புனித தோமையார் ஆலயம், சின்னமலை
புனித தோமையார் ஆலயம், புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்
இடம் : சின்னமலை, சென்னை
மாவட்டம் : சென்னை
மறை மாவட்டம் : சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்
நிலை : திருத்தலம்
கிளைகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், கோட்டூர்புரம்
2. புனித செபஸ்தியார் ஆலயம், ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை )
பங்குத்தந்தை : அருட்தந்தை P. J லாரன்ஸ் ராஜ்
இணை பங்குத்தந்தையர்கள் :
அருட்தந்தை மரிய செபஸ்டின்
அருட்தந்தை ரிச்சி வின்சென்ட்
குடும்பங்கள் : 1100
அன்பியங்கள் : 40
ஞாயிறு திருப்பலி :
காலை 06.15 மற்றும் மாலை 06.30 மணிக்கும் (English)
காலை 08.00 மணி, காலை 11.30 மணி, மாலை 05. 00 மணிக்கும் தமிழில் திருப்பலி
Sunday Holy mass Korean language : 10.00 am
வார நாட்களில் : காலை 06.00 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி (English)
காலை 11.30 மணிக்கு திருப்பலி (தமிழ் )
மாலை 06.00 மணிக்கு செபமாலை, ஆராதனை, திருப்பலி (தமிழ்)
திருவிழா : ஈஸ்டர் -க்கு பின்வரும் நான்காவது ஞாயிறு அன்னையின் பெருவிழா. திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம், சின்னமலை வரலாறு :
சின்னமலை (Little Mount) என்றழைக்கப்படும் புனித தோமையார் குன்று, சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான, பாரம்பரியமும் சரித்திர பின்னணியும் கொண்ட புனித தலமாகும்.
உலகின் எத்திசையிலிருந்தும் திருப்பயணிகள் இந்திய திருநாட்டின் பாதுகாவலராம் புனித தோமையாரின் கால் பதிந்த, இரத்தம் தோய்ந்த, நேசித்த, இந்த மண்ணைக் கண்டு பரவசமடைகிறார்கள் என்றால் மிகையல்ல.
புனித தோமையாரின் கல்லறை அமைந்துள்ள சாந்தோம் பேராலயத்திற்கும், உயிர் துறந்த தோமையார் மலைக்கும் இடைப்பட்ட பகுதியான சின்னமலையில் தான் புனித தோமையாரின் குன்று அமைந்துள்ளது.
இங்குள்ள குகையில் தங்கியிருந்த புனித தோமையார் மக்களுக்கு நற்செய்தியை போதித்து, பல புதுமைகளைப் புரிந்தார். இங்கிருந்து தான் தமிழக மண்ணில் கிறிஸ்தவ விசுவாசம் பிறப்பெடுத்தது.
சென்னை மாநகரின் மத்திய பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில், அடையாறு நதி செல்லும் சைதாப்பேட்டைக்கும், ஆளுநர் மாளிகைக்கும் நடுவில் வரலாற்று சான்றுகளுடன் கூடிய சின்னமலை திருத்தலம், தன்னுள்ளே வீரம் பொதிந்து, புனித தோமையாரின் விழுமியங்களை மனுக்குலத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
வரலாற்று பாரம்பரிய சுவடுகளின்படி கி.பி 68 ம் ஆண்டு புனித தோமையார் தமிழகத்தின் இப்பகுதிகளில் கால் பதித்து மறைசாட்சியாக மரித்தார் என நம்பப்படுகிறது. இதை முதலாம் நூற்றாண்டை சார்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் கி.பி 1763 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தப்படி ஆற்காடு நவாப் தன்னிடமிருந்து இப்பகுதிகளை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஜாகிர் என்ற நிலமளிப்பு முறைப்படி வழங்கினார்.
அதற்கு முன்னரே ஆலய நிர்வாகத்தினர் இந்த ஆலயத்தையும் அதைச் சுற்றியுள்ள பெரும்பான்மையான இடங்களையும் தன்னகத்தே வைத்திருந்தனர். இதைக் கருத்தில் கொண்ட அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் இராபர்ட் கிளைவ் பிரபு அவர்கள், அன்றைய மயிலை ஆயர் மேதகு ஜோஸ் டி பியடேட் அவர்களுக்கு இநத வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை அரசாங்க பதிவேடுகளின்படி உரிமை சாசனமாக வழங்கினார்.
இன்று வரை நாமெல்லோரும் அறிந்தபடியே இப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும், அன்று புனித தோமையார் இறை இயேசுவின் நற்சேய்தியை தன் கடின சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாது போதித்து வந்தார்.
ஒரு பரந்த நிலப்பகுதியும், சிறு மலைக்குன்றுமாய் தோற்றமளித்த, இந்த திருப்பயணிகளின் திருத்தலத்தில் கி.பி 1550 ஆம் ஆண்டு வரை ஆலயம் ஒன்று தோற்றுவிக்கப் படவில்லை.
கி.பி 1551 -ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் ஒரு சிற்றாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டது.
இந்த ஆலயம் போர்ச்சுகீசிய இயேசு சபை குருக்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இம்மலைக் குன்றின் மிக உயரிய கற்பாறையில் புனித தோமையார் செதுக்கிய கற்சிலுவையை மையமாகக் கொண்டு உயிர்த்த ஆண்டவருக்கு ஒரு சிற்றாலயம் கட்டினர்.
பாரம்பரியமும் மகிமையான மரபும் எடுத்துரைக்கும் உண்மைகள் :
இந்த புண்ணிய பூமியில் ஒரு அதிசய நீரூற்று இன்றும் வற்றாமல், இங்கு வரும் எண்ணற்ற மக்களுக்கு ஆசீரையும் உடல் நலத்தையும் தந்து கொண்டிருக்கிறது.
புனித தோமையார் தான் போதிக்கும் காலத்தில் ஆன்ம தாகம் தீர்க்க தன் கையிலிருந்த கோலால் இந்த பாறையை மோசேவைப் போன்று தட்டி நீர் சுரக்க, மக்களின் தாகம் தீர்த்தார்.
புனித தோமையாரின் 19 ஆம் நூற்றாண்டு நினைவாக, 1971 ஆம் ஆண்டு சென்னை - மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் மேதகு R. அருளப்பா ஆண்டகை அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்பட்ட அழகிய வட்ட வடிவ திருத்தல ஆலயம் இங்கு அமைந்துள்ளது. சிற்றாலத்தையும் வட்டக்கோயிலையும் ஒரு சிறிய பாதை இணைக்கிறது.
சுமார் இரண்டடி வாசலும், புனிதரால் செதுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு பெரிய கற்சிலுவையும் மிக நேர்த்தியாக அமைந்துள்ள ஒரு குகையும் ஆலயத்தின் கீழுள்ளது.
குகையின் தென் பகுதியிலுள்ள புனிதரின் கைத்தடமும், கால் தடமும் ஒரு சிறிய வழியும் அவர் இந்த குகையில் தங்கி, உலவி வாழ்ந்தார் என்பதை பறைசாற்றுகிறது.
பகைவரின் கையில் அகப்படாமல் இருக்க இந்த சிறிய வழியாகத் தான் தப்பித்து சென்றார்.
ஒவ்வொரு வருடமும் உயிர்ப்பு ஞாயிறுக்கு பின்வரும் நான்காவது ஞாயிறு, ஆரோக்கிய அன்னையின் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அண்டை மாவட்டங்களிலிருந்தும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் திருவிழாவைக் காண வருகை தருவார்கள்.
தனிச்சிறப்புகள்:
கி.பி 1551 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட மாதாவின் பெயர் கொண்ட சிற்றாலயம்.
புனித தோமையாரின் குகை
புனித தோமையாரின் திருப்பண்டம்
புனித லூக்காவால் வரையப்பட்ட அன்னை மரியாளின் திருவுருவம்.
மிகக் குறுகலானதும், பாறைகளாலும் ஆன குகையில் அவர் தப்பிச் சென்ற வழி.
போற்றுதலுக்குரிய புனிதரின் கைத்தடம்.
இரத்தம் கசிந்த திருச்சிலுவை.
அற்புத நீரூற்று.
குகையினுள் புனிதரின் கால்தடம்.
1971 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வட்டவடிவ ஆலயம்.
சிலுவைப்பாதை தலங்கள்.
புனித தோமையாரின் மறைபரப்பு பணிகள் :
இறைமகன் இயேசு தன் சீடர்களை பார்த்து நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஞானஸ்தானம் கொடுங்கள் என்றார். அதன்படியே சீடர்கள் ஒன்றுகூடி உலகெங்கும் சென்று கிறிஸ்தவத்தை அறிவிக்க முடிவு செய்தனர். அதில் புனித தோமையார் இந்தியாவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
புனித தோமையார் இன்றைய கேரளத்தின் கொடுங்கல்லூரில் கடல் மார்க்கமாக கி.பி 52 இல் வந்திறங்கியதாக சரித்திரம் கூறுகிறது. புனித தோமையார் சுமார் பதினேழு வருடங்கள் இந்தியாவில் போதித்துள்ளார்.( நான்கு வருடங்கள் சிந்துவிலும் ஆறு வருடங்கள் மலபாரிலும் ஏழு வருடங்கள் மைலாபூரிலும்)
இவர் மலபாரில் போதித்த போது அங்கு பிராமணர்கள் தண்ணீரை வான் நோக்கி தெளித்து பூஜை செய்வதை பார்த்தார். தானும் அவர்கள் அருகில் போய் தண்ணீரை வான் நோக்கி தெளித்து ஜெபித்தார். அப்போது அத்தண்ணீர் அந்தரத்தில் அப்படியே தொங்கிக்கொண்டே இருந்ததாம் இதை பார்த்த பிராமணர்கள் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறிஇருக்கிறார்கள். இதுதான் புனித தோமையர் செய்த முதல் அற்புதம்.
இதைத் தொடர்ந்து பலரை கிறிஸ்தவர்கள் ஆக்கியதோடு ஏழரை ஆலயங்களையும் நிறுவினார். அவைகள் ⛪கொடுங்கல்லூர், ⛪கொல்லம், ⛪நிரணம், ⛪நிலாக்கள், ⛪கொக்கமங்கலம், ⛪கொட்டக்கயல், ⛪பழையூர், ⛪திருவிதாங்கோடு அரப்பள்ளி.
புனித தோமையாரை குறித்து கேள்விப்பட்ட ராஜா அவரை சந்தித்து உமக்கு என்ன தொழில் தெரியும் என கேட்டார். தான் ஒரு தச்சன் எனவும் தன்னால் அரண்மனைகளை கட்ட முடியும் எனவும் கூறினார். இதைக் கேட்டு சந்தோஷ பட்ட ராஜா தனக்கு ஒரு அரண்மனை கட்டிதரும்படி கேட்கிறார். இதற்காக நிறைய பொன்னும் பொருளும் கொடுக்கிறார். ஆனால் புனித தோமையார் அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கிறார். சிறிது காலம் கழித்து ராஜா கேட்கும்போது அரண்மனை முடியும் தறுவாயில் உள்ளது என கூறுகிறார். ஆனால் ராஜாவிடம் பணிபுரிபவர் அவர் அரண்மனை எதுவும் கட்டவில்லை. மாறாக நாம் கேள்விப்படாத புதிய மதம் ஒன்றை போதித்து வருகிறார் என ராஜாவிடம் சொல்கின்றனர். இதைகேட்ட ராஜா மிகுந்த கோபம் கொண்டு அவரை அழைத்து எங்கே என் அரண்மனை என கேட்கிறார்? புனித தோமையாரோ வானை நோக்கி சொர்க்கத்திலே உமக்கு அரண்மனை கட்டியுள்ளேன், அதை நீர் இப்போது பார்க்க முடியாது. நீர் இறந்தால்தான் பார்க்கமுடியும் என் கூறுகிறார். இதைகேட்ட ராஜா மிகுந்த கோபம் கொண்டு அவரை சிறையில் அடைக்கிறான்.
அதன் அடுத்த நாளே ராஜாவின் சகோதரனான கட் மரணம் அடைகிறான். மிகவும் மனம் நொந்த ராஜா அதற்கான ஈமக்கிரியைகளை செய்கிறான். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவன் உயிர் திரும்ப வருகிறது. மிகவும் சந்தோசமடைந்த ராஜா அவனை கட்டியணக்கிறார். அப்போது ராஜாவின் சகோதரன் நீர் என்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறீர் என எனக்கு தெரியும். நான் எதைகேட்டாலும் நீர் தருவீர். நீர் சொர்க்கத்தில் கட்டிவைத்திருக்கும் அரண்மனையை விலைக்கு தரவேண்டும் என்கிறான். குழம்பிப்போன ராஜா இல்லாத ஒன்றை கேட்டால் எப்படி தருவேன் என்கிறான். அப்போது ராஜாவின் சகோதரன் இறந்த தன்னை வானதூதர்கள் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றதாகவும் அங்கு பல அழகிய அரண்மனைகளை காண்பித்ததாயும் அதில் மிகவும் அழகுடைய அரண்மனையை நான் கேட்டபோது அது கோண்டபருஸ் ராஜாவிற்கு சொந்தமானது உமக்கு தரமுடியாது என்றனர். நானோ அதை விலைக்கு வாங்கவேண்டும் என்றேன். அதனால் தான் என்னை இங்கே திரும்ப அனுப்பினார்கள் என்றான். அப்போது தான் புனித தோமையாரை ராஜா விடுதலை செய்து தன் சகோதரனுக்கும் அதுமாதிரி செய்ய சொல்கிறான். இதன் பின்னர் ராஜாவும் அவன் சகோதரரும் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள்.
மைலாப்பூரில் புனித தோமையார்
மலபார் கடற்கரையிலிருந்து மயிலைப்புரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மயிலாப்பூரான பழைய சென்னை கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த இராஜா மகாதேவன், தோமையாரை வரவேற்றான் மன்னனின் ஆதரவுடன் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தனது போதனைகளை தொடங்கினார். புனிதரின் போதனையையும் புதுமையையும் கண்டு மக்கள் அவர் பின்னால் போவதையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதையும் கண்டு இராஜா மகாதேவனும் அவனது ஆட்களும் புனிதத் தோமையாரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தனர். மன்னனும் அவனது ஆட்களும் வேவு பார்ப்பதை கண்ட புனித தோமையார் சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்ன மலைக் குகையில் மறைவாகத் தங்கிக் கொண்டு மக்கள் மத்தியில் வேதம் போதிக்க மட்டும் வெளியில் வந்தார். புனித தோமையார் சின்னமலை குகையில்தான் இருக்கிறார் எனத் தெரிந்த மன்னரின் ஆட்கள் மலைக்குள் நுழைய மன்னரின் ஆட்களில் ஒருவன் ஈட்டியால் புனித தோமாவின் முதுகில் குத்த அவர் உயிர் துறந்தார்.
கி.பி. 72ல் வேதசாட்சியாக மரணமடைந்த புனித தோமையாரின் திருவுடல் மயிலாப்பூர் கடற்கரையில் அவரே கட்டிய ஆலயத்தில் புதைக்கப்பட்டது. புனித தோமையார் புதைக்கப்பட்ட இடத்தில் வானுயர எழுந்த பேராலயம் தான் புனித சாந்தோம் பேராலயம்.
தோமையார் கொல்லப்பட்ட நாளில் 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்தியாவின் அப்போஸ்தலர் என அழைக்கப்படும் தோமையாரை கௌரவிக்கும் படியாக இந்தியா இரண்டுமுறை அவருடைய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது (1964 மட்டும் 1973) .
வழித்தடம் :
சென்னையின் பிற பகுதிகளில் இருந்து சின்னமலை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகள்.
இவ்வாறு பல்வேறு வரலாற்று சிறப்புகளையும், புனித தோமையார் வாழ்ந்து உயிர்நீத்த இடமுமான இத்திருத்தலம், தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை P. J லாரன்ஸ் ராஜ் அவர்கள் இத் தலத்திருச்சபை மக்களை ஒருங்கிணைத்து, வழிகாட்டி, பல வளர்ச்சி திட்டங்களையும், திருத்தலத்தின் புகழை உலகறியச் செய்யும் விதமாக பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சின்னமலை வாருங்கள்..! சிந்தை மகிழ்ந்து செல்லுங்கள்..!
Source : www.catholictamil.com
Comments
Leave a comment
Your name and email address will not be stored in the browser and your email will not be published.