மரியாளை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?
மரியாளை யோவானின் தாயாகத்தானே இயேசு ஒப்படைத்தார். அவ்வாறெனில் அவரை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?
"அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத் தேயு 5:9) என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு மனிதரும் தமது நேரிய வாழ்வால் கடவுளின் பிள்ளைகள் ஆக முடியும் என்பதே இதன் பொருள். கிறிஸ்து இயேசுவின் நேரிய செயல்களால் அவரை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவரும் இறைத் தந்தையின் பிள்ளைகளாகும் பேறு பெற்றிருக்கிறோம். "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்கு சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்." (எபேசி யர் 1:3,5) இயேசுவின் தந்தையான கடவுள் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பது போன்று, அவரது தாயான மரியாளும் கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் தாயாகத் திகழ்கிறார்.மரியாளை மனிதகுலத்தின் தாயாக்கும் கடவுளின் திட்டத்தை, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் இயேசு வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். 'இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார்.' (யோவான் 19:26-27) மரியாள்வை யோவானின் பாதுகாப்பில் ஒப்படைக்க இயேசு நினைத்திருந்தால், யோவானிடம்தான் முதலில் பேசியிருக்க வேண்டும். யோவானை முதலில் மரியாளிடம் ஒப்படைப்பதில் இருந்தே இயேசுவின் நோக்கம் தெளிவாகிறது. மேலும் நற்செய்தியில் யோவானின் பெயரைக் குறிப்பிடாமல் சீடரிடம் என பொதுவாக கூறுவதன் மூலம், இயேசுவின் சீடர்களாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் மரியாள்வைத் தாயாக ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுவதை உணர முடிகிறது. அதுவே, இயேசுவின் கடைசி விருப்பம் ஆகும்.
'சிலுவை அடியில் நின்ற சீடர் மட்டுமே மரியாளைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்' (யோவான் 19:27) எனக் கூறப்பட்டிருந்தாலும், இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு சீடர்கள் அனைவருமே அன்னை மரியாளின் அரவணைப்பில் வாழ்ந்ததைக் காண்கிறோம். 'அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாளோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.' (திருத் தூதர் பணிகள் 1:14) இவ்வாறு, பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிறிஸ்து இயேசுவைப் பெற்றெடுத்த மரியாளே, பெந்தக்கோஸ்து நாளில் பரிசுத்த ஆவி வல்லமையோடு இறங்கி வந்தபோது திருச்சபையின் மக்களைப் பெற்றெடுத்தார். ஆகவே, மரியாள் கிறிஸ்தவர்களின் தாயானார். பாவ வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக ஏவாள் இருப்பது போல், அருள் வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக மரியாள் திகழ்கிறார்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.