ஆரோக்கிய அன்னை ஆலயம்


இடம் : பண்ணூர், 602108.

மாவட்டம் : திருவள்ளூர்

மறை மாவட்டம் : சென்னை- மயிலை உயர் மறை மாவட்டம்

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :

1. புனித அந்தோணியார் ஆலயம், அந்தோணியார் புரம்

2. புனித சூசையப்பர் ஆலயம், சூசையப்பர் புரம்.

பங்குத்தந்தை : அருட்பணி பிரேம் ராஜ்

குடும்பங்கள் : 470
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு

வார நாட்களில் திருப்பலி : காலை 06.15 மணிக்கு நற்கருணை ஆசீர்,
காலை 06.30 மணிக்கு திருப்பலி.

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு தேர்பவனி, நவநாள், திருப்பலி தொடர்ந்து அன்பு விருந்து.

திருவிழா : மே மாதம் 31-ஆம் தேதி.

வழித்தடம் : 
கோயம்பேடு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் என்ற இடத்தில் இறங்கி, இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது பண்ணூர்.
வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த அழகிய பண்ணூர் கிராமத்தில் தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது.

சுமார் 16-ஆம் நூற்றாண்டில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருந்து கம்மவார் மக்கள் கடப்பா, கர்னூல், அனந்தபுரம் மாவட்டங்கள் அடங்கிய கண்டிகோட பகுதிகளில் வசிக்கத் துவங்கினர். அக்காலத்தில் கண்டிகோட பகுதியை ஆண்டு வந்த நவாப்களிடம் இம்மக்களில் சிலர் முக்கிய கடிதங்களை எழுதியனுப்பும் வேலை செய்து வந்துள்ளனர். சிலர் போர் நடக்கும் பகுதிகளுக்கு இந்த கடிதங்களை கொண்டு செல்லும் வேலை செய்து வந்தார்கள் என கூறப்படுகிறது. மேலும் சிலர் நவாப்களிடமும், அரசர்களிடமும் பெரிய பதவிகளை வகித்து சிறப்புற்று வாழ்ந்திருந்த வேளையில், சேசு சபை குருக்கள் இவர்களது உதவியால், அரசர்களின் தயவைப் பெற்று சத்திய வேதத்தை போதிக்கத் துவங்கினர்.

கண்டிகோட பகுதியில் சத்திய வேதத்தை போதித்த சேசு சபை குருக்கள் சிலருக்கு திருமுழுக்கு கொடுத்தனர். முதலில் இவர்களுக்கு ஆதரவாக நவாப்கள் இருந்து வந்தனர். ஆனால் 1743-ஆம் ஆண்டு பதவியில் இருந்த நவாப்கள் இவர்களை துன்புறுத்தத் துவங்கினர். இவ்வேளையில் இங்குள்ள கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்த 200 கிறிஸ்தவ மக்களும், வழிகாட்டியாக விளங்கிய குருவானவரும் இணைந்து ஆலயம் ஒன்றை கட்டிக் கொண்டிருந்த போது, நவாப்பின் சிப்பாய்கள் (படை வீரர்கள்) அந்த கிராமத்திற்குள் சென்று கொள்ளையடித்து விட்டு, கட்டப்பட்டு வந்த ஆலயத்தையும் இடித்து தரை மட்டமாக்கினர்.

ஆகவே அங்கிருந்த குருக்களும், கிறிஸ்தவர்களும் தெற்குப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். சிலர் குண்டூர் மாவட்டத்திற்கும், மற்றும் சிலர் ஓலேரு பகுதியிலும் குடியேறினர். இதில் ஓலேரு பகுதியில் குடியேறியவர்கள் சில காலத்திற்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில் நுழைந்தனர். இவர்களை இவ்வாறு அழைத்து வந்தவர் அருட்பணி மனன்தே S. J சுவாமிகள் என கூறப்படுகிறது.

அருட்பணி மனன்தே சுவாமியவர்களுக்கு ஆங்கிலேயர்கள் (பிரிட்டிஷ்) கீழச்சேரி-க்கு அருகே கொஞ்சம் நிலத்தை இலவசமாகக் கொடுத்து, உதவிகள் பலவும் செய்தனர். அருட்பணி மனன்தே சுவாமிகள் அழைத்து வந்த மக்களையெல்லாம் இங்கு குடியமர்த்தி வாழச் செய்ததுடன், பல பகுதிகளில் உள்ள இம்மக்களின் உறவினர்களையும் அழைத்து வரச் செய்தார்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட ஊர் தான் சிறப்பு வாய்ந்த பண்ணூர்.

இவர்கள் இங்கு வந்த போது இங்கிருந்த நிலங்களெல்லாம் காடுகளாக இருந்தன. உழைப்பிற்கு பெயர் பெற்ற இம்மக்கள் காட்டை அழித்து மக்கள் வசிக்கும் இடங்களாக மாற்றி, இறைவனின் ஆசியுடன் வாழத் துவங்கினர். பின்னர் 1859 -இல் ஒரு ஆலயம் கட்டி அதனை தூய ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணித்து விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தனர்.

முதலில் இவ்வாலயம் கீழச்சேரி பங்கின் கிளைப் பங்காக இருந்தது. பின்னர் 1873-இல் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

பங்கு மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்டப்பட்டு 29-05-1998 அன்று மேதகு ஆயர் Dr Aruldoss James DD அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலயத்தின் 150-வது ஆண்டு விழா 2009-ஆம் ஆண்டில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

பங்கின் தனித்தன்மைகள் :

பள்ளிக்கூடங்கள் :
St. Joseph's Girls hr. sec School
St. Ann's Primary school
Don Bosco hr. sec school
Don Bosco matric hr. sec School
ஆகியன இப்பகுதி மக்களின் கல்வியறிவிற்கு பெரிதும் துணை நிற்கின்றது.

புனித ஆரோக்கிய அன்னை கெபி

புனித அந்தோணியார் கெபி

புனித லூர்து அன்னை கெபி ஆகியவை மக்களின் விசுவாசத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.

நற்கருணை சிற்றாலயம் ஒன்று கட்டப்பட்டு, ஜெபிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்து, இறைவனில் ஒன்றித்திருக்க செய்கின்றது.

புனித அன்னாள் சபை :
அடைக்கல அன்னை சபை :

ஆகிய இரு சபை அருட்சகோதரிகள் இல்லங்களும் இங்கு உள்ளன. இந்த இரண்டு சபைகளின் அருட்சகோதரிகள் கல்விப்பணியிலும் மருத்துவப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பண்ணூரை சிறப்புறச் செய்கின்றனர்.

சிறந்த நூலகங்கள் இரண்டு இங்கு காணப்படுவது தனிச் சிறப்பு.

Source : www.catholictamil.com