அர்ச். மக்காரியுஸ் மடாதிபதி (கி.பி.394).
ஜனவரி 02
அர்ச். மக்காரியுஸ் மடாதிபதி (கி.பி.394).
அலெக்ஸாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்துவந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யத் தீர்மானித்து, நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் அரிதான ஜெப தபங்களை செய்துவந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம மாதிரியைப் பின்பற்றி, புண்ணியவான்களாய் வாழ்ந்தார்கள்.
மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார். கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் உண்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒரு நாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குலையை உண்ணாமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை உண்ணாமல் மக்காரியுஸுக்கு அனுப்பிவிட்டார்கள். தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அநுசரிப்பதையறிந்து சந்தோஷமடைந்தார்.
வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடை களை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு மரித்த படியால், அந்த பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச். மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகள் உண்டாக அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர், வயோதிகரான அர்ச். மக்காரியுஸை பல விதமாயத் துன்பப்படுத்தினார்கள்.
இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து 394-ம் வருடம் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடுக்காமல் மட்டசனம் என்னும் புண்ணியத்தை அனுசரிப்போமாக.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.