தேவ நற்கருணை உட்கொள்ளுமுன் ஜெபம்
தேவ நற்கருணை உட்கொள்ளுமுன் ஜெபம்
விசுவாச முயற்சி
என் ஆண்டவராயிருக்கிற சேசுகிறீஸ்துவே! அடியேன் தேவ நற்கருணை உட்கொள்ளும் போது தேவரீர் திரு ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயின் திரு உதரத்திலெடுத்த திருச்சரீரத்தோடும் எழுந்தருளி என்னிடத்தில் வருகிறீரென்று உறுதியாய் விசுவசிக்கிறேன் சுவாமி. இது சத்தியமான காரியமென்று ஒப்புவிக்கிறதற்கு என்னுடைய இரத்த மெல்லாம் சிந்தி உமக்காக ஜீவனை இழக்க வேண்டியிருந்தாலும், நல்ல மனதோடே இழக்கத் துணிகிறேன். என் விசுவாசத்தை இன்னமும் உறுதிப்படுத்தியருளும் சுவாமி.
ஆராதனை முயற்சி
என்னைப் படைத்து இரட்சித்து அனுச்சாரணம் செய்து வருகிற என் ஆண்டவரே, நித்திய பரம கடவுளான கர்த்தாவே! உமது திருச் சமுகத்தில் என்னுடைய புத்தி மனதை மிகவும் தாழ்த்தி மகா தாழ்ச்சி வினயத்துடனே உம்மை வணங்குகிறேன். தேவரீர் மாத்திரமே சகல தோத்திரங்களுக்கும் ஆராதனைகளுக்கும் பாத்திர மாயிருக்கிறீர்.
தாழ்ச்சி முயற்சி
ஆ சுவாமி! தேவரீர் யார்? நான் யார்? தேவரீரிடத்தில் அற்பமாகிலும் பழுதில்லை, நான் மட்டில்லாத பழுதுள்ளவன்; தேவரீர் என்னைப் படைத்தவர்; நான் உம்மாலே படைக்கப் பட்டவன்; தேவரீர் மட்டில்லாத மகிமையுள்ளவராகையால், உமது சமுகத்தில் பத்திராசனரென்கிற சம்மனசுக்கள் முதலாய் நடுநடுங்குகிறார்கள். நான் நிலத்தின் சகதிக்குள் உதிக்கிற புழுவுக்குச் சமானமாயிருக்கிறேன். தேவரீர் மட்டில்லாத பரிசுத்தர். நான் அவலட்சண பாவச் சேற்றிலே புரண்டு அசுத்த நாற்றமாயிருக்கிறவன்... இப்படிப்பட்ட நானோ தேவரீரை உட்கொள்ளுகிறது? இத்தனை நீசனாயிருக்கிற என்னிடத்தில் எழுந்தருளி வர எப்படி மனந்துணிந்தீர்? அற்பப்புழுவுக்குச் சமானமாய் இருக்கிற என்னிடத்தில் என்ன நன்மை கண்டீர்? ஆ, சுவாமி! மெய்யாகவே தேவரீர் என்னிடத்தில் எழுந்தருளிவர நான் பேறுபெற்றவனல்ல. தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம் பற்றுவீரானால் என் ஆத்துமம் வியாதியினின்று விடுபட்டு ஆரோக்கியத்தையடையும். என் ஆத்துமமே, உன் கர்த்தருடைய மகிமையையும், உனது நீசத்தனத்தையும் கண்டு அவருடைய சமூகத்திலே வெட்கி நாணக் கடவாய்.
பயமும் நம்பிக்கையுமுள்ள முயற்சி
சுவாமி! அடியேன் உமது பரிசுத்த தன்மையையும் மகிமைப் பிரதாபத்தையும், என்னுடைய பாவங்களையும் நீசத் தன்மையையும் நினைக்கும் பொழுது உம்மைத் தேவ நற்கருணை வழியாக உட்கொள்ளப் பயப்படுகிறேன். பின்னொரு பக்கத்தில் உம்மை உட்கொள்ளாமல் போனால் எனக்கு நித்திய சீவியமில்லாமல் உமது கோபத்துக்கு உள்ளாவேனென்று நினைத்து நடுநடுங்குகிறேன். இனி நான் போகும் வழி என்ன சுவாமி! அடியேன் எத்தனை அபாத்திரவானாயிருந்தாலும், உமது கிருபையை நம்பி நீர் கட்டளையிட்டபடி உம்மை உட்கொள்ளத் துணிகிறேன். தேவரீர் தாமே எனது ஆத்துமத்தை உமது வரப்பிரசாதங்களினால் அலங்கரித்து, உமக்கு யோக்கியமான இருப்பிடமாயிருக்கத் தயை செய்தருளும் சுவாமி.
சந்தோஷ முயற்சி
என்னாண்டவரே! தேவரீர் என்னை ஒன்று மில்லாமையிலிருந்து உண்டாக்கினீரே. உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது. என் ஆத்துமமே, என்ன நினைக்கிறாய்? நீ செய்யுங் காரியம் இன்னதென்று அறிவாயோ? உனக்கு எவ்வளவு கனமான மகிமை வருமென்று விசாரிக்கிறாயோ? நித்திய சர்வேசுரனுடைய ஏக குமாரனாகிய திவ்விய சேசுநாதர் திரு ஆத்துமத்தோடும் திருச்சரீரத்தோடும் தேவ சுபாவத்தோடும் அவருக்குள்ள பாக்கியங்களோடும் நம்மிடத்தில் வருவாரே! அவரும் நாமும் ஏகமாய் ஒன்றித்திருப்போமே. அவர் நம்மிடத்திலேயும் நாம் அவரிடத்திலேயும் இருக்குமாப் போலாயிற்றே. ஆ! என் ஆத்துமமே, நமக்கு எத்தனை பாக்கியமும் எத்தனை மகிமையும் வருகிறதென்று பார்த்து சந்தோஷப்படக் கடவாய்.
ஆசை முயற்சி
என் திவ்விய அன்பனுமாய் நாதனுமாயிருக்கிற பரம கர்த்தாவே! எனக்கு மிகவும் பிரிய சேசுவே! என் பாக்கியமே, என் சந்தோஷமே, என் இருதயமே, என் கண்மணியே, ஆ! என் அன்பே, என்னிடத்தில் எழுந்தருளி வாரும். பசி தாகத்தை அனுபவிக்கிறவர்கள் எவ்வளவு ஆவலுடன் போஜனமும் தண்ணீரும் தேடுகிறார்களோ, அப்படியே என் ஆத்துமம் தேவரீரை மிகுந்த ஆவலுடன் தேடுகிறது சுவாமி! சீக்கிரமாக வாரும். தாமதம் செய்யாதேயும். நீர் ஒரு நாழிகை தாமதம் செய்கிறது எனக்கு ஒரு வருஷம் போலிருக்கிறது. உம்முடனே ஒன்றிக்க வேண்டுமென்கிற ஆசையின் மிகுதியினால் என் ஆத்துமம் மயங்கிக் களைத்துப் போகிறது சுவாமி.
(பிற்பாடு மிகுந்த வணக்கம், தாழ்ச்சி, ஆசையுடனே தேவ நற்கருணை உட்கொண்டு, பஞ்சேந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கி அங்குமிங்கும் பராக்குப் பாராமலும், புறத்து விசாரங்களுக்கு இடங்கொடாமலும், உள்ளத்தில் வாசமாய் உன் இருதயத்தில் எழுந்தருளி வந்திருக்கிற சேசுநாதருக்குத் தோத்திரம் செய்யவும், அவரோடு பேசிக் கொண்டிருக்கவும் கடவாய்.)
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.