நித்திரை ஒழுக்கம்

நீ நித்திரை செய்யப் போகையில் உன் படுக்கையை கல்லறையாக எண்ணி, நித்திரைச் சாயலாக மரணம் எவ்வளவு விரைவாய் வரலா மென்றும், அப்போது உலக சுக வெகுவான எண் ணங்களெல்லாம் எவ்விதமென்றும் சிந்திப்பாய்.  சயன இளைப்பாற்றியால் சுவாமிக்குப் பணிபுரிய அதிக சக்தி உண்டாக, உன் தூக்கத்தை அவர் அமல திருவுளத்துக்குத் தூய மனதோடு ஒப்புக் கொடு.  நித்திரையிலே நீ விடும் சுவாசமெல்லாம் நித்திரையற்ற பரம தூதரும் மற்ற பரலோக வாசிகளும் இடைவிடாது செய்யும் தோத்திரத் துக்கு ஒப்பாக வேண்டுமென்று விரும்பி உன் இரட்சகருடைய திருக்கரத்தில் உறங்குவதாக எண்ணுவாய்.

நித்திரைக்குப் போகுமுன் தான் செய்த பாவங்களை சற்று நேரம் யோசித்து அந்தப் பாவங்களுக்காக மெய்யான மனஸ்தாபப்பட்டு, பின்வரும் செபங்களை செபிப்பது நலம். (உத்தம மனஸ்தாப மந்திரம்)

சயன ஆராதனை

சர்வேசுரா சுவாமி! மனிதர் சயனத்தால் இளைப்பாற இராத்திரி காலம் கட்டளையிட்டருளினீரே.  உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவது.  இன்றெனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் உமக்குத் தோத்திரம் பண்ணி என்னால் செய்யப்பட்ட பாவங்களை எல்லாம் பொறுத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறேன்.  அவைகள் தேவரீருடைய அளவில்லாத மகிமைக்கும் நன்மைத்தனத்துக்கும் விரோதமா யிருக்கிறதினாலே முழுதும் அவைகளை வெறுக்கிறேன்.  இந்த இராத்திரியிலே சடுதி மரணத்தினாலும் துர்க்கனவு முதலான பசாசு சோதனைகளாலும் அடியேனுக்கு மோசம் வரவொட்டாமல் காத்துக் கொள்ளும். ஆமென்.

சேசுவே! என் மரண வேளையிலே இஷ்டப் பிரசாதத்தோடிருந்து உமது சிலுவையை ஆவலோடு தழுவி உயிர் விடவும் உமது இராச்சியத்தில் உம்மோடே நிரந்தரம் அடியேன் இளைப்பாறவும் கிருபை செய்தருளும். ஆமென்.

காவல் சம்மனசுக்கு ஜெபம்

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே!  தெய்வீகக் கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும்.  ஆமென். 
(100 நாள் பலன்)


சேசு மரிய சூசை, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் இன்றிரவு உங்கள் அடைக்கலத்தில் ஒப்புக் கொடுக்கிறேன்.

மரித்தவர்களுடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுவோம். 1 பர. 1 அருள். 1 திரி.

ஆமென்.