ஜனவரி 25

அர்ச். சின்னப்பர் மனந்திரும்பின திருநாள். 

அர்ச். சின்னப்பர் யூத தாய் தகப்பனிடத்தினின்று பிறந்தார். இளமையில் கல்வி பயிற்சி பெறும்படி இவருடைய பெற்றோர் இவரை ஜெருசலேம் நகருக்கு அனுப்பிவைத்தார்கள். 

அவ்விடத்தில் அவர் உலக படிப்புடன் வேதாகமங்களையும் வாசித்து வந்தார். இவர் பரிசேய வகுப்பைச் சேர்ந்து, மோயீசனின் ஒழுங்கு ஆசாரங்களை வெகு கவனமாய் அநுசரித்து வந்தார். கிறீஸ்தவ வேதத்தினிமித்தம் யூதர் அர்ச். முடியப்பரை கல்லால் எறிந்து கொன்றபோது, சின்னப்பர் அவர்களுடைய வஸ்திரங்களைப் பத்திரமாய் பார்த்துக்கொண்டு இருந்தார். 

மேலும் இவர் விசுவாசிகளைத் தேடிப் பிடித்து, அவர்களை யூத சங்கத்தாரிடம் இழுத்துக்கொண்டுபோய் விடுவார். ஆகையால் கிறீஸ்தவர்கள் அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி நடுங்குவார்கள். 

தமாஸ்கு நகருக்குச் சென்று, அங்குள்ள சகல கிறீஸ்தவர்களையும் பிடித்துக் கட்டின கட்டுடன் ஜெருசலேமுக்கு கொண்டுபோகும்படி யூத சங்கத்தின் உத்தரவு பெற்று, சின்னப்பர் அவ்விடத்திற்கு புறப்பட்டார். 

இவர் மத்தியான வேளையில் தமாஸ்கு நகரைச் சமீபித்தபோது சூரியப் பிரகாசத்திலும் அதிக காந்தியான பிரகாசம் இவர்மேல் படவே கீழே விழுந்தார். 

“சவுலே, சவுலே! என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்னும் சத்தத்தை இவர் கேட்டு, “நீர் யார் ஆண்டவரே?” என்று வினவியபோது, “நீ உபாதிக்கும் சேசு நானே. என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்றார். அதற்கு சின்னப்பர், “ஆண்டவரே! உமது சித்தத்தை அறிவித்தால் அதன்படி செய்கிறேன்'' என்றார். 

இவருக்கு கண் பார்வையற்று போக தேவ உத்தரவின்படி தமாஸ்குக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டு, அங்கு மூன்று தினங்களாக உண்ணாமலும் குடியாமலும் தன் பாவங்களுக்கு அழுது துக்கப்பட்டுகொண்டிருந்தார். 

அனனியாஸ் என்பவர் தேவ கட்டளைப்படி சின்னப்பர் சிரசின்மேல் தமது கரங்களை நீட்டவே, அவர் கண்பார்வை அடைந்தார். அது முதற்கொண்டு, சின்னப்பர் கிறீஸ்து வேதத்திற்காக சகல வித கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, சத்திய வேதத்தை தேசமெங்கும் போய் போதித்து அதற்கு சாட்சியாகத் தமது இரத்தத்தைச் சிந்தி மரணமானார்.

யோசனை 

தேவ ஏவுதலுக்கு நமது இருதய வாசலைத் திறப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஜுவென்ஸியுஸும் துணை, வே. 
அர்ச். ப்ரொஜெக்துஸ், மே. வே.