திவ்விய பலி பூசையின் முடிவில் சொல்லப்படும் கிருபைதயாபத்து மந்திரம்
திவ்விய பலி பூசையின் முடிவில் சொல்லப்படும் கிருபைதயாபத்து மந்திரம்
கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க. எங்கள் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க. பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே.
சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
எங்கள் அடைக்கலமும் பலமுமாயிருக்கிற சர்வேசுரா, உம்மை நோக்கிக் கூப்பிடுகிற ஜனங்களின் பேரில் கிருபாநோக்கம் பாலித்தருளும். அன்றியும் மகத்துவம் பொருந்திய அமலோற்பவக் கன்னிகையும் தேவதாயாருமாகிய அர்ச். கன்னி மரியம்மாள், அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச். சூசையப்பர், உம்முடைய அப்போஸ்தலர்களாகிய அர்ச். இராயப்பர், அர்ச். சின்னப்பர் முதலிய சகல அர்ச்சியசிஷ்டவர்களின் மன்றாட்டுகளுக்குத் தேவரீர் திருவுளமிரங்கி, பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், எங்கள் தாயாகிய பரிசுத்த திருச்சபை சுயாதீனம் பெற்றுத் தழைத்தோங்கும் படியாகவும் நாங்கள் ஒப்புக்கொடுக்கிற ஜெபங்களைக் கிருபையாய்க் கேட்டருளும் சுவாமி. இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பெயரால் தந்தருளும்.
ஆமென்.
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.