திருப்பாடுகளின் தியானம்

சர்வேசுரா சுவாமி, நிகரில்லாத தயையினாலே உலகத்தை மீட்டு இரட்சிக்கிறதற்காகத் தேவரீர் மனிதனாகப் பிறக்கவும், விருத்தசேதனப் படவும், யூதர்களினாலே புறக்கணிக்கப்படவும், குருத் துரோகியான யூதாஸ் என்பவன் உம்மைக் கன்னத்திலே முத்தஞ்செய்து காட்டிக் கொடுக்கப்படவும், தேவரீர் கயிறுகளினாலே கட்டுண்டு குற்றமில்லாத செம்மறியைப் போலே பலிக்கேகப் படவும், அன்னாஸ், கைப்பாஸ், பிலாத்து, ஏரோது இவர்களண்டைக்கு அவமானமாகக் கூட்டிக் கொண்டுபோய் விடப்படவும், பொய்ச்சாட்சிகளினாலே குற்றஞ்சாட்டப்படவும், திருக்கன்னத்தில் கைகளாலேயும் திருமேனியில் கசைகளினாலேயும் அடிக்கப்படவும், திருமுகத்திலே துப்பப்படவும், தூஷணங்களினாலே நிந்திக்கப்படவும், முள்முடி தரிக்கப்படவும், மூங்கிற்றடியால் அடிக்கப்படவும், உம்முடைய திருமுகம் வஸ்திரத்தினாலே மூடப்படவும், திருத்தோளின் பேரில் பாரமான சிலுவை மரத்தைச் சுமத்தி கபாலமலை மட்டும் கூட்டிக் கொண்டு போகப்படவும், திருச்சட்டை உரியப்படவும், இருப்பாணிகளினாலே அறையுண்டு இரண்டு கள்ளருக்கு நடுவில் சிலுவையோடு உயர்த்தப்படவும், தாகத்திற்குப் பிச்சோடே கலந்த காடியைக் குடிக்கக் கொடுக்கப்படவும், திருவிலாவானது ஈட்டியால் குத்தித் திறக்கப்படவும் திருவுளமானீரே சுவாமி!  பாவியாயிருக்கிற அடியேன் இவையயல்லாம் பக்தியோடே தியானிக்க அநுக்கிரகம் செய்தருளும்.  தேவரீர் பட்ட அர்ச்சியசிஷ்ட நிர்ப்பந்தங்களையும் சிலுவையையும் திருமரணத்தையும் பார்த்து, நரக வேதனையை விட்டு அகற்றி அடியேனை இரட்சித்து உம்முடைய வலது பாரிசத்திலிருந்த பச்சாத்தாபக் கள்ளனுக்குத் தந்தருளின மோட்ச பாக்கியத்தில் அடியேனையும் கூட்டிக் கொண்டு போகக் கிருபை பண்ணியருளும் சுவாமி.

பிதாவோடும், இஸ்பிரீத்துசாந்துவோடும், சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே ஆமென்.

சேசுக்கிறீஸ்துநாதரே சுவாமி, தேவரீர் சிலுவையிலே அறையுண்டிருந்தபொழுது அளவில்லாத கஸ்தி நோவுகளை அனுபவித்தீரே.  விசேஷமாய் உம்முடைய திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும்பொழுது மிகுந்த துக்கத்தை அடைந்தீரே.  அந்தத் துக்கத்தைப் பார்த்து பாவியாயிருக்கிற அடியேன் சாகிற தறுவாயிலே உலகம், பசாசு, சரீரம் என்கிற சத்துருக்களாலே என் ஆத்துமத்துக்கு யாதொரு மோசம் வரவொட்டாமல் கிருபை பண்ணி இரட்சியும் சுவாமி. ஆமென்.

பிதாவாகிய சர்வேசுரா, தேவரீருக்கு உகந்த குமாரனுமாய் எங்களுக்குக் கர்த்தருமாயிருக்கிற சேசுக்கிறீஸ்துநாதர் எங்களுக்காக இத்தனை பாடுகளைப் பட்டாரே.  அவருடைய திருமுகத்தைப் பார்த்து எங்கள் பாவங்களைப் பொறுத்துக் கொள்ளும் சுவாமி.

ஆமென்.