புனித மரியாளின் மாசற்ற நேர்ச்சைத் திருத்தலம் 

இடம் : கீழ்ப்பாக்கம் 

மாவட்டம் : சென்னை 

மறைமாவட்டம் : சென்னை மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம் : புனித திருமுழுக்கு யோவான் மறைவட்டம் 

நிலை : திருத்தலம் 

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோணியார் ஆலயம், சேத்துப்பட்டு 

2. புனித அந்தோணியார் ஆலயம், T. P சத்திரம் 

3. அன்னை வேளாங்கண்ணி ஆலயம், கஜலட்சுமி காலனி

பங்குத்தந்தை : அருள்பணி. E. அருளப்பா 

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. அலெக்ஸ் சகாயராஜ்

குடும்பங்கள் : 1650

அன்பியங்கள் : 40

29 (தமிழ்) 

11 (ஆங்கிலம்) 

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 05.45 மணி, காலை 08.30 மணி திருப்பலி (தமிழ்)

திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி திருப்பலி : மாலை 06.30 மணி (தமிழ்) 

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி: காலை 06.30 மணி (தமிழ்) 

ஞாயிறு காலை 07.00 மணி மாலை 05.30 மணி திருப்பலி (ஆங்கிலம்) 

திங்கள், புதன், வெள்ளி காலை 06.30 மணி திருப்பலி (ஆங்கிலம்)

வியாழன், சனி திருப்பலி மாலை 06.30 மணி (ஆங்கிலம்) 

மாதத்தில் முதல் வெள்ளி மாலை 03.00 மணி நவநாள் இறைஇரக்க திருப்பலி நற்கருணை ஆசீர் 

ஒவ்வொரு மாதமும் 8ம் தேதி மாலை 06.15 மணி ஜெபமாலை, நவநாள் திருப்பலி, நோயாளிகள் மந்திரிப்பு, தேர்பவனி 

புதன் மாலை 06.30 மணி சகாய மாதா நவநாள் (தமிழ்) 

சனி மாலை 06.30 மணி நவநாள் (ஆங்கிலம்) 

திருவிழா : ஜூன் மாதத்தில் 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. பேரருள்பணி. ஸ்டான்லி செபாஸ்டின் 

2. அருள்பணி. ராஜ்பால், CSsr

3. அருள்பணி. ஜூட் பிரகாசம் 

4. அருள்பணி. ஜெரால்ட் மஜெல்லா 

வழித்தடம் : எக்மோர் -கீழ்பாக்கம் 

Church website : http://votiveshrine.in/

வரலாறு :

இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த நேரமது....! உலக முடிவு நெருங்கிவிட்டதோ..! என்று அஞ்சுமளவிற்கு கடுமையான தாக்குதல்கள்...! பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கி.பி 1942 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் போரில் குதித்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தது. மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா நாட்டை கைப்பற்றிய ஜப்பான், இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் பெரும் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அடுத்த இலக்காக இலங்கையின் திரிகோணமலைக்கு பயணித்த ஜப்பானிய கடற்படை, ஆங்கிலேய கடற்படையை கடுமையாக தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 

அவ்வேளையில் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த இந்தியாவிலும், மிகக் குறிப்பாக சென்னையிலும், ஜப்பானிய தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற அச்சமும் கவலையும் தமிழக மக்களை ஆட்கொண்டது. 

சென்னையை சுற்றி வாழ்ந்த மக்கள் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள நகரைவிட்டு குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடம் தேடி உள்நாட்டிற்கு இடம்பெயர ஆரம்பித்தனர். அப்போது சென்னை மாகாணம் ஆந்திராவின் விஜயவாடா முதல் தெற்கே கன்னியாகுமரி வரையிலும், ஐதராபாத் மைசூர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக்குட்படாத தென் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. 

சென்னை மறைமாவட்டத்தின் பேராயராக இருந்த மேதகு லூயிஸ் மத்தியாஸ் ஆண்டகையின் வார்த்தைகளிலும் உள்ளத்திலும் சென்னையைக் குறித்த பயம் மேலோங்கியிருந்தது. பள்ளிகளின் விடுதிகளில் பயிலும் மாணவர்கள் கூட உயிருக்கு பயந்து உள்நாட்டில் ஓடிஒளியும் அச்சமானநிலை மேலோங்கியிருந்தது. இவ்வாறாக சென்னை நகரமே வெறிச்சோடிக் கிடந்தது. 

வாழ்வே கேள்விக்குறி என்று மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில் சிதறி ஓடி, ஒளிந்து தஞ்சம் புகுவதைக் கண்ட பேராயர் லூயிஸ் மத்தியாஸ் அவர்கள் அன்னை மாமரியிடம் தஞ்சம் புகுவதைத் தவிர சிறந்தவழி வேறில்லை ஏதுமில்லை என்பதை உணர்ந்தார். சென்னை மாநகரையே மரியாளின் மாசற்ற திருஇருதயத்திற்கு அர்ப்பணித்து நம்மையெல்லாம் காப்பாற்றுமாறு ஜெபித்தால் என்ன...?

"ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்"

திருப்பாடல்கள் 4: 3

சென்னை மறைமாவட்டத்தையும், மாகாணத்தையும் போரின் அழிவில் இருந்து காப்பாற்றினால், போர் முடிவுறும் காலம் பற்றி உணர்த்தினால், திருமறைப் பணிகளை பாதுகாத்து வழிநடத்தினால், நாங்கள் மரியாளின் மாசற்ற திருஇருதயத்திற்கு  கீழ்ப்பாக்கத்திலோ அல்லது சேத்துப்பட்டு பகுதியிலோ ஒரு ஆலயம் கட்டி நன்றி செலுத்துவதாக வேண்டிக் கொண்டார் பேராயர் லூயிஸ் மத்தியாஸ்..

1942 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாளில் சென்னை ஆர்மீனியன் தெருவில் உள்ள தூய மரியன்னை இணைப் பேராலயத்திலே திருப்பலி ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்த பேராயர் லூயிஸ் மத்தியாஸ் நமது எண்ணத்தை, மரியன்னையிடம் தாம் நேர்ந்து கொண்ட நேர்ச்சை திருத்தல வேண்டுதலை கூடியிருந்த மக்களுக்கு தெரிவித்தார். எப்போது போரின் தாக்குதலால் அழிந்து விடுவோமோ என்ற பயமுடன், இறைவனிடம் தஞ்சம் புகுந்து திருப்பலியில் பங்கேற்ற மக்களுக்கு பேராயரின் வார்த்தைகள் நம்பிக்கையூட்டின. விரைவில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. சென்னை மாகாணமும், சென்னை மறைமாவட்டமும் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகாமல் தப்பியது. 

மரியன்னைக்கு நேர்ந்து கொண்டதற்கு ஏற்ப நேர்ச்சைத் திருத்தலத்தை உருவாக்கும் முயற்சி துவங்கியது. இறைமக்களின் ஆதரவும், ஆலயத்திற்கான நிதி திரட்டும் பணியும் நியூ லீடர் பத்திரிக்கையின் வாயிலாக துவக்கப்பட்டன. அருட்பணி. மைக்கேல் மர்ரே SDB  அவர்கள் நிதியும் ஆதரவும் திரட்டும் பணியில் தளராமல் ஈடுபட்டு சென்னை மாகாணம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரது பெரும் முயற்சிக்கு மிகச்சிறிய பலன் தான் கிடைத்தது. தளராமல் அமெரிக்காவிற்கு சென்று நண்பர்கள், பேருபகாரிகளின் உதவிகளை நாடினார். 

நிதிபற்றாக்குறை, எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்காத நிலையில் தான் ஆர்மீனியன் தெருவிலுள்ள வளாகத்தில் நேர்ச்சைத் திருத்தலத்தைக் கட்டலாம் என்றும். அங்குள்ள கத்தோலிக்க நிலையம் எனப்படும் பெரிய கட்டிடத்தை பேராயர் இல்லமாக மாற்றலாம் என்றும் மாற்றுத் திட்டங்கள் விவாதிக்கப் பட்டன. 

இவ்வாறாக இக்கட்டான இந்த சூழ்நிலையில் தான் எவரும் எதிர்பாரா வண்ணமாக அடுத்தடுத்து மூன்று நிகழ்வுகள் அதிசயமாக அரங்கேறின. 

ஆர்மீனியன் தெருவிலுள்ள கத்தோலிக்க நிலையத்தை கட்டித் தந்த ஒப்பந்ததாரர் திரு. பட்டேல் அவர்களை அருட்பணி. டிசூசா அவர்கள் சந்தித்து, நேர்ச்சைத் திருத்தலம் பற்றிய திட்டத்தை கூறியபோது, திரு. பட்டேல் அவர்கள் கட்டிடப் பணியை எவ்வித இலாபமும் இல்லாமல் இறைவனின் மகிமைக்கு கட்டித் தருவதாக வாக்களித்தார். ஏராளமான பொருட்செலவை மிச்சப்படுத்தும் இந்த தாராள செயலை ஆச்சரியத்தோடு வரவேற்ற நிலையில், அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது... 

கத்தோலிக்க நிலையத்தை வடிவமைத்த திரு. டேவிஸ் அவர்கள் நேர்ச்சைத் திருத்தல கட்டிட வடிவமைப்பை எவ்வித கட்டணமும் இல்லாமல் செய்து தர முன்வந்தார். இவருடன் இணைந்த பங்குதாரர் திரு. பீட்டர்ஸன் அவர்களும் எவ்வித கட்டணமும் இன்றி திருத்தல வடிவமைப்பில் ஈடுபட்டு இந்திய கலைநுட்பமும், கத்தோலிக்க கிறிஸ்தவ வடிவமைப்பும் உள்ள வரைபடத்தை வெளிக்கொணர்ந்தனர். 

இவ்வேளையில் மூன்றாவது அதிசயமும் நிகழ்ந்தது... 

1951 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் நாளில், கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் திரு. ப்ருதோம் என்ற பிரெஞ்சு நாட்டவரை சந்திக்க பேராயர் லூயிஸ் மத்தியாஸ் அவர்களுக்கு அழைப்பு வந்தது. திரு. ப்ரூதோம் அவர்கள் 1901ம் ஆண்டு முதல் சென்னையிலே வசித்து வருபவர். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவரின் உடலின் இடது பாகம் பக்கவாதத்தால் செயலிழந்திருந்தது. 

பேராயர் லூயிஸ் மத்தியாஸ் அவர்கள் திரு. ப்ருதோம் தங்கியிருந்த பாண்டனாய் என்ற கீழ்பாக்கம் இல்லத்திலே அவரை சந்தித்த போது நேர்ச்சை திருத்தலம் பற்றிய திரு. ப்ரேதோம் பகிர்ந்து கொண்ட செய்தி பேராயரையே மெய்சிலிர்க்க வைத்தது. பேராயர் நெகிழ்ந்து போய் இறைவனுக்கு நன்றி கூறினார்.

திரு. ப்ருதோம் அவர்கள் தமது இல்லத்தோடு சேர்ந்த நிலத்தை நேர்ச்சைத் திருத்தலம் அமைக்க மனமுவந்து அளிப்பதாகவும், மரியாளின் மாசற்ற திருஇருதயத்த ஆலயம் கட்ட ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் காசோலையாக வழங்குவதாகவும் பேராயரிடம் தெரிவித்தார். 

தனது இல்லமான பாண்டனாய் இல்லத்தை ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட முதியவர்களின் நல்வாழ்வு இல்லமாக மாற்றப்படவும் விருப்பம் தெரிவித்தார். அந்த இல்லம் தான் மெர்சி ஹோம் என்று நூற்றுக்கணக்கான முதியவர்களின் கௌரவமான வாழ்வுக்கு தன்னலமற்ற தன்னிகரில்லா பணியாற்றி வருகிறது. தமது மற்றுமொரு கட்டிடமான அல்புவா -வை இறைப்பணியாளர் தங்கும் இல்லமாக மாற்றப்படவும் திரு. ப்ருதோம் விருப்பம் தெரிவித்தார். 

இவ்வாறு எவரும் எதிர்பாரா வண்ணமாக மூன்று ஆச்சரியமான நிகழ்வுகளும் நடந்தேற, மரியன்னையே இந்த நேர்ச்சைத் திருத்தலத்திற்கான முயற்சிகளை முன்னின்று வழிநடத்தி உதவுகிறார் என்று மறைமாவட்ட மக்கள் உணர ஆரம்பித்து திருத்தல கட்டுமானப் பணிகளில் முழுமூச்சாக தங்களையே ஈடுபடுத்திக் கொண்டனர். 

20.04.1952 அன்று நேர்ச்சைத் திருத்தலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

திருத்தலம் கட்டி முடிக்கப்பட்டு 06.12.1953 அன்று அர்ச்சித்து புனிதப் படுத்தப் பட்டது. இந்த பரிசுத்தமான நிகழ்வில் தமது நிலத்தை, இல்லத்தை திருத்தலத்திற்கு கொடுத்த திரு. ப்ருதோம் அவர்களும் பங்கேற்றார். 

1954 ஆம் ஆண்டு மரியாளின் மாசற்ற ஆண்டாக உலகம் முழுவதும் சிறப்பிக்கப்பட, 11.12.1954 அன்று பேராயர் திருத்தல நடுப்பீடத்தில் அருள் பொலிவோடு வீற்றிருக்கும் தூய பாத்திமா அன்னையின் சுரூபத்திற்கு மணிமகுடம் அணிவித்து, மறைமாவட்டத்தின் நேர்ச்சைக் காணிக்கையை நிறைவேற்றினார்.