழியிலே ஒழுக்கமாய் நடக்கத்தக்கதாகவும் எனக்கு அநுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி.
(இந்தச் செபம் முடிந்தவுடன் பக்தி யோடு 1 பர, 1 அருள். 1 விசுவாச மந்திரம்).
(அதன் மேல் சுவாமியை நோக்கி நல்ல பிரதிக்கினை பண்ணுகிற வகையாவது)
சர்வேசுரா சுவாமி, தேவரீர் அருளிச் செய்த வேத கட்டளையின்படியே அடியேன் ஒழுக்கமாய் நடக்கத் துணிந்திருக்கிற படியினாலே, என்னிடத்திலிருக்கிற ஆங்காரம், கோபம், மோகம் முதலிய விசேஷ துர்க்குணங்களை நீக்கி இன்று அநேக தர்மங்களைச் செய்து வாக்கினாலேயும் கிரிகையினாலேயும் தாழ்ச்சி, பொறுமை, கற்பு முதலிய புண்ணியங்களை அடைய பிரயாசைப்படுவேன்.
இவையெல்லாம் என் பலத்தினால் முடியாதே. பரிசுத்த தேவ மாதாவே! எனக்காக உம் திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
என் காவலான சம்மனசானவரே! என்னைப் புண்ணிய நல்வழியில் நடப்பித்துக் காத்தருளும்.
நான் பெயர் கொண்டிருக்கிற அர்ச்சியசிஷ்டவரே! உம்மைப் போலே நான் இவ்வுலகத்தில் சர்வேசுரனுக்கு பக்தியோடு ஊழியம் செய்யவும், உம்மோடு அவரைப் பரலோகத்தில் தரிசித்துத் துதிக்கவும், தேவகிருபை எனக்குக் கிடைக்கும்படியாக மன்றாடிக் கொள்ளும். ஆமென்.
(அதன்பின் முடிந்தால் 33 மணிச் செபம் செய்வது மிக நல்லது.)
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.