தூய சலேத் மாதா திருத்தலம், கண்டியங்குப்பம்
தூய சலேத் மாதா திருத்தலம்
இடம் : கண்டியங்குப்பம், வரதராசன்பேட்டை
மாவட்டம் : கடலூர்
மறை மாவட்டம் : கும்பகோணம்
மறை வட்டம் : ஜெயங்கொண்டம்
நிலை : திருத்தலம்
பங்கு : தூய அலங்கார அன்னை ஆலயம், வரதராசன்பேட்டை
திருத்தல அதிபர் & பங்குத்தந்தை : அருட்பணி. L. வின்சென்ட் ரோச் மாணிக்கம்
துணை அதிபர் & பொருளாளர் : அருட்பணி. J. M. ஜோமிக்ஸ் சாவியோ.
உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி. அருள் பிலவேந்திரன்.
திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மற்றும் 11.30 மணி.
நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு
சனி திருப்பலி : காலை 06.30 மணி, காலை 11.30 மணி, மாலை 06.30 மணி.
மாதந்தோறும் சிறப்பு நிகழ்வுகள் :
முதல் சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை செபவழிபாடு. மதிய உணவு. மாலை 06.30 மணிக்கு தேர்பவனி, திருப்பலி, நற்கருணை ஆராதனை.
இரண்டாம் சனிக்கிழமை : மாதா மலையில் செப வழிபாடு (குழந்தை வரம்), திருப்பலி. தொடர்ந்து இறை மக்களின் கும்மி, கோலாட்டம் அடித்தல். இறுதியில் மாதாவின் ஆசீர்பெற்ற அருமருந்து.
3 ம் சனிக்கிழமை : இரவு 09.00 மணி முதல் மறுதினம் காலை 04.00 மணி வரை முழு இரவு செபவழிபாடு.
4 ம் சனிக்கிழமை : மாதா தொலைக்காட்சியில் மதியம் 01.00 மணி முதல் 02.00 மணி வரை இத்திருத்தல நிகழ்வுகள் ஒளிபரப்பப்படும்.
திருவிழா : ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை கொடியேற்றம் மே மாதம் முதல் சனிக்கிழமை ஆடம்பர தேர்பவனி. தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, கொடியிறக்கம்.
வழித்தடம் :
விருத்தாச்சலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜெயங்கொண்டம் -ஆண்டிமடம் -வரதராசன்பேட்டை -திருத்தலம். மற்றும் இதே தேசிய நெடுஞ்சாலையில் இரேந்திரபட்டிணம் -ஸ்ரீமுஷ்ணம் -தேத்தாம்பட்டு -திருத்தலம்.
சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சோழதரம் -தேத்தாம்பட்டு -திருத்தலம்.
Address and location Map :
Saleth Madha Shrine, Kandiyankuppam, Adhivaraganallur (Post), Srimushnam, Tamil Nadu 608703
https://maps.google.com/?cid=3246568054410999857
வரலாறு :
புனித அருளானந்தர், வீரமாமுனிவர் ஆகியோரின் நற்செய்தி பணியில் உருவான சிறந்த ஊர் தான் அய்யம்பேட்டை (வரதராசன்பேட்டை). இறைப்பணிக்காக 87 அருட்பணியாளர்களையும், 400 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும் தந்திட்ட, விசுவாசத்தின் விளை நிலமான இவ் வரதராசன்பேட்டையின் கண்டியங்குப்பம் ஊரில் தூய சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் இத்திருத்தலமானது ஆண்டிமடத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், திருமுட்டத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், சோழத்தரத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மரியன்னையின் காட்சி:
15.02.1997 அன்று திரு. ஆசீர்வாதம் அவர்கள் கன்னாபுரி -யில் உள்ள தமது வயலுக்கு மங்கிய மாலை நேரத்தில் நீர் பாய்ச்சும் போது, தற்போது சிற்றாலயம் கட்டப்பட்டுள்ள இடத்தில் அற்புதமான பேரொளியைக் கண்டார். மேலும் அன்றிரவே மரியன்னை திரு. ஆசீர்வாதம் அவர்களின் கனவில் தோன்றி "என்னைப் பற்றி எல்லாருக்கும் எடுத்துச் சொல். என்னிடம் எல்லோரையும் வரச் சொல். நான் அவர்களது கவலையைப் போக்குவேன்" என்று கூறி ஒளி தோன்றிய இடத்தில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏழையான தம்மால் எப்படி ஆலயம் கட்ட முடியும்..! இதனை மக்களிடம் கூறினால் தம்மை எள்ளி நகையாடுவார்கள் என எண்ணியவராக எவரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இவ்வாறிருக்க தமது மகன் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட போது வரதராசன்பேட்டை பழைய ஆலயத்தில் உள்ள மரியன்னையின் சுரூபத்தின் முன் அழுது புலம்பி ஜெபித்தார்.. அன்னையே எமது மகனின் நோயை குணமாக்குங்கள்.. அடியேன் உம் விருப்பப்படியே காட்சி தந்த இடத்தில் ஆலயம் எழுப்புகிறேன் என வேண்டினார். எந்த மருத்துவமும் பார்க்காமல் அன்னையின் கருணையால் திரு. ஆசீர்வாதத்தின் மகன் குணமடைந்தார்.
23.02.1998 அன்று கன்னாபுரியில் மலைமாதா சிற்றாலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, மக்களின் துணையுடன் திரு. ஆசீர்வாதம் அவர்கள் சிற்றாலயத்தை கட்ட ஆரம்பித்தார்.
கன்னாபுரியில் வாழ்ந்த மக்கள் பல ஆண்டுகளாக பருவமழை தவறாது பெய்ய வேண்டும் என்பதற்காகவும், சாத்தானின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்பதற்காகவும், நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தூய சலேத் மாதாவிற்கு நேர்ந்து கொண்டு (வேண்டிக்கொண்டு) பொங்கல் வைத்து ஏழைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இருந்து வந்தது.
ஆகவே கன்னாபுரியில் கட்டப்பட்ட ஆலயத்திற்கு தூய சலேத் மாதாவின் பெயருக்கு அர்ப்பணித்து, பங்குத்தந்தை உபகாரசாமி அவர்களால் 02.01.1999 அன்று அன்னையின் சுரூபம் ஆலயத்தில் வைக்கப்பட்டு, திருத்தலமானது புனிதப் படுத்தப் பட்டது.
இரக்கத்தின் ஊற்றாகிய தூய சலேத் மாதாவை விசுவாசத்துடன் நாடி வரும் எண்ணற்ற முடவர்கள் நடக்கிறார்கள், திருமண வரன் அமையப் பெறுகிறார்கள், தீராத நோய்கள் குணமடைகின்றன. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்று வருகின்றனர்.
இத்தகைய அற்புதங்களை கேள்விப்பட்ட கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றவும், திருவருட்சாதனங்கள் வழங்கவும் அனுமதியளித்தார். ஆலயத்தில் நடைபெறுகின்ற புதுமைகளின் சான்றுகள், இறை மக்களின் பார்வைக்காக ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுன.
மண்ணின் மைந்தர் அருட்பணி. வி. அந்தோணிசாமி அவர்களின் உதவியால் கட்டப்பட்ட தூய சலேத் மாதாவின் நுழைவாயில் 21.02.2002 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.
புனித சலேத் மாதாவின் புகழ் பாரெங்கும் பரவிடவே சிற்றாலயத்தின் பக்கவாட்டில், வரதராசன்பேட்டை பங்குத்தந்தையாக அருட்பணி. தன்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் கட்டப்பட்டு 05.05.2012 அன்று கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
திருத்தல உட்பகுதி :
திருத்தலத்தின் பலிபீடத்தில் மையப் பகுதியில் இயேசுவின் பாடுபட்ட சுருபமும், ஒருபுறம் நற்கருணை பேழையும், மறுபடியும் காட்சி நல்கிய தூய சலேத் மாதா சுரூபமும் உள்ளன.
ஆலயத்தின் முன்புறம் கெபி ஒன்று உள்ளது. இக்கெபியில் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி அவர்களால் வழங்கப்பட்ட, பிரான்ஸ் நாட்டின் லா சலேத் நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட சலேத் மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான இறை மக்கள் இத் திருத்தலம் வந்து, மாதாவிடம் ஜெபித்து ஏராளமான நன்மைகளை பெற்றுச் செல்கிறார்கள். அதற்கு நன்றியாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வழங்கிய தூய சலேத் மாதாவின் சுரூபம் திருத்தலத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது திருத்தலத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவாகவும், நேர்த்தியாகவும் நடந்து வருகின்றன.
தூய லூர்து மாதா கெபி :
திருத்தலத்தின் பக்கவாட்டுப் பகுதியில் மக்களின் ஒத்துழைப்புடன் லூர்து மாதா கெபி கட்டப்பட்டு 21.05.2011 அன்று புனிதப் படுத்தப் பட்டது.
சலேத் மாதா அருட்பொருளகம் :
திருத்தல அதிபராக அருட்பணி. பெஞ்சமின் ஜோசப் அவர்கள் பணியாற்றிய காலத்தில் சலேத் மாதா அருட் பொருளகம் 2013 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
பின்னர் திருத்தல அதிபர்கள் அருட்பணி. வின்சென்ட் ரோச் மாணிக்கம் மற்றும் அருட்பணி. ராஜமாணிக்கம் ஆகியோரின் முயற்சியால் அருட்பொருளகம் புதுப்பிக்கப்பட்டு 03.04.2017 அன்று மேதகு ஆயர் அந்தோணிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சலேத் மாதா பூங்கா :
திருத்தல அதிபர் அருட்பணி. வின்சென்ட் ரோச் மாணிக்கம் மற்றும் அருட்பணி. ராஜமாணிக்கம் அவர்களின் முயற்சியால் சலேத் மாதா பூங்காவும் கெபியும் அமைக்கப்பட்டு 30.12.2015 அன்று மேதகு ஆயர் அந்தோணிசாமி அவர்களால் புனிதப் படுத்தப் பட்டது.
வேளாங்கண்ணி மாதா குளத்திற்கு இறை மக்கள் முழந்தாள் படியிட்டு செல்வது போல, இந்தப் பூங்காவிலும் மக்கள் செல்வதற்கு வசதி செய்யப் பட்டுள்ளது. ஏராளமான மக்கள் மாதாவிடம் வேண்டி ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
சலேத் மாதா குளம் :
திருத்தலத்தின் பின்புறம் மேட்டுப்பகுதியில் அருட்பணி. அந்தோணி சாலமன் அவர்களால் மாதாகுளமும் கெபியும் அமைக்கப்பட்டு 28.02.2006 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
பின்னர் திருத்தல அதிபர் அருட்பணி. வின்சென்ட் ரோச் மாணிக்கம் மற்றும் அருட்பணி. ராஜமாணிக்கம் ஆகியோரின் முயற்சியில் புதுப்பிக்கப்பட்டு 17.02.2017 அன்று மேதகு ஆயர் அந்தோணிசாமி அவர்களால் புனிதப் படுத்தப் பட்டது.
கண்டியங்குப்பம் புனித சலேத் மாதா திருத்தலத்திற்கு வாருங்கள்..! மாதாவின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்..!
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.