புனித சின்னப்பர் ஆலயம், திருவொற்றியூர்
புனித சின்னப்பர் ஆலயம்
இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்
மாவட்டம்: சென்னை
மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: திருவொற்றியூர்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை: அருட்பணி. ராக் சின்னப்பா
உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. மார்ட்டின் இன்னையா, OMD
குடும்பங்கள்: 1274
அன்பியங்கள்: 41
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, காலை 08:00 மணி, மாலை 05:30 மணி
காலை 08:00 மணிக்கு மறைக்கல்வி மாணவர்களுக்கு சிறப்பு திருப்பலி
திங்கள் முதல் சனி வரை காலை 06:30 மணிக்கு திருப்பலி
செவ்வாய் முதல் சனி வரை மாலை 06:00 மணிக்கு திருப்பலி
முதல் வெள்ளி மாலை 06:00 மணிக்கு திருப்பலி நற்கருணை ஆசீர்
முதல் சனிக்கிழமை தூய ஆரோக்கிய அன்னை நினைவு. மாலை 06:00 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு திருப்பலி, தேர்பவனி, சிறப்பு ஆசீர்
ஒவ்வொரு மாதத்தின் 25-ம் தேதி தூய பவுலடியார் நினைவு தினம். மாலை 06:00 மணிக்கு தூய பவுலடியார் பிரார்த்தனை, திருப்பலி, நற்கருணை ஆசீர்
திருவிழா: ஜனவரி 25-ம் தேதி
வழித்தடம்:
பாரிஸ் -திருவொற்றியூர்
1 series bus, 101, 56
????Location map:
https://g.co/kgs/8wczf2
வரலாறு:
சாதனைகள் இன்றி சரித்திரங்கள் இல்லை. புராணச் சிறப்பும், புராதனச் சிறப்பும், தொழில் சிறப்பும், வழுவாத வரலாற்றுச் சிறப்பும் மிக்க திரு ஒற்றியூரில், வங்கக் கடலோரம் அமைந்துள்ள கவின்மிகு காலடிப்பேட்டை பகுதியிலே, எழுந்திருக்கும் தூய பவுல் பங்குத்தளத்திற்கும் நீண்டதோர் வரலாறு உண்டு.
ஆலயத்திற்கான நிலம் கிடைக்கப்பெற்ற விதம்:
1950-களில் மணலி, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க.., வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கலாயின. வேலைவாய்ப்புகளைப் பெற்ற உழைக்கும் மக்கள் இப்பகுதிகளில் வந்து குடியேறியதால், திருவொற்றியூரும், அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளும் தொழில்நகராக முன்னேற்றம் காணத் தொடங்கின. இந்நிலையில், இப்பகுதிவாழ் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தாங்கள் வாழும் பகுதிக்கு மிக அருகிலேயே தேவாலயம் ஒன்றை அமைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாயினர்.
இவர்களின் ஆன்மீகத் தேவைக்கென, ஆலயம் ஒன்றின் அவசியம் உணரப்பட்டதால், 1956-ஆம் ஆண்டில் அதற்கான இடம் தேடிய நமது சென்னை-மயிலை பேராயமானது, சாத்தாங்காடு நெடுஞ்சாலையில், கிழக்கே சேஷாசல கிராமணித்தோட்ட தெருவுக்கும் (முன்பு கிழக்குப்பாட்டை என்றும், தெற்கு மாடவீதி என்றும் அழைக்கப்பட்டது), மேற்கே மேட்டுத் தெருவுக்கும் (முன்பு எல்லையம்மன் கோயில் தெரு) இடையே பெரியதோர் தலைவாயிலுடனும், நடுவிலே அழகான வீடு ஒன்றுடனும், சுமார் 900 மரங்கள் சூழ்ந்த எழில் கொஞ்சும் தோட்டம் ஒன்று அவர்களைக் கவர்ந்தது.
நிலத்தின் உரிமையாளர் திரு. T. M. முனுசாமி நாயக்கரை இதன்நிமித்தம் அணுகியபோது, அவ்விடத்தை விற்க, தனக்கு எண்ணமேதுமில்லை என்று அவர் சொல்லிவிட, விடாமுயற்சியுடன் அப்போதைய பேராயர் மேதகு லூயிஸ் மத்தியாஸ் ஆண்டகை அவரை தொடர்பு கொள்ள, தனது 4 ஏக்கர் நிலத்தில் பாதியான சுமார் 2 ஏக்கர் தெற்கு பகுதி நிலத்தை விற்க T. M. முனுசாமி நாயக்கர் ஒத்துக்கொண்டார். அதன்படி ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ஆனால், நிலத்தை விற்பனை பதிவு செய்யவிருந்த சிலநாட்களுக்கு முன்பாக, தோட்டத்தின் வடக்குப் பகுதியையும் தங்களுக்கு விற்றால் நலமாக இருக்கும் என்று பேராயமானது தனது விருப்பத்தைத் தெரிவிக்க, வடக்குப்பகுதியை விற்கும் எண்ணமில்லை என்று உரிமையாளர் சொல்ல, ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாம் என்ற அவரின் முடிவின்படி, பத்திரப் பதிவு நிறுத்தப்பட்டது..!
பேராயரின் தொடர் முயற்சியின் விளைவாக, நிலத்தை விற்பது குறித்து யோசிக்க உரிமையாளர் திரு. T.M முனுசாமி நாயக்கர் அவர்கள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கிடையில் திரு. T.M. முனுசாமி நாயக்கரின் மகன் திரு. T.M பக்தவத்சலம் அவர்கள், இந்த காலடிப்பேட்டை பகுதிக்கு, தேவாலயத்துடன் ஒரு பெரிய பள்ளிக்கூடம் தேவைப்படுவதால், ஆலயத்துடன் ஒரு பள்ளி அமைக்க, பேராயம் உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் மேற்கொண்டு யோசிப்போம், இல்லையென்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாம் என்று சொல்லிவிட, மீண்டும் ஒரு தடை எழுந்தது.
இப்படியான சூழலில், ஒருநாள் பகற்பொழுதில், பசியாறி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த திரு. T.M. முனுசாமி நாயக்கர் அவர்கள், தனது தோட்டத்தின் வடமேற்குப்பகுதியில் மிகப் பிரகாசமான பேரொளி ஒன்று இறங்கியதைக் கண்டு திடுக்கிட்டு விழித்துக்கொண்டார். இதைக்குறித்து ஆழமாக சிந்தித்த அவர், பேராயரின் அலுவலக நிர்வாகிகளிடம் ஆலயம் அமைப்பதாக இருந்தால் அதை, எங்கு கட்டுவீர்கள்? எனக் கேட்க..! அவர்களோ! தோட்டத்தில் பேரொளி இறங்கிய அதே வடமேற்கு பகுதியைச் சுட்டிக்காட்ட...!, ஆச்சர்யப்பட்டுப்போன திரு. T.M. முனுசாமி நாயக்கர் அவர்கள், இறைத்திட்டத்தின்படி, இறையருளினாலே இஃது நிகழ்ந்தது என்று உறுதியாய் நம்பி, இப்பொழுது ஆலயம் அமைந்துள்ள வடமேற்கு பகுதியுடன், தோட்டத்தின் வடபகுதியையும் சேர்த்து விற்க ஒப்புக்கொண்டார். அதன்படி ஒப்பந்தம் செய்யப்பட்டு, பத்திரப் பதிவும் முறையாக செய்யப்பட்டது. ஆலயம் கட்டுவதற்கான இடமும் கிடைத்தது.
ஆன்மீக வழிபாடுகளும், நற்கல்வியும் இப்பகுதிவாழ் மக்களுக்கு கிடைத்திட, தங்களின் நிலத்தினை (விலைக்கு) கொடுத்த திரு. T.M. முனுசாமி நாயக்கரின் குடும்பத்தினரை நன்றியோடு திருவொற்றியூர் இறைமக்கள் இவ்வேளையில் நினைவுக்கூர்கின்றனர்! இறைவன் அவர்களையும், அவர்களின் வழித்தோன்றல்களையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக.
ஆலயம் அமைவதற்கு முன் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்ட இடம்:
தூய பவுல் ஆலயமானது இந்த திருவொற்றியூர் பகுதியில் கட்டப்படுவதற்கு முன்னால், இறைமக்களின் ஆன்மீகத் தேவைகளை கவனித்து வந்தவர் அருட்பணி. மரிய செல்வம், SDB ஆவார். 1956-57-ல், தாங்கல் பகுதியில் சதானந்தப்புரம் என்ற இடத்தில் குடில் ஒன்றை அமைத்து திருப்பலி ஆற்றிவந்த அருட்பணி. மரியசெல்லம் அடிகளார், பணி உயர்வு பெற்று வேலூருக்குச் சென்றுவிட, அவரின் பணிகளை அருட்பணியாளர்கள் வெங்கோலா, ஜான் கொட்டாரம், மாத்யூ வெட்டிக்கல், ஜோசப் கோட்டூர் ஆகியோர் தொடர்ந்து ஆற்றி வந்தனர். நடைமுறை சிக்கல்கள் காரணமாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், ராஜாகடைப் பகுதியில் அமைந்திருந்த திரு. M. S. நாதன் என்ற பங்கின் மூத்த உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் திருப்பலியானது நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே 1957-ல் திரு. T.M. முனுசாமி நாயக்கரிடமிருந்து ஆலயத்திற்கென நிலம் வாங்கப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்நிலத்தில் ஒருபுறமாக, குடிலொன்று அமைக்கப்பட்டு திருப்பலி நடத்தப்பட்டது. பேராயர் லூயிஸ் மத்தியாஸ் ஆண்டகையின் ஆலோசனை, வழிக்காட்டல், இவற்றுடனும், அருட்பணி. ஜான் கொட்டாரம் அவர்களின் கண்காணிப்பிலும் பிரம்மாண்டமாக எழுந்த தூய பவுல் ஆலயமானது. 1961-ஆம் - ஆண்டு ஜனவரி திங்கள் 25-ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டு, திருவொற்றியூர் இறைச் சமூகத்திற்கென திறக்கப்பட்டது. இப்பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. ஜான் பிள்ளை வீட்டில் ஆவார்.
புதிய ஆலயம்:
ஆலயம் கட்டப்பட்டதன் பொன்விழா விழா நினைவாக புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 29.08.2008 அன்று சென்னை மயிலை பேராயர் மேதகு A. M. சின்னப்பா அவர்கள் அடிக்கல் படிவத்தை ஆசீர்வதிக்க, மீன்வளத்துறை அமைச்சர் திரு. K. P. P. சாமி அவர்கள் அடிக்கல் படிவத்தை திறந்து வைத்து, பொன்விழா ஆலயப் பணிகளை துவக்கி வைத்தார்.
26.11.2008 அன்று பழைய ஆலயத்தில் நன்றி திருப்பலி நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் மாதத்தில் பழைய ஆலயம் இடிக்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்பணி. இராயப்பா அடிகளாரின் அயராத முயற்சி மற்றும் வழிகாட்டுதலில், பங்கு மக்களின் தன்னலமற்ற உழைப்பு மற்றும் நிதியுதவியுடன் 153 அடி நீளம், 75 அடி அகலம் கொண்ட அழகிய பொன்விழா ஆலயம் கட்டப்பட்டு 25.01.2011 அன்று சென்னை மயிலை பேராயர் மேதகு சின்னப்பா, துணை ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் ஆகியோரால் அர்ச்சிக்கப்பட்டது. மீன்வளத்துறை அமைச்சர் திரு. K. P. P. சாமி அவர்கள் ஆலயத்தை திறந்து வைத்தார்.
Source : www.catholictamil.com
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.