திவ்விய பலி பூசை காணும் வகை
திவ்விய பலி பூசை காணும் வகை
பூசை காணப் போகும் ஒழுங்கு
நீ பூசை காணப் போகையில் உன் சிந்தனை பற்பல காரியங்களில் பலவாறாய்ப் பிரிந்து அலைய விடாமல் ஒன்றுபடுத்தி ஒரே நிலையாக நிறுத்து. உன் திவ்விய இரட்சகர் தாம் பலியாகப் போகிறதை நீ காணவும் தம்மோடு நீ ஐக்கியமாகவும் உன்னைக் கூப்பிடும் இனிய சத்தம் உனது காதில் கேட்கப்படுகிறதாக எண்ணிக் கொள்.
நீ கோயிலுக்குப் போகும்பொழுது நம் ஆண்டவர் பட்ட திருப்பாடுகளுக்கும் திருமரணத்துக்கும் கூட இருக்க தேவமாதாவோடும் மற்ற பக்தியுள்ள ஸ்திரீகளோடும் நீயும் கல்வாரி மலைக்குப் போகிறதாகச் சிந்தனை செய்.
இரட்சகர் உன் பாவங்களினிமித்தம் சிலுவையிலே பலியாகிறதற்கு அதை உனக்கு முன்னாலே சுமந்து கொண்டு போகிறாரென்றும் அவருடைய பாடுகளுக்கெல்லாம் உன் பாவங்களே காரணமென்றும் நினைத்து உருகுவாய்.
நீ கோவிலுக்குள் நுழையும்போது, அந்த ஆலயத்துக்குக் கர்த்தரான சர்வேசுரனின் சந்நிதியில் மகா ஒடுக்க வணக்கத்தோடு உன்னை மிகவும் தாழ்த்தக்கடவாய். அங்கே திவ்விய நற்கருணை ஸ்தாபகம் பண்ணியிருந்தால் முழந்தாளிட்டு உன் இரட்சகருக்கு மகா பயபக்தியோடு ஆராதனை செய்.
தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை வரைந்து கொள்கையில், உன் பாவங்களுக்கு மன்னிப்படையவும் திவ்ய செம்மறியாகிய சேசுகிறீஸ்துநாதரின் இரத்தத்தால் நீ உன் பாவங்களில் நின்று கழுவப்பட்டுச் சுத்தமாகவும் மகா தாழ்ச்சியோடு வேண்டிக்கொண்டு அற்ப விக்கினமுமின்றி நீ தியானம் பண்ணத் தகுமான இடம் தேடி முழந்தாளிடு.
அங்கே சுவாமி பிரத்தியட்சமா யிருக்கிறாரென்று உறுதியாக விசுவசித்து, இந்தப் பரம பூசித பயங்கர பலியை தக்க நற்கருத்தோடு கண்டு ஒப்புக்கொடுக்க ஆண்டவர் இரங்கித் தயைபுரிய வேணுமென்று வேண்டிக் கொள்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.