தூணில் நின்று தவம் புரிந்த அர்ச். சிமெயோன் - துதியர்.
ஜனவரி 05
தூணில் நின்று தவம் புரிந்த அர்ச். சிமெயோன் - துதியர்.
இவர் சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார். தமது 13-ம் வயதில், இவர் நமது கர்த்தர் மலையின் மேல் எட்டு வாக்கியங்களை வாசிக்கக் கேட்டு, அவைகளின்படி நடக்க விருப்பம் கொண்டு, இடைவிடாமல் ஜெபத் தியானஞ் செய்து கண்ணீர் சிந்தி அருந் தவம் புரியத் தொடங்கினார்.
இதில் திருப்தி கொள்ளாமல் ஒரு மலையின் மேல் ஒதுங்கி கடின தவஞ் செய்து வந்தபடியால் இவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஏராளமான ஜனங்கள் அவ்விடம் சென்று இவருடையப் புண்ணியங்களையும் புதுமைகளையுங் கண்டு அதிசயித்தார்கள்.
இவர் கடின தவம் புரிய தீர்மானித்து 60 அடி உயரமுள்ள தூண் ஒன்றின்மேல் ஏறித் தவம் புரிந்துவந்தார். ஆட்டுத் தோலை ஆடையாகத் தரித்துக் கடும் ஓருசந்தி பிடிப்பார்.
ஒரு நாளைக்கு அநேகத் தடவை முழந்தாற்படியிட்டு சர்வேசுரனை ஆராதிப்பார். ஒவ்வொரு நாளும் இருமுறை துாணைச் சுற்றிக் கூடியிருக்கும் திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்வார்.
இவருடையப் புண்ணியத்தை பரிசோதிக்குங் கருத்துடன் அருகாமையிலிருந்த மேற்றிராணிமார் சிலர் இவரைத் தூணிலிருந்து இறங்கி வரும்படி கட்டளையிட்டார்கள். உடனே சிமெயோன் இறங்க முயலுவதை அவர்கள் கண்டு, அவர் தேவசித்தப் பிரகாரம் நடக்கிறாரென்று அறிந்து கொண்டு அவரைத் தூணிலேயே இருக்கும்படி சொன்னார்கள்.
இவர் செய்து வந்த கடின தபசையும் பல புதுமைகளையுங் கண்ட அரசர்கள் அவரைச் சந்தித்து, அவர் ஆலோசனையைக் கேட்பார்கள். அவர் ஒருநாள் துாணில் அசைவற்றிருந்தபடியால் சிலர் அதன்மேல் ஏறிப் பார்த்தபோது அவர் மரித்து விட்டார் என்று கண்டுகொண்டார்கள்.
அர்ச். சிமெயோன் தமது 69-ம் வயதில் இப்படியாக மரித்து வெகு ஆடம்பரமாக அடக்கஞ் செய்யப்பட்டார்.
யோசனை
நாம் கடினத் தவஞ் செய்யாவிடினும் ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுக்கப் பழகுவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். தெலஸ்போருஸ், பா.வே.
அர்ச். சின்க்ளேதிகா, க.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.