24 ஆராதனைப் பிரகரணங்கள்
24 ஆராதனைப் பிரகரணங்கள்.
திவ்விய நற்கருணையிலே இயேசுநாதருக்கு மனுமக்களால் செய்ப்படுகிற சகல நிந்தைகளுக்குப் பரிகாரமாக 24 ஆராதனைப் பிரகரணங்கள்.
1. சதாகாலமும் ஆராதனைக்குரிய சர்வேசுரனும் என் ஆண்டவருமாகிய இயேசுவே! பூமண்டலத்தில் தேவரீருடைய மட்டற்ற மகிமைக்கு வேண்டிய ஆராதனை வணக்கமும், உமது அத்தியந்த பற்றுதலுள்ள அன்புக்குத் தக்க பிரதியன்பும் செலுத்தப்படாத எவ்விடத்திலுள்ள தேவாலயங்களிலும் அடியேனிருந்து தேவரீரை ஆராதிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இத்தனைத் தலங்களிலே இருக்க என்னாலே கூடாமையால், அவசங்கைப்பட்ட அந்த தேவாலயங்களில் நினைவின் வழியாயாவது பிரவேசித்து, கிறிஸ்தவரல்லாதார், பொல்லாத கிறீஸ்துவர்களால் எப்போதாகிலும் தேவரீருக்குச் செய்யப்பட்ட நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, உம்முடைய நேச பரிசுத்த மாதாவின் அன்பையும் ஆராதனயையும் உமது பீடத்தின்மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
2. சாதாரண திருச்சபையை விளக்கி உம்முடைய ஊழியர்களின் இருதயங்களிலே தேவ பத்தியாகிய சுவாலையை ஜொலிப்பிக்கிற சத்திய சூரியனாகிய இயேசுவே! தேவரீரை துதித்து ஆராதிக்கிறேன். உம்முடைய திருப் பணிவிடைக்குள்ளாகி தேவரீர் வீசுகிற தேவ சிநேகக் கதிரொளியை அடைந்திருந்தும், உஷ்ணமும் பற்றுதலும் அசைவுமின்றிக் குளிர்ந்தவர்களாய் நிற்கின்ற அநேகருடைய சோம்பல், அசதி, அசட்டைத்தனத்துக்குப் பரிகாரமாக, பக்திசுவாலகருடைய விருப்பப்பற்றுதலுள்ள நமஸ்காரங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
3. பூவாசிகளுக்கு சத்தியத்தைத் தெளிவிக்கிற நித்திய ஞானமாகிற இயேசுவே! அத்தியந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். அடியோர்கள் தேவரீருக்குத் துரோகம் செய்ததற்குக் காரணமான மனப் பொருத்த மூடத்தனமுள்ள அறியாமைக்குப் பரிகாரமாக, தேவரீரிடத்தில் மிகுந்த ஞானப்பிரகாசம் பெற்ற ஞானாதிக்ரென்னும் சம்மனசுக்கள் தேவரீரைப் புகழ்கிற மேலான தியானத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
4. அளவில்லாத கிருபையும் பொறுமையுமுடைத்தான சர்வேசுரனாகிய இயேசுவே! மிகுந்த பக்தி சிரவணத்தடனே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருக்கு மிகவும் அருவருப்பான எங்கள் கோபம், வர்மம், பழி முதலிய சகல அக்கிரமக்களுக்கும் பரிகாரமாக, பத்திராசனருடைய மாறாத சமாதானத்தையும், சாது அமரிக்கையையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
5. பரிசுத்த சிநேகத்தின் தேவதிரவிய அநுமானமாகிய நற்கருணையில் வீற்றிருக்கிற திவ்விய இயேசுவே! என் முழு மன நேசத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். பாவிகள் தேவரீருடைய பலிபீட சந்நிதானத்தில் முதலாய் நினைக்கத் துணிகிற சகல அசுசியான நினைவுகளுக்கும், வெட்கத்துக்குரிய துராசைகளுக்கும் பரிகாரமாக, நாதகிருத்தியருடைய பரிசுத்த ஆசைப் பற்றுதலையும், அவர்கள் தேவரீரைச் சிநேகிக்கும் அத்தியந்த நேசத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
6. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற மாசற்ற செம்மறிப் புருவையாகிய இயேசுவே! அனந்த பக்தி வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். திவ்விய பூசை நேரத்திலும் உமது திருச் சமுகத்திலே பாவிகளால் சம்பவிக்கும் அநாசாரம், தகாத பார்வை, மரியாதையில்லாத நடத்தை முதலிய சங்கைக் குறைகளுக்குப் பரிகாரமாக, சத்துவகரென்னும் சம்மனசுக்கள் தேவரீரை வணங்குகிற அத்தியந்த தாழ்ச்சி பொருந்தின நமஸ்காரங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
7. மாசற்ற சர்வ பரிசுத்ததனத்துக்கு ஊருணியும் மூலமுமாகிய இயேசுவே! என்னாலியன்ற மட்டும் ஒடுக்க வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். யூதாசென்கிற துரோகிக்கு இணையராய் நெறிகெட்ட முறையில், சிலர் கனமான பாவ தோஷமுள்ளஆத்துமத்தோடே தேவரீரைப் பலியிட்டு, திவ்விய நற்கருணை வழியாக உம்மை உட்கொள்ளும் அக்கிரம துரோகங்களுக்குப் பரிகாரமாக, பலவத்தருடைய பரிசுத்த தன்மையையும், அவர்கள் தேவரீரை ஆராதிக்கிற அனந்த பத்தியுள்ள ஆராதனைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
8. பரலோகத்திலும் பூலோகத்திலும் சகலராலும் முழந்தாளிட்டு சர்வ ஆராதனை நமஸ்காரம் செய்யப்படத் தக்கவராகிய சகல லோகாதிகாரண கர்த்தாவே! மிகுந்த வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருக்கு நிந்தையாச் சொல்லப்பட்ட சகல தூஷணங்களுக்கும் பரிகராரமாக, பிராதமிகர் உமக்குச் செலுத்துகிற அனந்த புகழ்ச்சித் தோத்திரங்களை தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
9.அத்தியந்த பிரமாணிக்கத்துடனே சேவித்து, சர்வ மகிமை தோத்திரமும் செலுத்தப்படுவதற்கு உரியவராகிய உலக இரட்சகரே! தேவரீரை ஆராதித்து வணங்குகிறேன். சிலர் தங்கள் மனசாட்சியை விபரீதப்படுத்தித் தங்களை மோசம்போக்குகிற குருட்டாட்டத்துக்கும், பிறருக்குச் செய்கிற சதிமார்க்கங்களுக்கும் பரிகாரமாக, அதி தூதர்களுடைய சுறுசுறுப்புள்ள பிரமாணிக்க மனப்பற்றுதலைத் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
10. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் ஆனந்தமாகிய திவ்விய இயேசுவே! என் முழு இருதயத்தோடு தேவரீரை அபேட்சித்து ஆராதிக்கிறேன். தேவநற்கருணை மூலமாக உம்மோடு அனந்த இன்பமுள்ள ஐக்கியமாவதற்குத் தேவரீர் மனுமக்களை அழைக்கிற அன்புள்ள தயையை, அநேகர் புறக்கணித்து அசட்டை பண்ணுகிற அவமானத்துக்குப் பரிகாரமாக, தேவதூதர்களுடைய தீவிரமான கீழ்படிதலையும் அவர்கள் உமது கிருபையைப் பாராட்டுகிற நன்றியறிந்த தோத்திரங்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
11. குறையாத கருணா சமுத்தரமாகிய திவ்விய இயேசுவே! அடியேன் மிகவும் பாவியாயிருந்தாலும் உம்முடைய தயாளத்தை நம்பி உமது கிருபைச் சிம்மாசனத்தை அண்டித் தேவரீரை ஆராதிக்கிறேன். உமது திரு இருதயத்துக்கு ஏற்காத துரோகமாக உமதன்புள்ள தயவின் பேரில் ஐயப்பட்ட சில பாவிகளுடைய குருட்டாட்டமுள்ள அவநம்பிக்கைக்குப் பரிகாரமாக, அடியேன் பரிசுத்த பிதாப்பிதாக்கள் தேவரீருடைய வாக்குத்தத்தங்களில் ஊன்றி நின்ற திடனான நம்பிக்கையை தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
12. அனந்த நேசத்துக்குரிய இயேசுவே! உமது திருவாக்கினால் வெளிப்படுத்தவும் சாதாரண திருச்சபையாற் படிப்பிக்கவும், எண்ணிறைந்த அற்புதங்களால் நிச்சயிக்கப்பட்டதும் மறைபொருளுமாகிய திவ்விய நற்கருணையில் மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறீரென்று உறுதியாக விசுவசித்துத் தேவரீரை அந்தியந்த வணக்கத்துடனே ஆராதிக்கிறேன். இந்த பரம திருவருட்சாதனத்தில் தேவரீர் உண்மையாய் வீற்றிருக்கிறீரென்கிற சத்தியத்தின்பேரில் அவிசுவாசிகள் கொண்ட அநியாயச் சந்தேகங்களுக்குப் பரிகாரமாக, அடியேன் இறைவாக்குரைஞர்கள் தங்களுக்குத் தோன்றிய தேவ காட்சிகளையும் தேவ திருவுளம் தங்களுக்கு ஏவின திரு வாக்கியங்களையும் ஏற்றுக் கொண்ட பக்தி சிரவணக்கத்தையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
13. சகல தகப்பன்மார்களிலும் அன்புள்ளவரும் அன்புக்குரியவருமாகிய திவ்விவிய இயேசுவே! உம்மை மிகுந்து நேசத்துடனே ஆராதிக்கிறேன். தேவரீர் அனந்த பட்சத்தோடு பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட மனுமக்களின் அவிசுவாசத்துக்கும் நன்றிகெட்ட பாவதுரோகங்களுக்கும் பரிகாரமாக, உம்முடைய அப்போஸ்தலர்களின் திடனுள்ள விசுவாசத்தையும், நன்றியறிந்த நேசத்தையும், தர்ம நடபடிக்கைகளையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
14.அத்தியந்த நேசமுள்ள நல்ல ஆயராகிய இயேசுவே! உண்மையான சிநேகத்தின் திவ்விய மாதிரிகையே, மிகுந்த சிரவணத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். உம்முடைய கட்டளைகளுக்கு விரோதமாய் நினைக்கப்பட்ட பழிகளுக்கான கருத்துக்களுக்கும் மனதிற்கொண்ட பொறாமைக்கும் பரிகாரமாக, மறைசாட்சிகளின் பொறுமையையும் அவர்கள் தங்களை வாதித்தவர்களுக்காகச் செய்த மன்றாட்டுகளையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
15. சர்வ நன்மைகளின் நிறைவான கருவூலமாகிய திவ்விய இயேசுவே! எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரை அத்தியந்த பக்தி ஆசையோடு அபேட்சித்து ஆராதிக்கிறேன். நெறிகெட்ட அக்கிரமிகளால் தேவரீருடைய தேவாலயங்களில் செய்யப்பட்ட சகல திருட்டுகளுக்கும் பரிகாரமாக, அடியேன் உம்முளைய பிரமாணிக்கமுள்ள ஊழியர் உமக்குத் தோத்திரமாகச் செலுத்திய தாராளமான திரவிய தானங்களையும் பத்தியுள்ள காணிக்கைகளையுமல்லாமல் என்னை முழுவதும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
16. பரம தேவ பிதாவிடத்தில் அடியோர்களுக்காக மிகவும் மனுப்பேசுகிற மத்தியஸ்தராகிய திவ்விய இயேசுவே! மிகுந்த நன்றியறிந்த மனதுடனே தேவரீரை ஆராதிக்கிறேன். திருச்சபையில் யாதோர் அதிகாரம் பெற்றவர்கள் உம்முடைய தேவாலயங்களில் தேவரீருக்குச் செய்யப்பட்ட சங்கையீனமான அநாசாரங்களைத் திருத்தாமலும் கண்டியாமலும் விட்ட அசதி அசட்டைத் தனத்துக்குப் பரிகாரமாக, அடியேன் பரிசுத்த மறைஆயர்களும், சிரேஷ்ட குருக்களும் தேவரீருடைய ஊழியத்திற் கொண்ட அணுநுணுக்கமான கவனத்தையும், சுறுசுறுப்புள்ள விசாரப் பத்தியையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
17. அளவில்லாத மகிமையுடைத்தான கடவுளாகிய இயேசுவே! உம்முடைய பிரதாப மகத்துவத்துக்குச் சரியான ஆராதனை நமஸ்காரத்தைத் தேவரீருக்குச் செலுத்த மனுமக்களாற் கூடாதாயினும், என்னாலியன்ற மட்டும் மிகுந்த பயபக்தியோடே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருநாமத்தைக் கொண்டு இடப்பட்ட பொய்யாணை, பொய்ச் சத்தியங்களுக்குப் பரிகாரமாக, அடியேன் வேதபாரகரும் மற்றச் சத்திய சாஸ்திரிகளும் உமக்குச் தோத்திரமாகச் செய்த அமிர்த பிரசங்கங்களையும், எழுதிய பக்தி நிறைந்த துதிகளையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
18. தாழ்ச்சியால் மறைந்திருக்கிற தெய்வீகமாகிய இயேசுவே! தேவரீர் உமது பிரதாப சோதிக்கதிர்களை மறைக்கிற திவ்விய நற்கருணையில் உம்மை அத்தியந்த விசுவாசத்துடனே ஆராதிக்கிறேன். தேவரீருக்கு ஏற்காத துரோகங்கiளாகிய சண்டை சச்சரவுகளுக்கும், பெருமை சிலாக்கியத்தின் பேரிலுள்ள பொறாமை, சச்சரை, காய்மகாரத்துக்கும், சகல துர்மாதிரிகைகளுக்கும் பரிகாரமாக, பரிசுத்த துதியர்களின் தாழ்ச்சி ஒடுக்க சிரவணத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
19. அடியோர்களுக்காக உம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறதிலே பிரியப்படுகிற நித்திய குருவே! நன்றியறிந்த மனதுடனே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருமறைக் குருக்களுக்கும் துறவியர், முனிவர், தபோதனர்களுக்கும், கன்னியர்களுக்கும் செய்யப்பட்ட நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, உமது மாறாத பொறுமையையும், சத்திய வேதபோதகர் அனைவரிலும் அப்போஸ்தலிக்குச் சற்குருக்களிலும் விளங்கிய உண்மையான பக்தியுள்ள தைரியப் பற்றுதலையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
20. சம்மனசுக்களின் திவ்விய அப்பமென்னப் பட்ட இயேசுவே! தேவரீர் மனுமக்களுக்கு திவ்விய போசனமாக உம்மைத் தந்தருளினதைப்பற்றி நன்றியறிந்த மனதோடே தேவரீரைத் துதித்து ஆராதிக்கிறேன். தேவரீர் கற்பித்த ஒருசந்தி சுத்தபோசனைக் கட்டளைகளுக்கு விரோதமாய் மனிதர் கட்டிக்கொள்ளுகிற போசனப்பிரியம், லாகிரி முதலிய பாவங்களுக்குப் பரிகாரமாக, உம்முடைய பரிசுத்த முனிவர் தபோதனர்களின் மட்டசனத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
21. பூரண பரிசுத்த கடவுளாகிய இயேசுவே! அத்தியந்த பயபக்தியுடனே தேவரீரை ஆராகிக்கிறேன். தேவரீருக்கு மிகவும் பிரிய சுகந்த புண்ணியமாகிய கற்புக்கு விரோதமாய் மனுமக்களால் இதுவரைக்கும் செய்யப்பட்ட சகல பாவ தோஷதுரோகங்களுக்குப் பரிகாரமாக, சந்நியாசிகளுடைய மாறாத தவ விரதத்தையும், பரிசுத்த கன்னியர்களுடைய மேரை மரியாதை ஒடுக்க வணக்கத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
22. எங்கள் ஆத்துமகங்களின் அன்புக்குரிய பத்தாவாகிய இயேசுவே! தேவற்கருணையை வாங்குகிற சமயத்திலே முதலாய்த் தேவரீர்பேரில் அநேகரிடத்தில் தோண்றிய பக்தி குறைவு, அசதி அசட்டைத்தனத்துக்குப் பரிகாரமாக, அடியேன் பக்தி மிகுதியாற் பரவசமான திருக்கன்னியரின் பற்றுதலுள்ள செபத் தியானங்களையும், அத்தியந்த நேசத்தையும் தேவரீர்க்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
23. சகல தேவதூதர்களாலும் மனிதர்களாலும் அனந்த பக்தியுடனே சிநேகிக்கப் படுவதற்குரிய திவ்விய இயேசுவே! தேவரீரை என் முழுஇருதயத்தோடே சிநேகித்து துதித்து ஆராதிக்கிறேன். துஷ்ட கலாபக்காரரும் கொலைகாரரும் உம்முடைய தேவாலயங்களுக்கு அஞ்சாமல், அவைகளின் சுத்திகரத்துக்குக் கேடாக அவைகளில்தானே நீதிமான்களின் மாசற்ற இரத்தத்தைச் சிந்தின குரூயஅp;ரத்துக்கும் தேவரீர் உம்முடைய கோவில்களில் வறுமை தரித்திரமாய் மனிதரால் நடத்தப்பட்ட அசட்டைத் தனத்துக்குப் பரிகாரமாக, முத்திப்பேறுபெற்ற சகல புனிதர்களின் நேச பக்தியுள்ள ஆராதனையையும், வேத கலாபங்களில் உம்முடைய பிரியமுள்ள ஊழியர் சந்தோஷத்துடனே பட்டவாதை, சிறுமை, தரித்திர துன்பங்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
24. நித்திய மகிமைக்கு இருப்பிடமான கன்னித்தாயின் திருக்குமாரனாகிய இயேசுவே! அத்தியந்த பக்தி வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். ஆராதனைக்குரிய பரம திருவருட்சாதனமாகிய தேவ நற்கருணையைத் தேவரீர் உண்டாக்கின நாள் முதற்கொண்டு அதிலே மனுமக்களால் தேவரீருக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரோகங்களுக்கும், இயன்றமட்டும் பொதுப் பரிகாரம் செய்யும்பொருட்டு, அடியேன் சகல பாவிகளுக்குத் திடமான அடைக்கலமும் தேவரீருக்குப் பிறகு அவர்களுக்குப் பிரதான நம்பிக்கை ஆதரவுமாகிய உம்முடைய திரு மாதாவின் உதவி அநுக்கிரகத்தை இரந்து கேட்கிறேன் சுவாமி.
மனுக்குலத்தின் நம்பிக்கையும், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் அரசியும், உம்முடைய திருக்குமாரனை இடைவிடாது ஆராதிக்கிறவளுமாகிய அன்புள்ள தேவதாயே! நீர் அன்போடே ஏற்றுக்கொண்ட பிள்ளைகளில் அடியேன் ஒருவனாயிருக்க மகிமைப் பாக்கியம் பெற்றவனாகையால் அனந்த பக்தி நம்பிக்கை நேசத்துடனே உம்முடைய பாதத்திலே விழுந்து பாவிகளாகிய எங்களுக்கு நீதித் தீர்வையிடும் நித்திய கர்த்தாவினிடத்தில் நீரே மனுப்பேசி, எங்களுக்காகவும் எங்கள் பேராலேயும் உம்முடைய புண்ணிய பலன்களால் உத்தரிக்கவும், எங்களாற் செலுத்த முடியாத அனந்த நமஸ்காரக் கடமைகளைத் தீர்த்து நிறைவேற்றவும் வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவளே. ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
அனுதின நிந்தைப் பரிகார செபம்:
இயேசுவின் திவ்விய இருதயமே! உமது அன்பின் திருவருட்சாதனமாகிய ஆராதனைக்குரிய சற்பிரசாதத்தில் விசேஷமாய் தேவரீருக்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக என்னை முழுதும் தேவரீருக்கு வசீகரமாக்கி, இன்று என் சிந்தனை, சொல், செயல்களையும், என் இன்ப துன்பங்களையும் எல்லாம் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். இனி எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரை மாத்திரம் நான் சிநேகிக்கவும் இவ்விதமாய் தேவரீருக்கு ஆறுதல் வருவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.