கர்த்தருடைய ஐந்து காய ஜெபம்
கர்த்தருடைய ஐந்து காய ஜெபம்
சேசுகிறீஸ்துநாதர் பாடுபட்ட சிலுவையடியிலே தேவமாதா கூட நிற்கிறதுபோலவும், அவருடைய திருக்காயங்களையும், அக்காயங்களிலே நின்று வடிந்தோடும் திரு இரத்தத்தையும் கண்ணால் காண்கிறது போலவும் தியானித்து விசுவாசமாயிருக்கிறது. அதாவது: என் கர்த்தரே! தேவரீர் மெய்யான சர்வேசுர னும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருந்து, அடியோர்களுக்காகப் படாத பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு மரணத்தை அடைந்தீர் என்கிறதினாலே, தேவரீரை வணங்கித் தோத்திரம் பண்ணுகிறோம். தேவரீர் இத்தனை சகாய உபகாரங்களை அடியோர்களுக்குக் கட்டளை பண்ணினதினாலே, சகல சம்மனசுக்கள் முதலிய மோட்சவாசிகளோடே தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். அப்படியே தேவரீருடைய திருக்காயங்கள் ஐந்தையும் வணங்குகிறோம்.
1. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய இடதுபாதத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். திவ்விய சேசுவே! இந்தத் திருக் காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் செய்த பாவமெல்லாம் எங்கள் நினைவிலே வரவும், அவைகளுடைய தின்மைத்தனத்தைக் கண்டுபிடித்து அவைகளை முழுமனதோடே வெறுக்கவும் கர்த்தர் கிருபை செய்தருள வேணு மென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.
2. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீ ருடைய வலது பாதத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். இனிய சேசுவே! இந்தத் திருக்காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் செய்த பாவங்களுக்கு மெய்யான மனஸ்தாபம் உண்டாகத் தக்கதாக தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.
3. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய இடது கரத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். நேச சேசுவே! இந்தத் திருக்காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் இனிமேல் ஒருக்காலும் பாவங்களைச் செய்யாதிருக்க வேண்டிய ஒத்தாசை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.
4. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய வலது கரத்தின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். உன்னத சேசுவே! இந்தத் திருக்காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, நாங்கள் பாவப் பொறுத்தல் அடைந்து இஷ்டப்பிரசாதத்தோடே மரித்து மோட்ச பாக்கியத்தை அடையத் தக்கதாக தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.
5. சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய திருவிலாவின் திருக்காயத்தை வணங்கி நமஸ்கரித்து முத்தி செய்து ஆராதனை பண்ணுகிறோம். அன்புக்குரிய சேசுவே! இந்தத் திருக் காயத்தையும் தேவரீருடைய திவ்விய மாதாவின் அத்தியந்த வியாகுலத்தையும் குறித்து, தேவரீ ருடைய மட்டற்ற சிநேகத்தை எங்களுக்குக் கட்டளை பண்ணவும், கடைசியாய் நாங்கள் சாகிற தருணத்திலே தேவரீருடைய திருக்காயங் களுக்குள்ளே மறைந்தவர்களாய் நல்ல மரணமடையவும், தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஒரு பர. அருள். திரி.
அதன்பின் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற வகையாவது
பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! தேவரீருக்கு உகந்த குமாரனுமாய் எங்களுக்குக் கர்த்தருமாயிருக்கிற சேசுகிறீஸ்துநாதர் எங்களுக்காக இத்தனை பாடுகள் பட்டாரே. அவருடைய பாடுகளையும் பீடையையும் சிலுவையையும், மரணத்தையும் அடக்கத்தையும் துக்கத்தையும் அவருடைய திருக்காயங்களிலே நின்று வடிந்தோடும் திரு இரத்தத்தையும் பார்த்துப் பாவிகளாகிய அடியோர்கள் கேட்கிற இந்த ஐந்து மன்றாட்டுகளையும் அவருடைய ஐந்து திருக் காயங்களையும் குறித்து கட்டளை பண்ணி யருளும் சுவாமி.
ஆமென்.
1 பரலோக மந்திரம் சொல்லவும்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.